மண்பாண்டத் தொழிலை மீட்டெடுக்கும் இளைஞர்..!

மெல்ல மெல்ல கரைந்து வரும் மண்பாண்ட கலையையும், அதுசார்ந்த தொழிலையும் மீட்டெடுப்பதில் ஆர்வமாக இருக்கிறார், லோகேஷ்.;

Update:2023-08-26 08:01 IST

 வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவரான இவர், சைகாலஜி (இளங்கலை) படிப்பையும், காட்சி ஊடகவியல் (முதுகலை) படிப்பையும் முடித்திருக்கிறார். இருப்பினும், மண்பாண்ட கலை மீது ஆர்வமாகி, அதில் தீவிரமாக செயலாற்றி வருகிறார். அவருடன் சிறு நேர்காணல்.

மண்பாண்ட கலை உங்களுக்கு எப்படி அறிமுகமானது?

2017-ம் ஆண்டு வரை, மண்பாண்ட பொருட்களுக்கும், அது சார்ந்த கலைக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஆனால் அல்சர் பாதிப்பிற்கு உள்ளான போது, அலுமினியம் பாத்திரங்களுக்கு பதிலாக மண்பாண்ட பொருட்களில் சமைத்து சாப்பிட மருத்துவர்கள் வலியுறுத்தினர். ஏனெனில், அலுமினிய பாத்திரங்கள் வாயிலாக உலோக மாசுபாடு ஏற்பட்டு, அல்சர் பாதிக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறினர். அப்படி, மருந்தாகவே மண்பாண்ட பொருட்கள் எனக்கு அறிமுகமாகின.

மண்பாண்ட தொழில் மற்றும் கலையோடு ஒன்றிணைந்தது எப்போது?

மண்பாண்ட சமையல் பாத்திரங்களை நிறைய தேடி அலைந்தேன். ஆனால் எதிர்பார்த்தபடி எதுவுமே கிடைக்கவில்லை. காரணம் தேடியபோதுதான், மண்பாண்ட கலையும், தொழிலும் மெல்ல...மெல்ல கரைந்து வருவதை அறிந்து, அதை மீட்டெடுக்க முயன்றேன்.

மண்பாண்ட தொழில் ஏன் அழிவை நோக்கி செல்கிறது?

மண்பாண்ட பொருட்களை உருவாக்க, பெரிய நிலப்பரப்பு தேவை. களிமண் மற்றும் சவுடு மண் தேவை. இவை இரண்டையும் சமாளித்து மண்பாண்ட பொருட்களை தயாரித்தாலும், அதை சரியான விலை கொடுத்து வாங்கக்கூடிய மக்கள் தேவை. முறைப்படி சந்தைப்படுத்த பிரத்யேக இடம் தேவை. இப்படி தேவைகளின் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்வதால்தான், மண்பாண்ட தொழில் அழிவை நோக்கி செல்கிறது.

மண்பாண்ட தொழிலை மீட்க என்ன செய்திருக்கிறீர்கள்?

என்னுடைய பூர்வீகம் வேலூர் என்பதால், அங்கு மண்பாண்ட தொழில் செய்யும் எல்லா கலைஞர்களையும், ஒருங்கிணைத்து வேலூர் மாவட்ட மண்பாண்ட உற்பத்தியாளர் சங்கம் மற்றும் கூட்டமைப்பை உருவாக்கினோம். இதன்மூலம், மண்பாண்ட தொழில் வளர்ச்சியையும், மண்பாண்ட கலை மீட்டெடுப்பையும் மேற்கொண்டு வருகிறோம்.




மண்பாண்ட தொழிலில் எத்தகைய மாற்றத்தை உண்டாக்க நினைக்கிறீர்கள்?

மண்பாண்ட தொழிலுக்கு என சிறப்பு பொருளாதார மண்டலம் ஒன்றை உருவாக்க ஆசைப்படுகிறேன். அது, மண்பாண்ட கலைஞர்களுக்கான உலகமாக திகழும். அங்கு மண்பாண்ட கலைஞர்களுக்கான பொதுகளம் அமைக்கப்பட்டிருக்கும். அதில் யார் வேண்டுமானாலும் மண்பாண்ட பொருட்களை உருவாக்கலாம். மேலும் மண்பாண்ட பொருட்களை விற்பதற்கான பிரத்யேக சந்தையும் அங்கு அமைக்கப்பட்டிருக்கும்.

வயதான கலைஞர்களை கொண்டு, இளைய தலைமுறையினருக்கு மண்பாண்ட கலையை கற்றுக்கொடுக்கும் பயிற்சிக் களம் இருக்கும். மேலும் மண்பாண்ட பொருட்களால் நிறைந்த சமையல் காட்சிக் கூடமும், மண்பாண்ட கலையில் உருவான அதிசய பொருட்களை காட்சிப்படுத்தும் அருங்காட்சியகமும், கின்னஸ் சாதனை முயற்சிகளுக்காக உருவாக்கப்பட்ட பிரமாண்ட மண்பாண்ட பொருட்களும் அங்கு இருக்கும்.

மேலும் மணல் சோதனையில் தொடங்கி, 3-டி தொழில்நுட்பத்தை மண்பாண்ட கலையில் உள்நுழைப்பது வரையிலான பிரமாண்டமான ஆராய்ச்சி கூடமும் இருக்கும். இப்படியொரு மண்பாண்ட உலகத்தை உருவாக்கி, மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த இருக்கிறேன். இதற்கான திட்டமிடலை தமிழக அரசு அங்கீகரித்து, மண்பாண்ட தொழில் உற்பத்தி குழுமத்திற்கு என ரூ.3.39 கோடி நிதியும் ஒதுக்கி இருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில், இந்த மண்பாண்ட உலகம் உயிர்பெறும்.

பாரம்பரிய மண்பாண்ட பொருட்களை உருவாக்கியது பற்றி கூறுங்கள்?

மண்பாண்ட பொருள் தயாரிப்பில், ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பெருமை இருக்கும். தஞ்சாவூருக்கு தலையாட்டி பொம்மை, மானா மதுரை கடம், காஞ்சிபுரம் கொலு பொம்மை, புதுவை சுடுமண் சிற்பங்கள்... என தமிழகத்தின் பிரபலமான மண்பாண்ட பொருட்களை, பாரம்பரியம் மாறாமல் மீள் உருவாக்கம் செய்து வருகிறோம். அந்த வகையில், அழிந்துபோன கரிகிரி மந்திர குடுவை, நாராயண குடுவை, மாய கிருஷ்ணன் சிலை ஆகியவற்றை பாரம்பரிய முறையில் உருவாக்கி இருக்கிறோம். இவை அனைத்தும் 2 அல்லது 3 அடுக்குகளாக உருவானவை.

மண்பாண்ட கலையை மீட்டெடுக்க ஆசைப்படும் நீங்கள், அந்த கலையை பழகி இருக்கிறீர்களா?

ஆம்...!, குறுகிய காலத்திலேயே மண்பாண்ட கலையை கற்றுக்கொண்டு, நானே என் கைப்பட மீள் உருவாக்கம் செய்து வருகிறேன். மண்பாண்ட கலையை மையப்படுத்திய தொழில்களுக்கு, வங்கி கடன் சுலபமாக கிடைப்பதில்லை. எங்களை போன்ற மண்பாண்ட கலைஞர்களை கருத்தில் கொண்டு சிறப்பு வங்கி கடன் வழங்கி எங்களை உற்சாகப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

தமிழகத்தின் பிரபலமான மண்பாண்ட பொருட்களை, பாரம்பரியம் மாறாமல் மீள் உருவாக்கம் செய்து வருகிறோம். அந்த வகையில், அழிந்துப்போன கரிகிரி மந்திர குடுவை, நாராயண குடுவை, மாய கிருஷ்ணன் சிலை ஆகியவற்றை பாரம்பரிய முறையில் உருவாக்கி இருக்கிறோம்.

Tags:    

மேலும் செய்திகள்