கல்லூரி படிப்போடு சேர்த்து டிப்ளமோ படிக்கலாம்...!

பொறியியல் படிக்க வாய்ப்பு கிடைக்காதவர்கள், உடனடி வேலை வாய்ப்பைத் தேடுபவர்கள், சுயதொழில் ஆர்வமுள்ளவர்கள் எனப் பல தரப்பு தேடல் உள்ளவர்களுக்குக் கைகொடுப்பவை டிப்ளமோ படிப்புகள். பொறியியல் படிப்பைவிட செலவு குறைவு.;

Update:2023-06-04 21:23 IST

அதே நேரம் சுமாரான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களும் படிக்கலாம். பணி அனுபவத்தால் பொறியியல் பட்டதாரிகளுக்கு இணையாக ஊதியம் பெறலாம், தேவையென்றால் பிற்பாடு நேரடியாகவோ பணியில் இருந்தவாறோ பொறியியல் பட்டம் பெறலாம் எனப் பல்வேறு காரணங்களால் பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்பவர்கள் அதிகம்.

* பாலிடெக்னிக் தவிர்த்த டிப்ளமோ

பாலிடெக்னிக் பாடப்பிரிவுகள் பரவலாக நாம் அறிந்தவை. இவை தவிர்த்தும் டிப்ளமோ படிப்புகள் ஏராளம் உண்டு. கலை அறிவியல் அல்லது பொறியியல் எனப் பட்டப் படிப்புகள் எதுவானாலும், அவற்றைப் படிக்கும்போதே இணையாக இன்னொரு டிப்ளமோ படிப்பை மேற்கொள்வது நல்லது.

பிரபல கல்லூரிகள் தங்கள் வளாகத்திலேயே அவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றன. பெரும்பாலும் அந்தப் படிப்புகள் கணினி, மல்டி மீடியா சார்ந்தவையாகவும் முதன்மை பட்டப் படிப்புக்குக் கைகொடுக்கும் வகையிலும் அமைந்திருக்கும். இவை தவிர்த்தும் பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ பயில வாய்ப்புள்ள பயனுள்ள டிப்ளமோ படிப்புகள் ஏராளமாக உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்...

* மருத்துவத் துறை டிப்ளமோ

நர்சிங் டிகிரி படிக்க வாய்ப்பில்லாதவர்கள், அந்தக் குறையை நர்சிங் டிப்ளமோ படிப்பதன் மூலம் நேர் செய்துகொள்ளலாம். டிப்ளமோவுக்குப் பரவலாக வேலைவாய்ப்பு உண்டு. இந்தத் தகுதியைக் கொண்டும் பின்னாளில் நர்சிங் பட்டம் பெற்றுத் தகுதியை உயர்த்திக்கொள்ளலாம். இந்த வகையில் உள்ளூர் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் பெரும் ஊதியத்தில் வேலைவாய்ப்பு உண்டு.

பார்மசிஸ்டுகள் எனப்படும் மருந்தாளுநர் படிப்பில் பட்டப் படிப்பு போன்றே டிப்ளமோவும் இணையான வேலைவாய்ப்பை வழங்குகிறது. மருந்துகளைச் சந்தைப்படுத்துதல், சுயமாக மருந்துக்கடை நிர்வகித்தல் ஆகியவற்றிற்கு டி.பார்ம் படிப்பு அவசியம்.

மருத்துவத் துறையில் சிறப்புப் பிரிவுகள் அதிகரித்துவரும் நிலையில், அவற்றை உள்ளடக்கிய கார்பரேட் மருத்துவமனைகள், பரிசோதனை-ஆராய்ச்சிக் கூடங்களில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு அதிக வாய்ப்பு உண்டு. ஒவ்வொரு சிறப்புப் பிரிவுக்கும் என பிரத்யேக டிப்ளமோ படிப்புகள் உண்டு. 'பாரா மெடிக்கல்' படிப்புகள், தொழில்நுட்ப உதவியாளர்கள் என 10-வது மற்றும் பிளஸ்-2 முடித்தவர்களுக்கான டிப்ளமோ படிப்புகள் இருக்கின்றன.

உதாரணத்துக்கு, சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் 20-க்கும் மேற்பட்ட டிப்ளமோ படிப்புகளை வழங்குகிறது. அதேபோல, கண் மருத்துவத் துறையில் 2 ஆண்டு டிப்ளமோ படிப்புகளிலும் சேரலாம். அரசு கண் மருத்துவமனைகள் மட்டுமன்றி தனியார் மருத்துவமனைகளும் இந்த டிப்ளமோ படிப்புகளை வழங்குகின்றன.

மாற்று மருத்துவத் துறையில் சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதம் ஆகியவற்றில் ஒன்று மற்றும் ஒன்றரை ஆண்டு டிப்ளமோ படிப்புகள் உண்டு.

* பொறியியலுக்கு இணையான டிப்ளமோ

இந்தப் பிரிவில் முதலிடத்தில் இருப்பது ஏரோநாட்டிக்கல், விவசாயப் பொறியியல் துறை டிப்ளமோ படிப்புகள். பிளஸ்-2 மதிப்பெண்கள், கல்லூரி நேர்முகத் தேர்வின் அடிப்படையில் இடம் கிடைக்கும். வட மாநிலக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கத் தயாராக உள்ளவர்களுக்கு உகந்தது. இந்த டிப்ளமோ படிப்புகளில் உட்பிரிவுகளும் உண்டு.

விசாலமாக வளர்ந்துவரும் இந்தத் துறை படிப்புகள் பொறியியல் பட்டதாரிகளுக்கு இணையாக ஊதியம் வழங்குபவை. இவற்றைப் போல ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங், கெமிக்கல், லெதர் டெக்னாலஜி டிப்ளமோ படிப்புகளும் வரவேற்பை பெற்றுவருகின்றன.

* முதுநிலை டிப்ளமோ படிப்புகள்

முழு நேரமாகவோ, மற்ற பட்டப் படிப்புகளுடன் இணையாகவோ டிப்ளமோ படிப்புகளை மேற்கொள்வதைவிடப் பிரபலமானவைபி.ஜி. டிப்ளமோ படிப்புகள். பணி சார்ந்து, ஆராய்ச்சி சார்ந்து குறிப்பிட்ட துறையில் கூர்நோக்கும் டிப்ளமோ படிப்புகள் இந்த ரகம்.

எனவே, அடிப்படை டிப்ளமோ அல்லது டிகிரி முடித்ததும் அத்துடன் திருப்தியடையாமல், கூடுதலாகத் தங்கள் துறை சார்ந்த சிறப்பு பி.ஜி. டிப்ளமோ படிப்பது நல்லது. உதாரணத்துக்கு இளநிலைப் பட்டதாரிகள் அந்தத் தகுதியை அடிப்படையாகக் கொண்டு மேலாண்மைத் துறை, பங்குச் சந்தை சார்ந்த டிப்ளமோ படிப்புகளை முடித்தவர்கள் ஐ.டி. துறையினருக்கு நிகராகச் சம்பாதிக்கிறார்கள்.

* மற்ற டிப்ளமோ படிப்புகள்

முதன்மை பட்டப் படிப்புக்குக் கைகொடுக்கும் வகையிலோ, தனியாகவோ ஏராளமான, சுவாரசியமான டிப்ளமோ படிப்புகள் உண்டு. அவற்றில் ஓரளவு பிரபலமான கேட்டரிங் மற்றும் ஓட்டல் மேனேஜ்மென்ட், சினிமா, தொலைக்காட்சி, தொழில்நுட்பத் துறை படிப்புகள், இசை, அயல் மொழி, நடனம், கலை சார்ந்த டிப்ளமோ படிப்புகள், பேஷன் டெக்னாலஜி, உள் அலங்காரம், டேட்டா என்ட்ரி, டெஸ்க் டாப் பப்ளிஷிங், வரவேற்பு அலுவலக நிர்வாகம், அலுவலக பராமரிப்பு, இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல், யோகா, மனநலம், வெப் டிசைனிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் போன்றவற்றைத் தேடிப் படிப்பது கல்லூரி பருவத்தைப் பயனுள்ளதாக்கும்.

பின்னாளில் பகுதிநேர வருமானமாகவோ, குறிப்பிட்ட துறை சார்ந்து எதிர்காலத்தைத் தீர்மானிக்கவோ இவை பெருமளவு உதவக்கூடும்

சமுதாயக் கல்லூரி டிப்ளமோ

10-வது மற்றும் பிளஸ்-2 முடித்தவர்களுக்கு எனப் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மத்திய மனித வளத்துறை நிதியுதவியின் கீழ் சமுதாயக் கல்லூரிகள் என்ற பெயரில் அடிப்படைத் தொழிற்பயிற்சி டிப்ளமோக்களை வழங்குகின்றன. எலக்ட்ரிக், எலெட்ரானிக் உபகரணங்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றைப் பழுது பார்த்தல், கம்ப்யூட்டர் படிப்புகள் ஆகியவை பல்வேறு பிரிவுகளின் கீழ் இடம்பெற்றிருக்கும்.

பின்தங்கிய பகுதியைச் சேர்ந்தவர்களின் நலனுக்கான இந்தத் தொழிற்பயிற்சிகள், யார் வேண்டுமானாலும் பகுதி நேரமாகப் பயில வாய்ப்புள்ளவை. சம்பாத்தியத்துக்கு மட்டுமல்ல, பயனுள்ள பொழுதுபோக்கு, உபயோகமுள்ள பயிற்சியும்கூட.

Tags:    

மேலும் செய்திகள்