காதலர் தினத்தில் மோதும் படங்கள்
விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்களை காதலர் தினத்தில் வெளியிட திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
கொரோனாவால் முடங்கிய பெரிய நடிகர்கள் படங்களின் படப்பிடிப்புகள் வேகவேகமாக முடிந்து தற்போது அடுத்தடுத்து திரைக்கு வந்த வண்ணம் உள்ளன. இந்தநிலையில் விஜய்சேதுபதி நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல், சிவகார்த்திகேயனின் `டான்' ஆகிய 2 படங்களையும் பிப்ரவரி மாதம் காதலர் தினத்தில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.
ஏற்கனவே 2016-ல் விஜய்சேதுபதியின் றெக்க, சிவகார்த்திகேயனின் `ரெமோ' ஆகிய 2 படங்களும் ஒரே நாளில் மோதின. 6 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் இருவர் படங்களும் மோத வருகின்றன. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்த `டாக்டர்' படம் எந்த பெரிய படங்களும் போட்டிக்கு வராத நிலையில் தனித்து வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படம் ரூ.100 கோடி வரை வசூல் பார்த்ததாக கூறப்பட்டது.
விஜய்சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார். இதில் நாயகிகளாக நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர். `டான்' படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கி உள்ளார். நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.