தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்று ஆசிய அளவில் அசத்திய மாணவி

Update:2023-08-05 17:14 IST

ஆசிய அளவிலான தொடர் ஓட்டத்தில் (ரிலே) தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார், குமரியில் படித்து வரும் 17 வயதே ஆன என்ஜினீயரிங் மாணவி கனிஷ்கா டினா. அவரை சந்தித்து சாதித்தது பற்றி கேட்டபோது, சிறு வயது முதல் ஆசிய அளவிலான சாதனை அனுபவங்களை விவரித்ததோடு, ஒலிம்பிக் பதக்கம் தான் லட்சியம் என்ற இலக்கோடு பயணிப்பதாக கூறினார்.

அவர் மிகவும் அமைதியாக பேசினார். வார்த்தைகளும் சாந்தமாகவே இருந்தது. இதுபற்றி கேட்டபோது, ''மனதளவில் நான் எப்போதும் அமைதியாகவே இருப்பேன், மைதானத்தில் இறங்கினால் மட்டுமே சீறி பாய்வேன்'' என கூறியதில் இருந்தே அவர் லட்சியத்தை அடைவார் என்ற நம்பிக்கை துளிர்விடுகிறது.

இதுவரை சாதித்த, மென்மேலும் சாதிக்க துடிக்கும் கனிஷ்கா டினாவை பற்றி இங்கே விரிவாக பார்ப்போம்.

* விளையாட்டில் ஆர்வம் வந்தது எப்படி?

சிறு வயதில் எல்லோரும் போல் சராசரி மாணவியாக இருந்தேன். ஆனாலும் மற்றவர்களை விட ஓடுவதில் கில்லாடி என்பதை உணர்ந்தேன். அத்தகைய திறமையை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதை அந்த வயதில் உணரவில்லை. தொடக்கக்கல்வியை முடித்த பிறகு பள்ளி அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தேன். அதில் கிடைத்த சின்ன, சின்ன வெற்றி உத்வேகத்தை தந்ததோடு விளையாட்டின் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கும் ஆர்வத்தை தூண்டியது.

* முதல் பதக்கம் வென்றது பற்றி கூறுங்கள்?

வடக்கன்குளம் புனித தெரசாள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தேன். தற்போது தோவாளை லயோலா என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். சிறுவயதில் ஓட்டப்பயிற்சியில் சிறப்பாக அசத்தியதால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் என்னை பட்டை தீட்ட ஆரம்பித்தனர். ''உன்னால் ஓட்டத்தில் சாதிக்க முடியும், அதிலேயே கவனம் செலுத்து'' என உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தனர். அது எனக்கு ஊக்கத்தை கொடுத்தது. அதனால் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வெல்ல ஆரம்பித்தேன். விளையாட்டில் எத்தகைய இடத்துக்கு உயர்ந்தாலும் ஒருவருக்கு தான் வாங்கிய முதல் பதக்கமே நீங்கா இடம் பிடித்திருக்கும். அந்த மனநிலை எனக்கும் இருந்தது. அந்தவகையில் 10-ம் வகுப்பு படித்தபோது மாநில அளவிலான ஓட்ட போட்டியில் முதலிடத்தை பிடித்து, முதன் முதலாக பதக்கத்தை வென்றேன். இந்த பதக்கம் எனக்கு பெரிய அங்கீகாரத்தை தந்தது. அதே சமயத்தில் ஒருவித பதற்றமும் தொற்றியது.

* தேசிய அளவில் சாதித்தது எப்படி?

''இதுவரை யார் துணையின்றி பதக்கம் வென்றாச்சு, தேசிய, சர்வதேச அளவிலான போட்டிக்கு தயாராக வேண்டுமென்றால் அதற்கேற்ப பயிற்சி வேண்டும், இவள் என்ன செய்ய போகிறாள்'' என பலரும் என்னுடைய காதுபட பேச தொடங்கினர். ஆனாலும் நான் மனம் தளரவில்லை.

தந்தை மற்றும் சிலரின் உதவியுடன் எனக்கு நல்வின் ராஜா என்ற பயிற்சியாளர் கிடைத்தார். அவரது வழிகாட்டுதல், பயிற்சி நுணுக்கம், மன வலிமை, உடல் வலிமையை மேம்படுத்தி தேசிய, சர்வதேச அளவிலான போட்டிக்கு தயார்படுத்தினார்.

டெல்லியில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் (2021-ம் ஆண்டு) 400 மீட்டர் ஓட்ட போட்டியில் தங்கப்பதக்கம் வென்றேன். இந்த வருடம் திருவண்ணாமலையில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றேன். தேசிய அளவிலான போட்டியில் தொடர்ந்து முத்திரை பதித்ததால் முதன் முறையாக ஆசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றேன்.

ஓட்டத்தில் தங்கப் பதக்கம், வெள்ளிப் பதக்கத்தை குவித்ததோடு, ஓட்டத்தின் பரிணாம வளர்ச்சியான தொடர் ஓட்டத்திலும் (ரிலே) பங்கேற்று தடம் பதித்தேன். அதிலும் பதக்கங்கள் தேசிய அளவில் கிடைத்தது.

* ஆசிய போட்டிக்கு தயாரான விதம்?

தனி நபர் பிரிவான ஓட்டத்தில் சாதிக்க முடிந்ததை 4 பேர் கொண்ட குழுவால் சாதிக்க முடியுமா? என்ற எண்ணம் மனதுக்குள் இருந்தாலும், பயிற்சியாளர் உதவியுடன் தொடர் பயிற்சியிலும் ஈடுபட்டேன். ஓட்டம், தொடர் ஓட்டம் ஆகிய இரண்டையும் எனது இரு கண்களாக பாவித்து மைதான களத்தில் களமிறங்கினேன்.

ஒரு நாளைக்கு காலை, மாலை என 2½ மணி நேரம் கடும் பயிற்சியில் ஈடுபட்டேன். இதுதவிர விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, மன வலிமை, மன உறுதியை ஒருங்கிணைத்து செயல்பட்டதால் விளையாட்டின் வெற்றி படிநிலையை கடந்து சென்றேன்.

தேசிய அளவிலான போட்டியில் திறமையை வெளிப்படுத்தி ஆசிய அளவிலான போட்டியிலும் முத்திரை பதித்தது, எனது சாதனையின் மைல்கல் என்றே கூறலாம்.

கடந்த ஜூன் மாதம் ஆசிய அளவிலான போட்டி தென்கொரியாவில் நடந்தது. இதில் இந்தியா சார்பில் தொடர் ஓட்டத்தில் நான், மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 2 பேர் மற்றும் ஒருவர் என 4 பேர் குழுவாக சேர்ந்து ஓடினோம். 400 மீட்டர் தொடர் ஓட்ட பந்தய களத்தை, 3 நிமிடம் 40 வினாடியில் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றோம். தொடக்கத்தில் இருந்தே எங்கள் குழு முதலிடத்தில் இருந்தது. அதனையே இறுதி இலக்கு வரை கொண்டு சென்று குழுவாக வென்று சாதித்தோம். இந்த சாதனையில் எனக்கும் பங்குள்ளது என்பதை உணர்ந்து, அப்போது நான் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே கிடையாது. வெற்றி மகிழ்ச்சியில் தேசியக்கொடியை என் மீது போர்த்தியபடி மைதானத்தை வலம் வந்தேன். இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம்.

* பெற்றோர் உங்களை உற்சாகப் படுத்துகிறார்களா?

என்னுடைய சாதனை வெற்றிக்கு என்னுடைய பயிற்சியாளர், பெற்றோர் மற்றும் ஆசிரியர் அளித்த ஊக்கம் தான் காரணம். இந்த வெற்றிக்கு என்னுடைய தந்தை மரிய தேவ சேகரின் பங்கு அளப்பரியது. என் சாதனை பற்றி சொல்லும்போது என் தாய், தந்தை, பற்றி சொல்லாமல் இருக்க முடியாது.

தந்தை மரிய தேவ சேகர் உடற்கல்வி ஆசிரியராக இருப்பதால் அவர் எனக்கு பல 'டிப்ஸ்'களை கொடுக்கிறார். எனது தாய் கவிதா ரோசும், விளையாட்டில் சாதிக்க வேண்டும் என என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தினார்.

* உங்களின் அடுத்த இலக்கு?

ஆசிய போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதும் எனக்கு பாராட்டுகள் குவிந்தது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்னை நேரில் வரவழைத்து பதக்கம் அணிவித்து பாராட்டினார். எனது கல்லூரி சார்பாகவும் பாராட்டு விழா நடத்தப்பட்டு வெகுமதி அளித்து என்னை கவுரவித்தனர்.

எனது குறிக்கோள் தனிநபர் பிரிவு ஓட்டத்தில் ஆசிய அளவிலான போட்டி, காமன்வெல்த், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது. அந்த இலக்கை நோக்கியே பயணிக்கிறேன்.

இதற்கு இன்னும் கடுமையாக உழைக்க வேண்டி உள்ளது. அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். கண்டிப்பாக அந்த இலக்கை ஒவ்வொன்றாக கடந்து சாதிப்பேன் என தன்னம்பிக்கையுடன் சொல்கிறார், கனிஷ்கா டினா.

சாதிக்க துடிக்கும் சகோதரிகள்

கனிஷ்கா டினா ஆசிய அளவிலான போட்டியில் தங்கப் பதக்கம் வென்று முத்திரை பதித்தார். அவரது சகோதரியும் விளையாட்டில் சாதித்து வருகிறார். அவருடைய பெயர் ஜெனிஸ்டா ஷானு. 9-ம் வகுப்பு படிக்கும் அவர் மாநில அளவிலான தடை தாண்டும் போட்டியில் தங்கம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்துகிறார்.

''ஓட்ட போட்டியில் சாதித்து கொண்டிருக்கும் நான் இதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். ஆனால் எனது தங்கை ஜெனிஸ்டா ஷானு நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தடை தாண்டும் போட்டி என பல போட்டிகளில் அவரது பங்களிப்பு இருப்பதோடு அதில் முத்திரையும் பதித்து வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுவும் என்னை விட குறைந்த வயதில் சாதித்திருக்கிறார்'' என பெருமையுடன் கூறுகிறார், கனிஷ்கா டினா.

தந்தையின் கனவு

ஆசிய அளவிலான போட்டியில் ஒரு மகள் முத்திரை பதித்துள்ளார். மற்றொரு மகள் மாநில அளவிலான போட்டியில் பதக்கங்களை குவித்து வருவதை மரிய தேவ சேகர் பெருமையாக விவரிக்கிறார்.

''நான் சாதிக்க வேண்டும் என துடித்தது, அது கனவாகவே போனது. ஆனால் எனது மகள்கள் அந்த கனவை நிறைவேற்றி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. சிறு வயதில் விளையாட்டில் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு இருந்தது. ஆனால் குடும்ப சூழ்நிலை, வழிகாட்டி இல்லாமையால் நான் திறமையை வெளிப்படுத்த முடியவில்லை. ஆனால் இந்த சூழ்நிலை எனது மகள்களுக்கு இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

எனது மகள்களின் திறமையை நாளுக்கு நாள் மெருகேற்ற அவர்களுக்கு வழிகாட்டியாக பயிற்சியாளர் உள்ளார். நான் மற்றும் எனது மனைவியும் தொடர்ந்து இருவரையும் உற்சாகப்படுத்திக் கொண்டே இருக்கிறோம்.

என்னுடைய 2 மகள்களுக்கும் ஒரே பயிற்சியாளர் தான். இன்னும் கனிஷ்கா டினா நிறைய சாதிக்க வேண்டியது உள்ளது. பாதி தூரத்தை தான் அவள் தாண்டி இருக்கிறாள். இதற்காக அவர் கடுமையாக பயிற்சி பெற வேண்டும். ஒலிம்பிக், காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும். அந்த இலக்கை கனிஷ்கா டினா அடைவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவர் இதுவரை வாங்கிய பதக்கங்கள் எனது வீட்டில் பொக்கிஷமாக வைக்கப்பட்டுள்ளது'' என பூரிப்புடன் கூறுகிறார், மரிய தேவ சேகர்.

Tags:    

மேலும் செய்திகள்