வளர்ச்சி பெறும் 'டிஜிட்டல் மார்க்கெட்டிங்' துறை

கடந்த 5 ஆண்டுகளில், அபார வளர்ச்சிப் பெற்ற துறைகளில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையும் ஒன்று.;

Update:2023-08-12 09:00 IST

மடிக்கணினிகளையும், ஸ்மார்ட்போன்களையும், டேப்லெட் சாதனங்களையும் இலக்காக வைத்து மார்க்கெட்டிங் செய்வதுதான் இந்தத் துறை. டிஜிட்டல் மார்க்கெட்டிங்கின் முக்கியமான நோக்கம் ஒரு குறிப்பிட்ட பிராண்ட் பொருளை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதுதான்.

* வளர்ச்சி

இன்றைய நவீன உலகில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையின் வளர்ச்சி மிகப் பிரமாண்டமாக உள்ளது. 2022-ம் ஆண்டின் கடைசிக் காலாண்டு காலகட்டத்தில் இணைய விளம்பரம் மூலம் 14 ஆயிரம் கோடி டாலர்கள் வருமானத்தை ஈட்டுகிற சாதனையை இந்தத் துறை செய்துள்ளது. அதேபோல சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்யும் நிறுவனங்களின் வளர்ச்சியும் 56 சதவீதம் இருந்துள்ளது. அதனால்தான், எல்லா நிறுவனங்களும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் கவனம் செலுத்துகின்றன.

* வேலைவாய்ப்பு

இந்தத் துறையின் சமீபகாலத்து அபார வளர்ச்சி, இளைய தலைமுறையினருக்கு மிகப் பெரிய வேலைவாய்ப்புகளை திறந்துவிட்டுள்ளது. உங்களின் ஆர்வத்துக்குத் தகுந்தாற்போலப் பலவகையான வாய்ப்புகளை அது வைத்துள்ளது.

சமூக வலைத்தளங்களை மட்டும் கருத்தில்கொண்டு அதிலேயே மார்க்கெட்டிங் பணியைச் செய்யலாம். புகைப்படம் பகிர்தல், பொருள் சார்ந்த கட்டுரை-விமர்சனங்களை எழுதுதல், மாடல் புகைப்படங்களை எடுத்து கொடுத்தல், ஒரு கருப்பொருளை வைத்து டிரெண்ட் செய்தல்... என டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் புதுப்புது வேலைவாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது.

இவை மட்டுமல்ல, நீங்கள் மென்பொருள் தொழில்நுட்பம் தெரிந்தவரா? அப்படியானால் பொருள்களை வாடிக்கையாளரிடம் கொண்டு செல்லும் வகையிலான மொபைல் ஆப்ஸ்களையும் உருவாக்கலாம். இணையப் பக்கங்களைப் பல்வேறு அழகுமிக்க முறையில் வடிவமைக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இதில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

* தொழில் வளர்ச்சி

புதிய இளைஞர்கள் மட்டுமல்ல, தங்களின் தொழில் வாழ்க்கையை மாற்ற வேண்டும் எனத் திட்டமிடுபவர்களுக்கும் இந்தத் துறை வாய்ப்புகளை அள்ளித்தரும். பாரம்பரியமான தொழில்களைச் செய்யும் தொழில்முனைவோர்களும், பெண்களும் கூடத் தங்களுக்கான தொழில் வாழ்க்கையாக இந்தத் துறையைத் தேர்வு செய்யலாம்.

வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் தொழிலாக இந்தியாவில் இது வளர்ந்து வருகிறது. கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாகக் கடும் வேகத்தில் இதன் வளர்ச்சி உள்ளது.

தற்போது எட்டு லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் இந்தத் துறையில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தத் துறையில் முன் அனுபவம் தேவையில்லாதவர்களுக்கான பணிகள் முதல் தேர்ச்சிபெற்ற திறமைசாலிக்கான பணிகள் வரை பலதரப்பட்ட பணிகள் இருக்கவே செய்கின்றன. இதில் 42 சதவீதத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் முன் அனுபவம் தேவையில்லாத பணிகளில்தான் உருவாகி உள்ளன என்பதும் உண்மைதான்.

* உயர்பதவிகள்

சமீப ஆண்டுகளில் இந்தியாவின் பல்வேறு பெரு நிறுவனங்களும் தங்களின் பொருட்களை மக்களிடம் கொண்டு செல்ல டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் நுழைந்துவிட்டன. அதனால் இந்தத் துறையில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மேனேஜர்கள், சோசியல் மீடியா மார்க்கெட்டர்கள், கன்டென்ட் மார்க்கெட்டர்கள் எனும் பெயரில் புதிய உயர் பதவிகளும் உருவாகியுள்ளன. இந்தத் துறையில் திறமை படைத்த ஊழியர்களுக்கு வருடத்துக்கு 20 லட்சம் ரூபாய்கள் வரை கூட சம்பளம் தருவதற்குப் பெருநிறுவனங்கள் முன்வருகின்றன. சந்தைப்படுத்துதலில் திறமை வாய்ந்த சாதாரண ஊழியர்களுக்கான ஆரம்பகட்ட ஆண்டு சம்பளம் கூட ரூ.4 லட்சம்அல்லது ரூ.5 லட்சமாக இருக்கிறது.

* படிப்பு

டிஜிட்டல் மார்க்கெட்டிங் சம்பந்தமான படிப்பு களைத் தற்போது சில நிறுவனங்கள் வழங்குகின்றன. டிப்ளமோ இன் டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Diploma in Digital Marketing Courses), புரொபெஷனல் டிப்ளமோ இன் டிஜிட்டல் மார்க் கெட்டிங் (Professional Diploma in Digital Marketing Courses) போன்ற பட்டயப் படிப்புகள் இருக்கின்றன. அதேபோல டிஜிட்டல் மார்க்கெட்டிங் பிரிவில் பி.பி.ஏ. மற்றும் எம்.பி.ஏ. படிப்புகளும் வழங்கப்படுகிறது. 10-ம் வகுப்பு படித்தவர்கள், பிளஸ்-2 படித்தவர்களும் இதில் சேரலாம்.

பகுதி நேர பணி செய்யலாம்

வேறொரு துறையில் பணியாற்றிக் கொண்டே டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையிலும் சாதிக்கலாம்.

பேஸ்புக், கூகுள் தளங்களும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பாடப்பிரிவுகளை கற்றுத் தருகின்றன. டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் 90 சதவிகிதம் சான்றிதழ் படிப்புகள் இலவசமாக கற்றுத்தரப்படுகின்றன.

சமூக வலைத்தளங்களில் தகவல்களை பரிமாற்றம் செய்ய தெரிந்திருக்க வேண்டும். வீடியோக்களை எடிட் செய்ய கற்றுக் கொள்வது மிகவும் சிறந்தது. விளம்பரப்படுத்துதலின் நுணுக்கங்களை அறிந்திருப்பது நல்லது. வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து கொள்வது அவசியம்.

Tags:    

மேலும் செய்திகள்