உணர்வுப்பூர்வமான ஓவியர்...!
உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய ஓவியங்களுக்கு, எப்போதுமே மவுசு அதிகம். அந்தவகையில், மதுரையை சேர்ந்த சுந்தர் கந்தசாமி வரையும் எல்லா ஓவியங்களிலும் உணர்வுகள் உயிரோட்டமாக வெளிப்படுகிறது.;
காரணம், இவர் இறந்துபோன உறவுகளுக்கு ஓவியங்கள் மூலமாக உயிர்கொடுத்து, அழகு பார்க்கிறார். இதுபற்றி அவருடன் சிறு நேர்காணல்...
* உங்களை பற்றி சிறு அறிமுகம்?
மதுரை மேலூர் என் சொந்த ஊர். கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் முடித்திருக்கிறேன்.
* ஓவிய ஆசை எப்போது பிறந்தது?
சிறுவயதில் இருந்தே ஓவியம் வரைகிறேன். நிறைய ஓவியப்போட்டிகளில், பரிசுகளை வென்றிருக்கிறேன். அந்தவகையில், ஓவியம் என்னுடனே, வளர்ந்து கொண்டிருந்தது. ஓவிய திறன், இயல்பாகவே எனக்குள் இருப்பதாக உணர்கிறேன்.
* முழுநேர ஓவியராக மாறியது எப்போது?
பொறியியல் படிப்பை முடிக்கும் தருவாயில், கல்லூரி வளாக நேர்காணலில் வெற்றிப்பெற்று பணி வாய்ப்பும் பெற்றுவிட்டேன். ஆனால் கொரோனா ஊரடங்கின் போது, பணி வாய்ப்பு பறிபோனது. அந்தசமயத்தில், எல்லா வேலைவாய்ப்புகளும் முடங்கியிருந்ததால், எனக்கான வாழ்வாதாரத்தை தூரிகை கொண்டு வண்ணம் தீட்ட ஆரம்பித்தேன். அப்படிதான், முழுநேர ஓவியராக மாறினேன்.
* நிறைய ஓவியர்கள் இருக்கிறார்கள். உங்களுடைய தனித்துவம் எது?
எனக்கு இயற்கை காட்சிகளையும் வரைய தெரியும். வனவிலங்குகளை தத்ரூபமாகவும் வரைய தெரியும். மார்டன் ஆர்ட் கலையும் தெரியும். ஆனால், இவைகளை என்னுடைய தனித்துவமாக நான் நினைத்ததே இல்லை. ஏனெனில், குடும்ப உறவுகளை இழந்து தவிப்பவர்களுக்கு, அவர்களை தத்ரூப ஓவியமாக வரைந்து காட்டி, அவர்கள் இழந்து வாடும் குடும்ப உறவுகளை சமாதானப்படுத்துவதுதான் என்னுடைய ஸ்டைல். அதுவே, என்னுடைய தனித்துவமும்கூட.
* இதுவரை எத்தனை ஓவியங்களை வரைந்திருப்பீர்கள்?
கிட்டத்தட்ட 3 வருடத்தில், இரண்டாயிரத்து ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்திருப்பேன். அதில், 1500-ற்கும் மேற்பட்டவை, உறவுகளை உயிர்பிக்கும் ஓவியங்கள்.
* இறந்துபோனவர்களை, வரையும் டிரெண்ட் இப்போது அதிகரித்திருக்கிறதே. ஏன்?
அம்மா, அப்பா, அக்கா, அண்ணன், தாத்தா-பாட்டி என... இறந்த உறவுகளை, மீண்டும் ஓவியமாக மீள் உருவாக்கம் செய்யும் டிரெண்ட் இப்போது அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, திருமணம், காதுகுத்து... போன்ற சுபநிகழ்ச்சிகளின்போது எடுக்கப்படும் குடும்ப புகைப்படங்களில், இல்லாத உறவுகளை உயிர்பிக்கும்படி கோரிக்கை வைக்கிறார்கள். அதனால், அவர்களது குடும்ப புகைப்படத்துடன் மறைந்த உறவினர்களின் புகைப்படங்களை கைகளால் வரைந்தும், டிஜிட்டல் முறையில் அழகூட்டியும் கொடுக்கிறோம்.
* ஓவியம் மூலமாக எப்படி உயிர் கொடுக்கிறீர்கள்?
சிறு பாஸ்போட் சைஸ் புகைப்படம் இருந்தாலே போதும், அதிலிருக்கும் முகஜாடையை வைத்து அவர்கள் குடும்பத்தினருடன் நிற்கும்படி, அமர்ந்திருக்கும்படி, வாழ்த்துவதுபோல... என என்னுடைய கற்பனை திறனுக்கு ஏற்பவும், அவர்களின் விருப்பத்திற்கு ஏற்பவும், வரைந்து கொடுக்கிறேன்.
* உணர்வு பூர்வமான ஓவியங்கள் கிடைக்கும்போது, உணர்ச்சிகள் அதிகமாக வெளிப்படுமே?
ஆம்...! இல்லாத உறவுகளை, தத்ரூப ஓவியங்களாக கொண்டுவரும்போது, குறிப்பாக அவர்களுடன் நிற்கும்படி வரைந்து கொடுக்கும்போது அவர்களின் கண்களில் ஆனந்த கண்ணீர் ததும்பிவிடும். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் மனதளவில் பலவீனமானவர்கள் என்பதை பல தருணங்களில் கண்கூடாக பார்த்திருக்கிறேன். ஆனந்த கண்ணீரும், சிரிப்புமாக ஓவியத்தை வாங்கி செல்வதும், ஓவியத்தை மற்றவர்களுக்கு புகைப்படம் எடுத்து அனுப்புவதும் என... உணர்வு பூர்வமான பல தருணங்களை அனுபவித்திருக்கிறேன்.
* பலவிதமான ஓவிய கலை இருக்கிறது. உங்களுக்கு என்னென்ன கலைகள் தெரியும்?
பென்சில் ஓவியம் நன்றாக வரைவேன். தூரிகை பயன்பாடும் சிறப்பாக இருக்கும். டிஜிட்டல் ஆர்ட், மண்டலா ஓவியம், ரிவர்ஸ் ஆர்ட் (தலைகீழாக ஓவியம் வரைவது), இன்ஸ்டென்ட் ஆர்ட் (பார்த்த சில நொடிகளிலேயே வரைந்து முடிப்பது).... என 10 விதமான ஓவிய கலை வடிவங்களை பயின்றிருக்கிறேன். இவை அனைத்துமே, சுயமாக நானே கற்று உணர்ந்து கொண்டவை.
* உங்களுடைய ஓவியத்திறனுக்கு பாராட்டுகள் கிடைத்திருக்கின்றனவா?
ஆம்...! நிறைய விருதுகள் கிடைத்திருக்கின்றன. பல பள்ளி-கல்லூரிகளில் நடக்கும் ஓவியப்போட்டிகளுக்கு நடுவராக சென்றிருக்கிறேன்.
* ஓவியம் வரைய எவ்வளவு நேரமாகும்?
ஒரு முகம் வரைய ஒரு மணிநேரமாகும். அதுவே குடும்ப ஓவியமாக இருந்தால், முகங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நேரம் அதிகமாகும்.
* என்ஜினீயரிங் படித்திருக்கிறீர்கள். இருப்பினும் ஓவியம் வரைகிறீர்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்?
ஓவியர் பணியில் பணமும் கிடைக்கிறது. மனநிறைவும் கிடைக்கிறது. மற்றவர்களை மகிழ்விக்கும் இந்த கலையை நான் என்றுமே, குறைவாக மதிப்பிட்டதில்லை.
* பெற்றோரின் ஆதரவு கிடைக்கிறதா?
நிறையவே கிடைக்கிறது. என்னுடைய ஆரம்ப கால ஓவியர் முயற்சிக்கு அம்மா முழுதுணையாக இருந்தார். இப்போது அப்பாவும் உணர்ந்து கொண்டார்.
இல்லாத உறவுகளை, தத்ரூப ஓவியங்களாக கொண்டுவரும்போது, குறிப்பாக அவர்களுடன் நிற்கும்படி வரைந்து கொடுக்கும்போது அவர்களின் கண்களில் ஆனந்த கண்ணீர் ததும்பிவிடும். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் மனதளவில் பலவீனமானவர்கள் என்பதை பல தருணங்களில் கண்கூடாக பார்த்திருக்கிறேன்.