திறனறி தேர்வில் அசத்தி, விமானத்தில் பறந்த மாணவி..!

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவியை விமானத்தில் தலைமை ஆசிரியை அழைத்து சென்றுள்ளார்.

Update: 2023-07-09 11:05 GMT

'விமான பயணம் என்பது எங்களை போன்ற ஏழை, எளிய குடும்பத்திற்கு எட்டாக்கனி போன்றது. நான் விமானத்தில் பயணம் செய்ததற்கு, எனது தலைமை ஆசிரியைக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்' என்று கூறுகிறார் மாணவி மிருணாளினி.

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான திறனறி தேர்வில் வெற்றி பெற்றதற்காக பரிசாக அளிக்கப்பட்ட விமான பயணத்தை பற்றித்தான், அவர் இவ்வாறு சிலாகித்து கூறுகிறார்.

பொதுவாக பள்ளி மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்றால் பரிசாக பேனா, புத்தகம் போன்றவையே ஆசிரியர்களால் வழங்கப்படும். ஆனால் மிருணாளினி படித்த அரசு பள்ளியின் தலைமை ஆசிரியை அமுதா முற்றிலும் வித்தியாசமாக சிந்தித்து, விமான பயணத்தை மாணவி மிருணாளினிக்கு தனது பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார். இது குறித்து மாணவி மிருணாளினியிடம் சிறு நேர்காணல்...

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பயணித்த விமானத்தின் முன்பு மாணவி மிருணாளினி, தலைமை ஆசிரியை அமுதா.

* முதலில் உங்களை பற்றி கூறுங்கள்?

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே தழுதாழைமேடு ஊராட்சியில் உள்ள வானவநல்லூர் கிராமம் எனது சொந்த ஊர். எனது பெற்றோர் ராதாகிருஷ்ணன்-ஹேமலதா. அவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். எனக்கு ஒரு தங்கை, ஒரு தம்பி உள்ளனர். நான் ஒன்றாம் வகுப்பில் இருந்து 8-ம் வகுப்பு வரை வானவநல்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தான் படித்தேன். தற்போது தஞ்சை மாவட்டம், அணைக்கரையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறேன்.

தாய், தந்தையுடன்..

* திறனறி தேர்வு பற்றி எப்படி தெரியவந்தது?

நான் 8-ம் வகுப்பு படித்தபோது, எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியை மத்திய அரசின் திறனறி தேர்வு குறித்து மாணவ, மாணவிகளிடம் கூறினார். அந்த தேர்வில் வெற்றி பெற்றால் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக மத்திய அரசால் வழங்கப்படும் என்றும், அந்த தொகை எங்களின் மேற்படிப்பிற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து 8 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத தயார் ஆனோம். எங்களுக்காக அந்த தேர்வு கட்டணத்தை தலைமை ஆசிரியை அமுதாவே செலுத்திவிட்டார்.

* தேர்வுக்கு தயாரான விதம் பற்றி கூறுங்கள்?

பள்ளியில் தினமும் மதிய உணவு சாப்பிட்டு முடித்தவுடன், சுமார் 40 நிமிடங்கள் எங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது பொது அறிவு, கணிதம் உள்ளிட்ட சுமார் 200 வினாக்களுக்கு பதில் அளிப்பேன். மாலையில் பள்ளி நேரம் முடிந்த பின்னர், மீண்டும் 1 மணி நேரம் எங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் எனக்கு பயிற்சி அளித்தனர். அவர்கள் அளித்த பயிற்சியால் தான் என்னால் திறனறி தேர்வில் தேர்ச்சி பெற முடிந்தது. மேலும் எனது தாயும், தந்தையும் எனக்கு உத்வேகம் அளித்தனர். தேர்வில் நான் தேர்ச்சி பெற்றது தெரியவந்தபோது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

* விமானத்தில் பயணித்த அனுபவம் பற்றி?

திறனறி தேர்விற்கு பயிற்சி பெற்றபோது, அந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களை விமானத்தில் அழைத்து செல்வதாக தலைமை ஆசிரியை கூறினார். தேர்வு எழுதிய 8 பேரில் நான் மட்டுமே தேர்ச்சி பெற்றேன். இந்நிலையில் திடீரென கடந்த மாதம் 2-ந் தேதி எனது வீட்டிற்கு வந்த தலைமை ஆசிரியை அமுதா, 'நாளை விமானத்தில் பயணிக்க தயாராக இரு' என்றார். இது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அவர் கூறியபடியே மறுநாள் காலை எனது வீட்டிற்கு வந்த அவர், அங்கிருந்து என்னை ஒரு காரில் திருச்சி விமான நிலையத்திற்கு அழைத்து சென்றார்.

மீனம்பாக்கம் விமான நிலையத்தில்..

அதுவரை நான் விமான நிலையத்தை பார்த்ததே இல்லை. இதனால் அங்குள்ள நடைமுறைகளை பார்த்தபோது எனக்கு வியப்பாக இருந்தது. பின்னர் நாங்கள் விமானத்தில் ஏறி, இருக்கையில் அமர்ந்தோம். விமானம் பறக்க தொடங்கியபோது, இறக்கை கட்டி பறப்பதை போன்று புதுவித அனுபவமாக இருந்தது. அந்த விமானத்தில் நாங்கள் சென்னைக்கு பயணித்தோம். அங்கு மெரினா கடற்கரை, நினைவு சின்னங்கள் போன்றவற்றை கண்டு களித்தோம். பின்னர் சென்னையில் ெமட்ரோ ரெயிலில் பயணித்தது மிகுந்த உற்சாகத்தை அளித்தது.

சென்னையில் மெட்ரோ ரெயிலில் மாணவி பயணம் செய்த போது..

நான் விமானத்தில் பயணிப்பேன் என்று நினைத்து பார்த்ததே இல்லை. இதனால் விமான நிலையத்தில் சென்றது முதல் விமானத்தில் பயணித்தது வரை கனவு போல் இருந்தது. இது எனது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்று.

* உங்கள் எதிர்கால லட்சியம் என்ன?

நான் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற வேண்டும். பின்னர் பட்டப்படிப்பு முடித்தவுடன் குடிமைப்பணி தேர்வு எழுதி மாவட்ட கலெக்டராக வேண்டும் என்ற லட்சியம் உள்ளது. தற்போதும் பல கிராமங்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலை உள்ளது. அதனை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி அமைக்க வேண்டும்.

மேலும் வாழ்வில் ஒரு முறையாவது விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பது பலரின் ஆசையாக இருக்கும். எனவே எனது தாய்-தந்தையை சென்னையில் இருந்து டெல்லி வரை விமானத்தில் அழைத்து சென்று நாடாளுமன்றம், செங்கோட்டை மற்றும் அந்த பகுதியில் உள்ள முக்கிய இடங்களை அவர்களுக்கு சுற்றிக்காண்பிப்பதாக கூறியுள்ளேன்.

மாணவிக்கு விமான பயணத்தை பரிசளித்த தலைமை ஆசிரியை அமுதா கூறியதாவது...


''வானவநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நான் 10 ஆண்டுகளாக தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறேன். கடந்த சில ஆண்டுகளாக இந்த பள்ளியின் மாணவர்கள் திறனறி தேர்வு எழுதி வருகின்றனர். வருடத்திற்கு ஒன்று அல்லது 2 மாணவர்கள் தேர்ச்சி பெற்று வந்தனர். அவ்வாறு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இத்தகைய நிலையில் அந்த தேர்வில் தேர்ச்சி பெறுகிற மாணவர்களுக்கு நான் வழங்கும் பரிசு, அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்து கொள்ளும் வகையில் அமைய வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக யோசித்தபோது, திறனறி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை விமானத்தில் அழைத்து சென்றால் என்ன? என்று தோன்றியது. இது பற்றி மாணவர்களிடம் தெரிவித்து அவர்களை ஊக்கப்படுத்தினேன். அவர்களுக்கும் அது உத்வேகமாக இருந்தது'' என்றவர், மாணவ-மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்த விதம் பற்றி கூறுகிறார்.

''கடந்த கல்வி ஆண்டில் எங்கள் பள்ளியில் திறனறி தேர்வுக்கு 8 மாணவர்கள் தயாரானார்கள். அவர்களுக்கு மதிய உணவு இடைவேளையின் போதும், பள்ளி நேரம் முடிந்த பின்பும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. விடுமுறை நாட்களில் கூட அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பெற்றோர்களும் மாணவர்களின் பயிற்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். 8 மாணவ, மாணவிகளும் தேர்வுக்கு நல்ல முறையில்தான் தயார் ஆனார்கள். ஆனால் அவர்களில் மாணவி மிருணாளினி மட்டுமே தேர்ச்சி பெற்றார். இதனால் நான் வாக்கு அளித்தபடி, அவரை எனது சொந்த செலவில் திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து சென்றேன். சென்னையில் முக்கிய இடங்களை அவருக்கு சுற்றிக் காண்பித்தேன். மெட்ரோ ரெயிலிலும் பயணித்தோம். அதைத்தொடர்ந்து ரெயிலில் பயணம் செய்து விருத்தாசலம் வந்தோம். அங்கிருந்து பஸ்சில் ஊருக்கு திரும்பினோம். இந்த தேர்வில் மற்றவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால், அவர்களையும் விமானத்தில் பயணிக்க செய்திருப்பேன். இருப்பினும் அந்த மாணவிக்கு வழங்கப்பட்ட பரிசு, இந்த கல்வியாண்டில் தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அமையும் என்று நம்புகிறேன். அவர்களுக்கும் விமானத்தில் பயண பரிசு காத்திருக்கிறது'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்