நிசப்தம் படப்பிடிப்பின் கடைசி நாள்; அஞ்சலி வெளியிட்ட புகைப்படம்
நிசப்தம் படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கில் எடுத்த போட்டோவை, நடிகை அஞ்சலி வெளியிட்டுள்ளார்.
சென்னை,
நடிகை அனுஷ்கா ஷெட்டி கடைசியாக பாகமதி திரைப்படம் வெளியாகியிருந்தது. மேலும், தெலுங்கில் வெளியான சிரஞ்சிவியின் ‘சாய் ரா' திரைப்படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். அதையடுத்து தற்போது ‘சைலன்ஸ்' திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார்.
ஹேமந்த் மதுகுமார் இயக்கத்தில் அனுஷ்கா ஷெட்டி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘நிசப்தம்'. தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிகளிலும் தயாராகிவரும் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கு ‘சைலன்ஸ்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை அனுஷ்கா, மாதவனின் ‘இரண்டு' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இப்படத்தை விஷவ பிரசாத் மற்றும் கோனா வெங்கட் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் மேலும், மைக்கேல் மேட்சன், அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். த்ரில்லர் கதைக்களம் கொண்ட இப்படத்துக்குக் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில் கடந்த வருடமே இந்த படம் வெளியாகும் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. சில காரணங்களால் ரிலீஸ் ஆகவில்லை. தற்போது லாக்டவுன் காரணமாகத் சைலன்ஸ் தள்ளிப் போயுள்ளது.
இந்நிலையில், நடிகை அஞ்சலி தற்போது இன்ஸ்டாகிராமில் இந்தப் படத்தின் கடைசி நாளில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை, த்ரோபேக் போடோவாக வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் சியாட்டில் நகரில் எடுக்கப்பட்ட அந்த போட்டோவில் நடிகை அனுஷ்கா மற்றும் போலீஸ்காரர்களாக நடித்தவர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் அஞ்சலி, மஹா என்ற டிடெக்டிவாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.