‘ஆடுகளம்' கிஷோர் நடிப்பில் ‘ராஜாக்கு ராஜாடா'
தென்னிந்திய திரையுலகில் திறமையான நடிகர்களில் ஒருவர், ‘ஆடுகளம்' கிஷோர். இவர் நடிக்கும் புதிய படத்துக்கு ‘ராஜாக்கு ராஜாடா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள படம்.
தந்தை-மகள் பாசப்பிணைப்பை சுற்றி கதை பின்னப்பட்டு உள்ளது. ஒரு மகளின் ஆசை, அவளது பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி எப்படியெல்லாம் மாறுகிறது? என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது? என்பதை கதை சித்தரிக்கிறது.
அதைத்தொடர்ந்து நடக்கும் உணர்வுக் குவியலான சம்பவங்களில், பார்வையாளர்கள் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வார்கள்.
பிரம்மா ஜி இயக்கத்தில் தேசியவிருது பெற்ற ‘குற்றம் கடிதல்' படத்துக்கு இணை இயக்குனராகவும், பாடலாசிரியராக வும் பணியாற்றியவரும், ஜோதிகா நடித்த ‘மகளிர் மட்டும்' படத் தின் திரைக்கதையில் உதவியாளராக பணியாற்றியவருமான திரவ் இந்த படத்தை இயக்குகிறார். அவர் கூறியதாவது:-
“அன்பு மட்டும் அந்தம் தேடும் என்ற பழமொழிக்கு ஏற்ப, இந்தப் படம் உணர்ச்சிகரமான மற்றும் அழுத்தமான படமாக இருக்கும். படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் தங்கள் வாழ்வின் பிரதிபலிப்புகளை உணர்வார்கள்.
மாறுபட்ட அழுத்தமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வரும் கிஷோர், ஒரு குடும்பத் தலைவராக உணர்ச்சி களைக் கையாளும் பாத்திரத்தில், சாதாரண மனிதனின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு மாறுபட்ட தோற்றத்தில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். அவருடன் சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியன், தனன்யா, யஷ்வந்த், மணிகண்டன், கண்ணன் பாரதி உட்பட பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கிறார்கள். சங்கர் ரங்கராஜன் இசையமைக்கிறார்.”
இவ்வாறு அவர் கூறினார்.