கால்நடை மருத்துவ படிப்புகளும், கலக்கலான வேலைவாய்ப்புகளும்...!

வெட்னரி கவுன்சில் ஆப் இந்தியா அமைப்பால் நடத்தப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் மூலம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட 40 கல்விநிறுவனங்களில் 15 சதவீதம் அளவு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.;

Update:2023-04-30 18:54 IST

மனித வாழ்க்கையின் அத்தனை கூறுகளிலும் கலந்துள்ள கால்நடைகளைப் பற்றிய அறிவியல் துறையே கால்நடை அறிவியல் (Veterinary Science). வனவிலங்குகள் காப்பகம், உயிரியல் பூங்காக்கள், உயிரியல் சார்ந்த நவீன ஆராய்ச்சிகள், வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகள் என மனிதர்கள் அல்லாத மற்ற உயிர்கள் மீதும் கவனம் செலுத்தும் இன்றைய யுகத்தில் கால்நடை நிபுணர்களின் தேவை இன்றியமையாததாக உள்ளது.

ஐந்தரை ஆண்டுகள் கால அளவுடைய இளங்கலைப் படிப்பான பி.வி.எஸ்சி B.V.Sc (Veterinary Science)-ல் ஓர் ஆண்டுகாலம் களத்தில் கற்கப்படும் இண்டர்ன்ஷிப்புக்காக ஒதுக்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் அளவுடைய முதுகலைப் படிப்பான எம்.வி.எஸ்சி (M.V.Sc. Veterinary Science) மற்றும் கால்நடை உட்பிரிவுகளை சார்ந்த துறைகளில் ஆராய்ச்சிப் பட்டமும் இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளாலும் வழங்கப்பட்டுவருகிறது.

இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களை தேர்வு செய்து பிளஸ்-2 முடித்திருப்பது இளங்கலை படிப்பிற்கான அடிப்படை கல்வித் தகுதியாகும். மாநில அரசுகளால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் கால்நடை அறிவியல் படிப்பிற்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

வெட்னரி கவுன்சில் ஆப் இந்தியா (Veterinary Council of India) என்ற அமைப்பால் நடத்தப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் மூலம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட 40 கல்விநிறுவனங்களில் 15 சதவீதம் அளவு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இளங்கலை பி.வி.எஸ்சி (B.V.Sc) படித்திருப்பது முதுகலைப் படிப்பான (M.V.Sc) எம்.வி.எஸ்சி.க்கு அடிப்படைக் கல்வித் தகுதியாக கருதப்படுகிறது. அடுத்து இந்தியன் கவுன்சில் பார் அக்ரிகல்சர் ரிசர்ச் (Indian Council for Agricultural Research) மற்றும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (National Testing Agency) ஆகிய அமைப்புகளால் இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது முதுகலைப் படிப்பிற்கு முக்கிய கல்வித் தகுதியாகும்.

பால் உற்பத்தி, இறைச்சி ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளது இந்தியா. ஆடு, மாடு வளர்ப்பு என பொருளாதாரம் மற்றும் உற்பத்தித் துறைகளில் தொடங்கி பூனை, நாய் போன்ற வீட்டுப் பிராணிகள், உயிரியல் பூங்காக்கள், உயிரியல் ஆராய்ச்சிகள் என பல தளங்களில் தொழில்முறை பயிற்சி பெற்ற கால்நடை நிபுணர்களுக்கான தேவை உள்ளது. மாவட்டம் மற்றும் தாலுகாக்களில் அமைந்திருக்கும் கால்நடை மருத்துவமனைகளிலும் பொதுத்துறை வங்கிகளில் பீல்ட் ஆபீசர், டெவலெப்மென்ட் ஆபீசர் (Agricultural Field Officer/Rural Development Officer) போன்ற பிரிவுகளில் அரசு துறைகளில் வேலைவாய்ப்புகள் பெருகிவருகின்றன. அதே நேரம் பின்தங்கிய இடங்களில் செயல்படும் தனியார் வங்கிகளிலும், இன்சூரன்ஸ் கம்பெனிகளிலும் கால்நடை அறிவியல் படித்தவர்களின் தேவை உள்ளது. பாதுகாப்பு மற்றும் காவல் துறைகளில் நாய்களின் ஆரோக்கியத்தை பேணுவது, கல்விநிறுவனங்களில் விரிவுரையாளர், தனியாக வளர்ப்பு பிராணிகளுக்கான கிளினிக்குகள் தொடங்குதல், இந்திய அரசு நிறுவனங்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளுதல் என பல துறைகளிலும் வேலைவாய்ப்புகள் பெருகிவருகின்றன.

மாநில மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் மற்றும் இந்தியாவின் முன்னணி தனியார் கல்வி நிறுவனங்கள் கால்நடை அறிவியல் சார்ந்த இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்கிவருகின்றன. குறிப்பாக, சென்னை, பாட்னா, திருப்பதி, கொல்கத்தா, வயநாடு, காந்திநகர், ஜோரட், பூசா ஆகிய பகுதிகளில் இருக்கும் கால்நடை கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலலாம்.

பால்பண்ணைத் தொழில், கோழிப்பண்ணைத் தொழில், செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, உணவுப் பொருட்கள் பதனிடுதல் போன்ற பண்ணை மற்றும் பண்ணை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கும் கால்நடை அறிவியல் பயின்றவர்களின் தேவை அதிகம் உள்ளது. இதைக் கருத்தில்கொண்டே பல்வேறு செயல்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் கிராமப்புற மக்களின் வருவாயை உயர்த்தும் நோக்கில் சுய வேலைவாய்ப்புப் பயிற்சிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கல்லூரிகள்/மையங்கள் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் திட்டமிட்டுச் செயல்பட்டால் வெற்றிகரமான வாழ்வை அமைத்துக்கொள்ளலாம்.

Tags:    

மேலும் செய்திகள்