‘தர்பார்’ படத்துக்கு வெளிநாட்டு கலைஞர்கள்: இசையமைப்பாளர் அனிருத் மீது நடவடிக்கை இசை கலைஞர்கள் சங்கம் அறிவிப்பு

ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ படத்தின் பின்னணி இசை சேர்ப்பு பணிக்கு வெளிநாட்டு கலைஞர்களை பயன்படுத்தியதற்காக, இசையமைப்பாளர் அனிருத்துக்கு இசை கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து இருக்கிறது. இதற்காக, அனிருத் மீது நடவடிக்கை எடுப்போம் என்று இசை கலைஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Update: 2020-01-04 23:00 GMT
சென்னை,

திரைப்பட இசை கலைஞர்கள் சங்க தலைவரும், இசையமைப்பாளருமான தினா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். அந்த படத்துக்கு பின்னணி இசை சேர்ப்பு வேலை நடைபெற்று வருகிறது. அதில், இங்கே உள்ள இசை கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. வெளிநாட்டு இசை கலைஞர்களுக்கே வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இது, கடந்த 45 நாட்களுக்கு முன்பு அனிருத்தின் கவனத்துக்கு கொண்டு போகப்பட்டது.

“நான் பார்க்கிறேன்” என்று மட்டும் அனிருத் கூறினார். அதன் பிறகும் அவருடைய இசை சேர்ப்பு பணிக்கு இங்குள்ள இசை கலைஞர்களை அவர் பயன்படுத்தவில்லை. அதைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக அவருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதற்கும் அனிருத்திடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

கண் துடைப்பு

‘தர்பார்’ படத்தின் பின்னணி இசை சேர்ப்பு பணி, 3 நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் தொடங்கியது. அதில் கண் துடைப்பு போல் இங்குள்ள கலைஞர்கள் 5 பேர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. வெளிநாட்டு கலைஞர்கள் 50 பேர்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இதுபற்றி கேட்டதற்கு, “முடியலை...சாரி” என்று மட்டும் அனிருத் கூறினார்.

திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம், 50 வருட பாரம்பரியம் கொண்டது. இந்த சங்கத்தில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்ற மிகப்பெரிய இசையமைப்பாளர்கள் உள்பட 1,200 பேர் உறுப்பினர் களாக இருக்கிறார்கள். அனிருத்தும் உறுப்பினராக இருக்கிறார். 23 யூனியன்களை கொண்ட தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தில் (‘பெப்சி’யில்) இசைக்கலைஞர்கள் சங்கமும் அங்கம் வகிக்கிறது.

நீக்க நடவடிக்கை

அனிருத்தின் பொறுப்பற்ற பதில்கள், சங்கத்தை அவமதித்ததாக கருதப்படுகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்க செயற்குழு கூட்டத்தில் வற்புறுத்தப்பட்டது. அதன்படி, சங்க சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படாத அனிருத்தை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்