சீனாவில் பாண்டா காடு!

Update:2023-08-19 09:13 IST

சீனாவில் வேகமாக அழிந்துவரும் பாண்டா கரடிகளைக் காப்பாற்ற, புதிய வனப்பூங்கா ஒன்றை கட்டமைக்க சீன அரசு முடிவு செய்துள்ளது. இக்காடு, அமெரிக்காவின் யெல்லோஸ்டோன் தேசியப்பூங்காவை விட 2 மடங்கு பெரியது. தற்போது சீனாவிலுள்ள 67 துண்டு துண்டான காட்டுப்பகுதிகளில் பாண்டா கரடிகள் வாழ்ந்து வருகின்றன.

அவை அனைத்தையும் ஒன்று சேர்த்து, 27 ஆயிரத்து 134 கி.மீ. பரப்பளவில் வனப்பூங்கா அமைப்பது அரசின் பாண்டா பாதுகாப்பு பிளான். இந்த ஒன்றிணைவின் மூலம் பல்வேறு தனித்தனி காடுகளில் உள்ள பாண்டாக்கள் ஒரே குடும்பமாக இணைய எக்கச்சக்க வாய்ப்புகள் உள்ளன என்பது ஷின்குவா செய்தி நிறுவனத்தின் தகவல்.

தற்போது சீனாவிலுள்ள பாண்டாக்களின் எண்ணிக்கை 1,850. 2025-ம் ஆண்டுக்குள் இவற்றின் எண்ணிக்கையை 2 ஆயிரமாக மாற்றுவதுதான் சீன அரசின் லட்சியம். பாண்டாக்கள் தொடர்ந்து குறைந்து வருவதற்கு அதன் வாழிடம் மூர்க்கமாக அழிக்கப்படுவதுதான் முக்கிய காரணம். தற்போது அமைக்கப்படவுள்ள வனப்பூங்காவின் மூலம் அழியும் நிலையிலுள்ள 8 ஆயிரம் விலங்குகள் மற்றும் தாவரங்கள் காப்பாற்றப்பட வாய்ப்புண்டு. சான்ஷி, சிச்சுவான், கான்ஷூ ஆகிய காப்பக பகுதிகளில் பாண்டா கரடிகள் வாழ்ந்து வருகின்றன.

"புதிய வனப்பூங்கா உயிரிய பன்மைத்தன்மையின் சொர்க்கமாக இருக்கும் என பல்வேறு சூழலியலாளர்களும் விஞ்ஞானிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்" என மகிழ்ச்சியாகப் பேசுகிறார், சிச்சுவான் ஷெங்டு பாண்டா இனப்பெருக்க மையத்தின் இயக்குநர்.

கடந்தாண்டு வனக்காப்பகத்தில் பிறந்த 64 பாண்டா கரடிக்குட்டிகளில் 54 மட்டுமே உயிர்பிழைத்துள்ளன. தற்போது பிறக்கும் புதிய பாண்டா குட்டிகள், சிறிது காலத்திற்குப் பிறகு காடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டு விடுகின்றன. 2014-ம் ஆண்டு அரசுக்கு சூழல் ஆர்வலர்களால் கோரிக்கையாக கூறப்பட்டதுதான் பாண்டா கரடிகளுக்கான பூங்கா.

ஆனால் இந்த பிரமாண்ட பூங்கா அமைக்க சிஷான் பகுதியில் தலைமுறை தலைமுறையாக வசிக்கும் 1 லட்சத்து 70 ஆயிரம் மக்களுக்கு மறுவாழ்வுக்கான வழியை அரசு உருவாக்கவேண்டியது அவசியம். வனத்திலுள்ள உயிர்களும் பூமியைச் சேர்ந்தவை என்ற எண்ணத்தை மனிதர்களும் மறக்காதிருப்பதே அவற்றின் இருப்பை உறுதி செய்யும்.

Tags:    

மேலும் செய்திகள்