தயாரிப்பாளரை பற்றி கவலைப்படாமல் ‘பட விழாக்களுக்கு வராத கதாநாயகிகள்’ - டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கடும் தாக்கு
டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தனது 79-வது வயதில், 71-வது படைப்பாக, ‘நான் கடவுள் இல்லை’ என்ற படத்தை டைரக்டு செய்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. அதில் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
“இங்கே எஸ்.தாணு, சேவியர் பிரிட்டோ, விஜய் ஆண்டனி, சமுத்திரக்கனி, டைரக்டர்கள் ராஜேஷ், பொன்ராம், நடிகைகள் இனியா, சாக்சி அகர்வால் போன்றவர்கள் வந்து இருக்கிறார்கள். சில நடிகைகள் தயாரிப்பாளர்கள் பற்றி கவலைப்படுவதில்லை. படத்தில் நடிப்பதோடு சரி. டப்பிங் பேசவோ, படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கோ வருவதில்லை. பட விழாக்களுக்கும் வருவதில்லை. இது ஒரு மோசமான பழக்கம்.
என் படத்தின் கதாநாயகிகள் இனியாவும், சாக்சி அகர்வாலும் அப்படிப்பட்டவர்கள் அல்ல. ராஜேஷ், பொன்ராம் இருவரும் என் மாணவர்கள் என்று சொல்லிக்கொள்வதில், மகிழ்ச்சி. என்னிடம் உதவியாளர்களாக வருபவர்கள் தங்களுக்கு திறமை இல்லை என்று சொல்வார்கள். நேரத்தை மதித்து நடந்து கொள்ளுங்கள். நான் உங்களை திறமைசாலிகளாக உருவாக்கி காட்டுகிறேன் என்று நான் சொல்வேன். அதையே இப்போதும் சொல்கிறேன்.”
இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார்.