தடுமாறவைக்கும் தாழ்வு மனப்பான்மை
ஒருவரிடம் மறைந்திருக்கும் எல்லா திறமைகளையும், ஆற்றல் களையும் ஒருமுகப்படுத்தி உடலையும், மனதையும் வலுப்படுத்தும் அபார சக்தி கொண்டது தன்னம்பிக்கை.;
எந்தவொரு செயலை செய்வதாக இருந்தாலும் முதலில் உங்கள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். தாழ்வு மனப்பான்மை எட்டிப்பார்ப்பதற்கு ஒருபோதும் இடம் கொடுத்துவிடக்கூடாது.
நீங்கள் எந்தவொரு காரியத்தையும் துடிப்புடனும், ஆர்வத்துடனும் செய்யக்கூடியவர் என்ற எண்ணத்தை உங்களுடைய தோற்றமே வெளிப்படுத்த வேண்டும். உங்களை சாதிக்க தூண்ட வைக்கும் முதல் மூலதனம் தன்னம்பிக்கைதான். எத்தகைய தடைகளையும், சிக்கல்களையும் தகர்த்தெறிய வைக்கும் வலிமை அதற்கு உண்டு.
மற்றவர்களை ஒப்பிடும்போது குறைவான தகுதியும், திறமையும் கொண்டவர்கள் கூட எடுத்த காரியங்களை கச்சிதமாக முடித்திருப்பார்கள். அதற்கு அவர்களுடைய கடின முயற்சியும், தைரியமான செயல்பாடுமே காரணமாக அமையும்.
நம்பிக்கையும், தைரியமுமே ஒருவருடைய வெற்றிக்கு தூண்டுகோலாய் இருக்கும். ஒருசிலரிடம் எல்லா திறமைகளும் இருக்கும். ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தங்களை தாங்களே தாழ்த்திக்கொண்டிருப்பார்கள். தாழ்வு மனப்பான்மை அவர்களிடம் குடிகொண்டிருக்கும். அதில் இருந்து மீளமுடியாமல் தவிப்பார்கள்.
அதுபற்றி அவர்களிடம் கேட்டால், 'அவரை போல் எனக்கு தைரியம் கிடையாது', 'என்னால் அதை செய்து முடிக்கமுடியுமா? என்பது சந்தேகம்தான்', 'என் மீதே எனக்கு நம்பிக்கை கிடையாது. நான் ஏதாவது தவறாக செய்துவிட்டால் மற்றவர்கள் என்னை ஏளனமாக நினைப்பார்களோ என்ற பயம் காரணமாக முயற்சி செய்யாமலேயே விட்டு விட்டேன்', 'எனக்கு எல்லாம் தெரியும் என்று களம் இறங்கினால் மற்றவர்கள் என்னை திமிர் பிடித்தவன் என்று நினைத்துவிடுவார்களோ என்ற கவலை இருக்கிறது, 'எனக்கான நேரமும், காலமும் கூடிவரவில்லை என்று ஒதுங்கி இருக்கிறேன்', 'நல்ல சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறேன்' என்று ஏதாவதொரு காரணத்தை சொல்வது அவருடைய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாகவே இருக்கும். தன்னுடைய தகுதியை தானே குறைவாக மதிப்பிடுவது தாழ்வு மனப்பான்மையையும், அறியாமையையும்தான் உண்டாக்கும்.
இளைஞர்கள் தங்களிடம் புதைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு பயமும், கூச்ச சுபாவமும் முட்டுக்கட்டையாக அமைந்திருக்கும். தன்னைப் பற்றிய சுய மதிப்பீடு உயர்வானதாக இருக்க வேண்டும். தாழ்வு மனப்பான்மைக்கு இடம் கொடுக்காமல் உயர்வான எண்ணங்களையும், சிந்தனைகளையும் உள்ளத்தில் பதிய வைக்க வேண்டும். தங்களிடம் இருக்கும் திறமைகளில் பாதியை கூட தாழ்வு மனப்பான்மையால் வெளிப்படுத்தமுடியாமல் முடங்கி கிடப்பது வாழ்க்கையையே நிர்மூலமாக்கிவிடும்.