குத்துச்சண்டையில் அசத்தும் மாணவன்..!
தன் வாழ்க்கையின் வலி-வேதனைகளையும் குத்துச்சண்டையினால் கிடைத்திருக்கும் புது வாழ்க்கை அனுபவங்களையும் அழகாக விவரித்தார், சாமுவேல்.
''சிறுவயதில் இருந்தே, பள்ளி விடுதிதான் என்னுடைய வீடு. இங்கிருக்கும், சக மாணவர்கள்தான், எனக்கான உலகம். முழு ஆண்டு தேர்வு விடுமுறையில்தான், அம்மா-அப்பாவை சந்திப்பேன். விடுதியில் வழங்கப்படும் உணவு, விடுதி வாழ்க்கை... இப்படியே வாழ்க்கையை கழித்த எனக்கு, குத்துச்சண்டை பயிற்சியும், போட்டிகளும் புது உலகிற்கான வாசலை திறந்துவிட்டன. நிஜமாகவே, வெளி உலகம், மிகவும் அழகானது'' என முதல் சந்திப்பிலேயே, தன் வாழ்க்கையின் வலி-வேதனைகளையும், குத்துச்சண்டையினால் கிடைத்திருக்கும் புது வாழ்க்கை அனுபவங்களையும் அழகாக விவரித்தார், சாமுவேல்.
அட...! நிறைய மாணவர்கள் விடுதியில் தங்கி படிக்க, சாமுவேலை நாம் சந்தித்ததில் ஒரு சிறப்பு காரணம் இருக்கிறது. இவர் நரிக்குறவ சமூகத்தை சேர்ந்தவர். அதுமட்டுமா...? மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டை கிராமத்தில் இயங்கும், சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளியில் 8-ம் வகுப்பு படித்துக்கொண்டே, குத்துச்சண்டை பயிற்சியும் பெறுகிறார்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் நிறைய தங்கப் பதக்கம் வென்றிருக்கும் சாமுவேல், சமீபத்தில் கூட கோவாவில் நடந்த 'நேஷனல் பெடரேஷன் கப் 2023' தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியிலும் தங்கம் வென்றிருக்கிறார். வெற்றியோடு தன்னுடைய விடுதிக்கு திரும்பியவரை, சந்தித்து பேசினோம்.
''என்னுடைய அம்மா-அப்பா, சென்னை மீஞ்சூரில் வசிக்கிறார்கள். நரிக்குறவ சமூக மேம்பாட்டிற்கு என நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை உணர்ந்து, என்னை இந்த பள்ளி விடுதியில் சேர்த்துவிட்டனர். 1-ம் வகுப்பில் இருந்து, இங்குதான் வளர்கிறேன். இங்கு உடற்பயிற்சி ஆசிரியராக செயல்படும் ஆசைத்தம்பிதான், எனக்கு குத்துச்சண்டை மீதான ஆர்வத்தை வளர்த்தவர். அவரது பயிற்சியில்தான் நிறைய குத்துச்சண்டை போட்டிகளை வென்றிருக்கிறேன்'' என்றவர், கல்வியிலும், குத்துச்சண்டையிலும் படுசுட்டியாக திகழ்கிறார்.
''இந்த விடுதியில், என்னை போன்ற 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவ சமூக மாணவர்கள் படிக்கிறார்கள். எங்கள் எல்லோருக்குமே, விளையாட்டுதான் சந்தோஷத்தை கொடுக்கும். உடற்கல்வி ஆசிரியர் ஆசைத்தம்பி, குத்துச்சண்டையுடன் ஓட்டப்பயிற்சியும், யோகா பயிற்சியும் கற்றுக்கொடுக்கிறார். இதில் பெரும்பாலான மாணவர்கள், குத்துச்சண்டையைதான் விரும்பி பயிற்சி பெறுகிறார்கள்.
சிறப்பான தற்காப்பு பயிற்சியாகவும், எதிர்காலத்தில் அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரும் கலையாகவும் இது இருக்கும்'' என்றவர், சிறுவயது முதலே, தீவிரமாக குத்துச்சண்டை பயிற்சி பெறுகிறார். குறிப்பாக, சமீபகாலமாக, இவரது பயிற்சியிலும், திறமையிலும் நல்ல முன்னேற்றம் இருப்பதாக கூறுகிறார், பயிற்சியாளர் ஆசைத்தம்பி. இதுதொடர்பாக அவர் பகிர்ந்து கொண்டவை....
''மாவட்ட போட்டிகளிலும், மாநில போட்டிகளிலும் பல முறை தங்கம் வென்றிருக்கிறான். இவனோடு சேர்த்து, மொத்தம் 20 நரிக்குறவ மாணவர்கள் குத்துச்சண்டையில் வெறித்தனமாக பயிற்சி பெறுகிறார்கள். இதில் சாமுவேலுக்குதான், கோவா போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதில் 14 வயதிற்குட்பட்டோருக்கான 38 கிலோ முதல் 40 கிலோ வரையிலான பிரிவில் பங்கேற்றான்.
ஆரம்ப சுற்றுக்களை வெகுசுலபமாக வென்றாலும், இறுதிப்போட்டி சவாலானதாக இருந்தது. கடினமான போட்டியாளராக கருதப்பட்ட தெலுங்கானா வீரருடன் சிறப்பாக மோதி, தமிழ்நாட்டிற்கு தங்கப்பதக்கம் வென்று கொடுத்தான். இந்த வெற்றி, இவனை போலவே பயிற்சி பெறும் மற்ற இளம் வீரர்களுக்கும் உத்வேகத்தை கொடுத்திருக்கிறது'' என்றவர், கோவா போட்டி அனுபவம், சாமுவேலுக்கு சுற்றுலா அனுபவமாக மாறிய கதையையும் கூறினார்.
''பொதுவாக போட்டிகளுக்கு கிளம்பும்போது, எல்லா வீரர்-வீராங்கனைகளுக்கும் மன அழுத்தம், பதற்றம் இருக்கும். ஆனால் சாமுவேல் எந்த போட்டிகளுக்கு கிளம்பினாலும், மிகவும் மகிழ்ச்சியான மனநிலையுடன் கிளம்புவான். ஏனெனில், விடுதிக்குள்ளாகவே வருடங்களை நகர்த்தி வரும் அவனுக்கு, போட்டிகளுக்கான பயணம் சுற்றுலா அனுபவமாக மாறிவிடுகிறது. ஒவ்வொரு பயண அனுபவத்தையும், ரசித்து மகிழ்வான். அப்படி, இம்முறை கோவா சென்ற பயணத்தையும் வெகுவாக ரசித்தான். மெட்ரோ ரெயில் பயணம், ஓட்டல்களில் விதவிதமான உணவு, புதுமையான சூழல், நீண்ட தூர பயணம்... என எல்லாவற்றையும் ரசித்தான்'' என்றார். இவரை தொடர்ந்து பேச ஆரம்பித்த சாமுவேல்...
''விடுதி நிர்வாகம், என்னை மிகவும் ஊக்கப்படுத்துகிறது. எங்களுக்கு தேவையானவற்றை செய்துகொடுத்து, எங்களது வாழ்க்கையை மேம்படுத்த பல வழிகளில் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். எங்களுடைய பெற்றோரும், எங்களை சமூக அடையாளங்களோடு பார்க்க ஆவலாக இருக்கிறார்கள். அவர்களது ஆசையை நிறைவேற்றும் முயற்சியில்தான் உழைத்துக்கொண்டிருக்கிறோம். இதுபோல நிறைய போட்டிகளில் கலந்துகொண்டு, நிறைய பதக்கங்களை வென்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க ஆவலாக இருக்கிறேன். அதுதான் என்னுடைய அம்மா வசந்தி மற்றும் அப்பா ரமேஷ் மற்றும் நான் பயிலும் பள்ளி நிர்வாகத்துக்கும் நான் கொடுக்கும் பரிசாக இருக்கும்'' என்ற புன்னகை வரிகளுடன் விடைபெற்றார்.