புகழ் பெற்ற நடன இயக்குனர்: சரோஜ்கான் மாரடைப்பால் மரணம்
இந்தி திரைப்பட நடன இயக்குனர் சரோஜ்கான் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
புகழ் பெற்ற இந்தி திரைப்பட நடன இயக்குனர் சரோஜ்கான் மூச்சு திணறல் காரணமாக மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் பரவியது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது. இந்த நிலையில் நேற்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு சரோஜ்கான் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71. சிறுவயதில் திரைப்படங்களில் நடித்த சரோஜ்கான் தனது 13-வது வயதில் 41 வயது நடன இயக்குனர் சோஹன்லாலை திருமணம் செய்து கொண்டார்.
அவரிடம் நடன, கற்று நடன உதவி இயக்குனரானார். 1974-ல் ‘கீதா மேரா நாம்’ என்ற இந்தி படத்தின் மூலம் நடன இயக்குனர் ஆனார். 1987-ல் வெளியான மிஸ்டர் இந்தியா படத்தில் இடம் பெற்ற ஹவா ஹவா பாடலுக்கு நடனம் அமைத்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.
1980 மற்றும் 90களில் இந்தி பட உலகில் புகழ்பெற்ற நடன இயக்குனராக வலம் வந்தார்.40 வருடங்களாக நடன இயக்குனராக பணியாற்றி வந்தார்.
தேஜாப் படத்தில் இடம்பெற்ற ஏக் தோ தீன் பாடல் காட்சியில் மாதுரி தீட்சித் ஆடிய நடனம் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது. இந்த பாடலுக்கு சரோஜ்கான்தான் நடனம் அமைத்து இருந்தார், தாக் தாக், தம்மா தம்மா உள்பட பல பாடல்கள் இவரது நடனத்தில் புகழ் பெற்றன. நடிகை மாதுரி தீட்சித், மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஆகியோரின் பல படங்களுக்கு இவர்தான் நடன இயக்குனர்.
தமிழில் தாய்வீடு, இருவர் ஆகிய படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். 2 ஆயிரம் பாடல்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார். 3 முறை தேசிய விருது பெற்றுள்ளார். சரோஜ்கான் மறைவுக்கு நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்தனர்.