படப்பிடிப்பில் விபத்து ; நடிகை மஞ்சு வாரியர் காயம்
வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தில் தனுசுடன் ஜோடி சேர்ந்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான மஞ்சு வாரியர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
சதுர்முகம் என்ற மலையாள படத்தில் தற்போது நடிக்கிறார். திகில் படமாக தயாராகிறது. இதில் மஞ்சுவாரியர் தொழில் அதிபர் கதாபாத்திரத்தில் வருகிறார்.
இதன் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. அங்கு மஞ்சுவாரியர் வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சிகளை படமாக்கினர். ஆபத்தான சண்டை காட்சிகள் என்பதால் அவருக்கு பதிலாக டூப் நடிகையை பயன்படுத்தலாம் என்று ஸ்டண்ட் மாஸ்டர்கள் ஆலோசனை கூறினர்.
அதை மஞ்சுவாரியர் ஏற்காமல் தானே சண்டை காட்சியில் நடித்தார். பாதுகாப்புக்கு கயிறு கட்டி இருந்தனர். அதையும் மீறி மேலே இருந்து கீழே குதித்தபோது மஞ்சுவாரியருக்கு பலமான அடிபட்டது. காலிலும் இடுப்பு பகுதியிலும் காயங்கள் ஏற்பட்டன. வலியால் துடித்தார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. வருகிற 12-ந்தேதி மஞ்சுவாரியர் நடன நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதாக இருந்தது. அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு மஞ்சுவாரியர் எழுதி உள்ள கடிதத்தில் டாக்டர்கள் எனது காலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று தெரிவித்து உள்ளதால் என்னால் கலந்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். இதனால் நடன நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளனர்.