'100 சதவீதம் உலகக்கோப்பை நமதே' - நடிகர் ரஜினிகாந்த்
நேற்றைய போட்டியின் வெற்றிக்கு ஷமி தான் காரணம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்த போட்டியை காண்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் கடந்த நவம்பர் 14-ந் தேதி மும்பை புறப்பட்டு சென்றார். அங்கு பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா உடன் அமர்ந்து போட்டியை கண்டுகளித்தார்.
இந்நிலையில் இன்று மாலை சென்னை திரும்பிய ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் இந்தியா - நியூசிலாந்து போட்டி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், 'முதலில் கொஞ்சம் டென்ஷனாக இருந்தேன், நியூசிலாந்து வீரர்கள் தொடர்ந்து விக்கெட்களை இழந்த பிறகு தான் கொஞ்சம் டென்ஷன் குறைந்தது. 100 சதவீதம் உலகக்கோப்பை நமதே' என்று கூறினார்.
மேலும் அவரிடம் நேற்றைய போட்டியின் வெற்றிக்கு யார் காரணம் என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், 'நேற்றைய போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 100 சதவீதம் ஷமி தான் காரணம்', என்று தெரிவித்தார்.