பருவநிலை மாற்றங்கள் ஏன் ஏற்படுகின்றன?

இயற்கைதான் மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். பருவநிலை மாற்றத்துக்கு மனிதனின் செயல்பாடு என்ன என்பதே விவாதத்தின் தொடக்கமாக இருக்கும்.;

Update:2023-04-02 14:40 IST

மனிதர்களைப் போல இந்த பூமியில் வாழ்வதற்கான அனைத்து உரிமைகளும் அவற்றுக்குண்டு என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் வளர்த்தெடுப்பது தான் என் தலையாய பணியாக இருந்தது.

உலகப் புகழ்பெற்ற இயற்கை ஆர்வலர் டேவிட் ஆட்டன்பரோ. இயற்கை மற்றும் வன உயிரினங்கள் சார்ந்த இவரது ஆவணப்படங்கள் உலகளவில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவை. விலையுயர்ந்த கார்களை வாங்கி பயன்படுத்துவதற்கான அனைத்து வசதிகளும் இவரிடம் உள்ளன. ஆனால், சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக கார்களை இவர் பயன்படுத்துவதில்லை. இதிலிருந்தே இயற்கையின் மீதான ஆட்டன்பரோவின் காதலை நாம் உணரலாம்.

இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த ஆட்டன்பரோவை பிரிட்டன் மக்கள் 'இயற்கையின் புதையல்' என்று கொண்டாடுகிறார்கள். சில காலம் பிபிசி தொலைக்காட்சியின் சீனியர் மேனேஜராகவும் பணியாற்றியிருக்கிறார். 96 வயதிலும் இயற்கையைப் போல ஓயாமல் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

''சுமார் 40 லட்சம் வகையான வன உயிரினங்களும் தாவரங்களும் இந்த பூமியில் உள்ளன. மனிதர்களைப் போல இந்த பூமியில் வாழ்வதற்கான அனைத்து உரிமைகளும் அவற்றுக்குண்டு என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் வளர்த்தெடுப்பது தான் என் தலையாய பணியாக இருந்தது. இதுதான் இவ்வளவு நாட்களாக நான் செய்துவந்த வேலையின் சாரம். ஆனால், நம்முடைய பேரக் குழந்தைகள் யானையை புகைப்படத்தில் மட்டுமே பார்க்கக் கூடிய ஒரு காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதுதான் வேறு எதையும் விட என்னை கவலையில் ஆழ்த்துகிறது.

அத்துடன், வருகிற 50 வருடங்களில் மனிதர்கள் செய்யப் போகிற காரியங்கள்தான் பூமியில் வாழ்கின்ற அனைத்து உயிரினங்களின் விதியை எழுதப் போகிறது. இயற்கையை அழிக்கப்போகிறோமா அல்லது அதனுடன் இணைந்து சந்தோஷமாக வாழப்போகிறோமா என்பது நம் கையில்தான் உள்ளது.

மக்கள் தொகைப் பெருக்கமும் என்னை கவலைக்குள்ளாக்குகிறது. தொலைக்காட்சியில் நான் பணியாற்றத் தொடங்கியபோது இருந்ததைவிட மூன்று மடங்காக மக்கள் தொகை பெருகிவிட்டது. இயற்கைதான் மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்'' என்கிற ஆட்டன்பரோ, ''பருவநிலை மாற்றங்கள் ஏன் ஏற்படுகின்றன? என்று நிறையபேர் என்னிடம் கேட்கிறார்கள். இப்படியொரு கேள்வியைக் கேட்பதில் எந்த அர்த்தமும் இல்லை. பருவநிலை மாற்றத்துக்கு மனிதனின் பங்கு என்ன? அதில் அவனது செயல்பாடு என்ன? என்பதே விவாதத்தின் தொடக்கமாக இருக்கும்'' என்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்