பூட்டிய வீட்டுக்குள் நுழைந்து பேயை பற்றி ஆராய்ச்சி செய்யும் கதாநாயகி
இப்போதெல்லாம் கதாநாயகன் இல்லாமல், கதாநாயகி மட்டும் நடிக்கும் படங்கள் வரத் தொடங்கி விட்டன. அந்த வரிசையில், ‘கைலா’ என்ற படமும் தயாராகி இருக்கிறது.
‘கைலா’ படத்தில் கதாநாயகன் இல்லை. கதாநாயகியாக தானா நாயுடு அறிமுகமாகிறார். இவருடன் கவுசல்யா, அன்பாலயா பிரபாகரன் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சர்வதேச கராத்தே பயிற்சியாளர் பாஸ்கர் சீனுவாசன் கதை-திரைக்கதை-வசனம்-தயாரிப்பு-டைரக்ஷன் பொறுப்புகளை ஏற்றார்.. ‘கைலா’ படத்தை பற்றி அவர் கூறுகிறார்:-
“இது, முழுக்க முழுக்க ஒரு பேய் படம். உலகம் முழுவதும் இன்று வரை பேய் என்றால் ஒருவிதமான பயம் இருக்கத்தான் செய்கிறது. உலகில் ஆவிகள் இருக்கிறதா, அப்படி இருந்தாலும் அந்த ஆன்மாக்கள் பழிவாங்குமா? இந்த கேள்விகளுக்கு விஞ்ஞானப்பூர்வமான பதில்கள் இல்லை. என்றாலும் அமானுஷ்யமான சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதுதான் இந்த ‘கைலா.’இதில், தானா நாயுடு எழுத்தாளராக நடித்துள்ளார்.
இவர் பேயை பற்றி ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்து, அதற்கான தேடுதலில் இறங்குகிறார். 2 தற்கொலைகளும், 4 கொலைகளும் நடந்த ஒரு வீடு பூட்டியே கிடக்கிறது. அந்த மர்மமான வீட்டுக்குள் தானா நாயுடு சென்று ஆராய்ச்சி செய்கிறார். அவருக்கு ஏற்படும் பாதிப்புகளை கதை சித்தரிக்கிறது. வழக்கமான பேய் படமாக இல்லாமல், விஞ்ஞானப்பூர்வமான பேய் படமாக, ‘கைலா’ தயாராகி இருக்கிறது. படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.”