'தங்கம்' குவிக்கும் மாணவன்

சேலத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவர் யஷ்வந்த் சரவணன், ஏராளமான போட்டிகளில் கலந்து கொண்டு கோப்பைகள், பதக்கங்கள், சான்றிதழ்கள், பரிசுகள் பல பெற்று வெற்றியாளராகத் திகழ்கிறார்.;

Update:2023-10-01 15:50 IST

எத்தனையோ தற்காப்புக் கலைகள் இருந்தாலும், கராத்தேவுக்கு என்றும் தனி மவுசு உண்டு. இன்றைய காலகட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே மீது தீராத ஆர்வம் இருக்கிறது. அந்த ஆர்வத்தை தனது திறமையால் சாதனைகளாக மாற்றிக் காட்டி இருக்கிறார் சேலத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவர் யஷ்வந்த் சரவணன். சைதன்யா டெக்னோ பள்ளியில் படிக்கும் இவர், ஏராளமான போட்டிகளில் கலந்து கொண்டு கோப்பைகள், பதக்கங்கள், சான்றிதழ்கள், பரிசுகள் பல பெற்று வெற்றியாளராகத் திகழ்கிறார்.

மாவட்ட அளவில் இருந்து பல்வேறு நிலைகளைக் கடந்து இன்று உலக அளவில் முத்திரை பதித்து வரும் யஷ்வந்த் சரவணன் கடந்து வந்த பாதையை அவரே கூற கேட்போம்.

''என்னுடைய சொந்த ஊர் சேலம் அழகாபுரம். அப்பா சரவணன், அம்மா ஹரிசுதா, தம்பி சஞ்சய். நான் நடக்கப் பழக தொடங்கிய நாட்களிலேயே என்னுடைய வீட்டில் கராத்தே ஆடைகளும், கராத்தே பெல்டுகளும், போட்டிக்கான உபகரணங்களும் என்னுடைய விளையாட்டு தோழர்களாக மாறி இருந்தன. அதற்கு காரணம் என்னுடைய அப்பா கராத்தே மாஸ்டர். அவரை பார்த்து குழந்தை பருவத்தில் இருந்தே கராத்தே மீது எனக்கு அளவு கடந்த ஈடுபாடு ஏற்பட்டது. 4 வயதில் இருந்தே என்னுடைய தந்தை எனக்கு கராத்தே கற்றுக்கொடுக்க தொடங்கி விட்டார்.

2 ஆண்டுகள் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டேன். ஓடி விளையாடும் வயதில் முழுக்க முழுக்க கராத்தே பயிற்சியிலேயே என்னுடைய நாட்களை கழித்தேன். அதன் பயன்தான் 6 வயதில் போட்டிகளில் கலந்து கொள்ள என்னுடைய தந்தை, என்னை தயார்படுத்தினார்.

2012-ம் ஆண்டு, முதல் போட்டியிலேயே சிறப்பு பெல்ட் வாங்கினேன். மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தொடங்கிய நான், தொடர்ந்து மாநில, தேசிய, தெற்கு ஆசியா, உலக அளவிலான போட்டிகள் என படிப்படியாக இன்று உயர்ந்து நிற்கிறேன்'' என்றார்.

''போட்டி என்றாலே அதில் நிச்சயம் எனக்கான பரிசு ஒன்று இருக்கும். அந்த அளவுக்கு என்னுடைய திறமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கை இதுவரை வீண் போகவில்லை. அது எந்த வகையான போட்டியாக இருந்தாலும் ஏதாவது ஒரு பதக்கத்தோடுதான் ஊர் திரும்பி இருக்கிறேன்.

இதுவரை 100 தங்கம், 50 வெள்ளி, 50 வெண்கலம் என 200-க்கும் மேற்பட்ட பதக்கங்கள் வாங்கி உள்ளேன்'' என்றவர், சர்வதேச போட்டிகளில் வெற்றிபெற்றதைப் பகிர்ந்து கொண்டார்.

''2015-ம் ஆண்டு புதுடெல்லியில் நடந்த 8-வது காமன்வெல்த் போட்டியில் 8 வயதுக்கான தனிநபர் கட்டா பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தேன். நான் கலந்து கொண்ட முதல் காமன்வெல்த் போட்டியிலேயே இந்தியாவிற்காக பதக்கம் வென்றது, சிறப்பான உற்சாகத்தை கொடுத்தது.

2019-ம் ஆண்டு மலேசியாவில் நடந்த இண்டர்நேஷனல் ஓபன் சாம்பியன்ஷிப் கராத்தே போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றேன். வெளிநாட்டுக்கு சென்று, முதல் பதக்கத்தை வென்று உச்சி முகர்ந்ததை என் வாழ்நாளில் மறக்க முடியாது.

கடந்த ஜூன் மாதம் மும்பையில் நடந்த தேசிய கராத்தே போட்டியில் தங்கம் வென்றேன். தொடர்ந்து உலக அளவிலான போட்டியில் கால் பதித்தேன். அதாவது, 12-வது உலக கராத்தே போட்டி துருக்கியில் நடந்தது. அதில் இந்திய அணி சார்பில் குழு கட்டா பிரிவில் நானும், கபில், கபிஷ், சஞ்சய் ஆகியோரும் பங்கேற்றோம். 195 நாடுகளில் இருந்து கராத்தே வீரர்கள் கலந்து கொண்டனர். அதில் உலக அளவில் 10-வது இடம் நமக்கு கிடைத்துள்ளது.

அதன்பிறகு தெற்காசிய மற்றும் உலக போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டேன். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையில் நடந்த 6-வது தெற்கு ஆசிய கராத்தே போட்டியில் ஜூனியர் குழு கட்டா பிரிவில் தங்கம் வென்றேன்.

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களுக்கு நான் போட்டிக்காக சென்று இருக்கிறேன். இதுவரை மலேசியா, துருக்கி, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் சென்று போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். உள்ளூர் போட்டிகளை விட வெளிநாடுகளில் மற்ற நாட்டு வீரர்களுடன் மோதும் போது ஏற்படும் உத்வேகம் வித்தியாசமானது. ஏனென்றால் மற்ற நாடுகளுடன் விளையாடும் போது நாம் வெற்றி பெற்றால் இந்திய தேசமே வெற்றி பெற்றதாகி விடும்.

''தினமும் காலையில் 2 மணி நேரம், மாலையில் 2 மணி நேரம் என பயிற்சிக்காக 4 மணி நேரம் ஒதுக்கி விடுகிறேன். பயிற்சியின் போதும் சரி, விளையாடும் போதும் சரி நம்முடைய உடம்பிலிருந்து அதிக சக்தி வீணாகும். எனவே நமக்கு அதிக எனர்ஜி தரக்கூடிய புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நம்முடைய போட்டியாளருடன் மோதும்போது நாம் உற்சாகமாக விளையாடி வெற்றி பெற முடியும்.

எந்த துறையாக இருந்தாலும் தினமும் பயிற்சி மேற்கொண்டால் மட்டும் சாதிக்க முடியாது. அந்த பயிற்சியுடன் ஆர்வமும், அர்ப்பணிப்பும் வேண்டும். அப்போதுதான் வெற்றியாளனாக மாற முடியும்'' என்கிறார் யஷ்வந்த் சரவணன்.

''2021-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில்தான் முதன் முதலாக கராத்தே போட்டி சேர்க்கப்பட்டுள்ளது. எத்தனையோ போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம், கோப்பை பெற்றாலும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித்தர வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம். அதை நோக்கியே என்னுடைய பயணமும், பயிற்சியும்'' என்கிறார் கண்களில் நம்பிக்கையுடன்.

அவரது லட்சியம் நிறைவேற சபாஷ் சொல்வோம்.

Tags:    

மேலும் செய்திகள்