சாக்கடையில் இருந்து வைரம் தயாரிக்கலாம்!
சாக்கடை நீரிலிருந்து வைரமெடுக்க முடியும் என்பதை ஜேம்ஸ் பட்லர் பல ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.;
ஊரெல்லாம் மழை பெய்து சாக்கடையாக இருக்கிறதே என்று மனம் வருந்துகிறீர்களா? கவலைப்படாதீர்கள். வருங்காலத்தில் இதே சாக்கடைகள் வைரச் சுரங்கங்களாக மாறக்கூடும். வாஷிங்டனில் அமெரிக்கக் கடற்படை ஆராய்ச்சிக் கூடத்துக்கு அருகில் சாக்கடை நீரைப் பக்குவப்படுத்துகிற பெரிய ஆலை உள்ளது. இந்த ஆலையில் சாக்கடை நீரைப் பயன்படுத்தி தினமும் 6.5 லட்சம் கன அடி மீத்தேன் வாயு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த வாயுவில் சிறிதளவு கார்பன் அடங்கியுள்ளது.
கடற்படை ஆராய்ச்சிக் கூடத்தின் விஞ்ஞானியான ஜேம்ஸ் பட்லர், சிறிதளவு மீத்தேன் வாயுவை 4 ஆயிரம் பாரன்ஹீட் அளவுக்குச் சூடேற்றப்பட்ட டங்ஸ்டன் இழைகளின் மீது செலுத்தினார். அப்போது அதிக வெப்பத்தால் மீத்தேன் வாயு சிதைவுற்று கார்பன் மற்றும் ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றின்மேல் ஒன்றாகப் படிந்து, மெல்லிய வைரப் படலத்தை தோற்றுவித்தது. வைரம் என்பது கார்பனின் புறவேற்றுமை வடிவமாகும்.
சாக்கடை நீரிலிருந்து வைரமெடுக்க முடியும் என்பதை ஜேம்ஸ் பட்லர் பல ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். பெரிய அளவில் வைரம் சாக்கடையிலிருந்து தயாரிக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆராய்ச்சி மட்டும் வெற்றி பெற்றால் இந்தியாவில் மாசடைந்திருக்கும் ஆறுகள் மிகப்பெரிய அளவில் வைர உற்பத்திக்கு உத்தரவாதம் தரும்.