பிளாஸ்டிக் மரம்..!

Update:2023-07-22 14:34 IST

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 'அன்தோனியா' என்ற அணுவியல் வல்லுனர், 'பிளாஸ்டிக் மரம்' என்று ஒரு வகை மரத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த பிளாஸ்டிக் மரம் வெறும் அழகுப் பொருள் அல்ல. ஒரு மரம் செய்யும் எல்லா வேலைகளையும் இது செய்யுமாம். ஆனால், இந்த மரத்துக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டியதில்லை. இது வளராது! பூக்காது! காய்க்காது! தீப்பிடிக்காது! எதுவுமே ஆகாது!

இந்த செயற்கை பிளாஸ்டிக் மரம் பாலியூரித்தீன் மற்றும் பீனாலிக் போம் என்ற ரசாயனப் பொருட்களின் கூட்டால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கலவைதான் வேர்கள். இது மண்ணிற்கு மேலேயுள்ள பகுதியைத் தாங்கிப் பிடிக்கும் நங்கூரமாக மட்டுமே செயல்படும். மற்றபடி பூமியிலிருந்து நீர் மற்றும் தாதுப்பொருட்களை உறிஞ்சாது.

பூமிக்கு மேலேயுள்ள பகுதி குட்டை பனையைப் போலிருக்கும். உச்சியில் ஓலை போன்ற ஒரு பகுதிதான் முக்கியம். இது விசேஷ ரசாயனப் பொருட்களால் ஆனது. இது காற்றின் ஈரப்பதத்தை வேகமாக உறிஞ்சி மெதுவாக வெளியிடும் தன்மை கொண்டது. இரவு நேரத்தில் அதிக ஈரப்பதத்தை உறிஞ்சி, பகல் நேர வெப்பத்தை இது தணிக்கும். இதன் மூலம் மழையையும் உண்டாக்கித் தரும் என்கிறார்கள் இதைப் படைத்த விஞ்ஞானிகள். இந்த மரங்களை கொண்டு, செயற்கை மழை காடுகளையும் உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.

இனி சுற்றுச்சூழலை பிளாஸ்டிக் கெடுக்கிறது என்று யாரேனும் சொல்ல முடியுமா?

Tags:    

மேலும் செய்திகள்