நானோ தொழில்நுட்ப படிப்புகளும், வேலைவாய்ப்புகளும்...!
புதிய தொழில்நுட்பமான நானோ தொழில் நுட்பம் 21-ம் நூற்றாண்டில் முதன்மையான இடத்தைப் பிடிக்கும் என்கின்றனர்.
இயற்பியல், வேதியியல், உயிரியல், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் புதிய தொழில்நுட்பமான நானோ தொழில் நுட்பம் 21-ம் நூற்றாண்டில் முதன்மையான இடத்தைப் பிடிக்கும் என்கின்றனர். இதனால் உலகம் முழுவதும் நானோ தொழில்நுட்பம் குறித்த பல்வேறு படிப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் இத்தொழில்நுட்பப் படிப்புகள் பல்வேறு கல்வி நிறுவனங்களில் இடம்பெறத் தொடங்கியிருக்கின்றன.
* படிப்புகள்
இந்தியாவில் நானோ தொழில்நுட்பம் குறித்த படிப்புகளில் நானோ அறிவியல், நானோ தொழில்நுட்பம் எனும் இரு பிரிவுகளில் இளநிலைப் பட்டப்படிப்புகளும் (B.Sc./B.E or B.Tech), முதுநிலைப் பட்டப்படிப்புகளும் (M.Sc/M.Tech) இடம்பெற்றிருக்கின்றன. முதுநிலைப் பட்டப்படிப்புகளில் நானோ தொழில்நுட்பம் (Nano-Technology) எனும் பொதுவான பாடப்பிரிவு தவிர, தற்போது பாலிமர் நானோ தொழில்நுட்பம் (Polymer Nano-Technology), உடல்நலத்திற்கான நானோ தொழில்நுட்பம் (Health Care Nano Technology) என்பது போன்ற சில சிறப்புப் பாடங்களுடான முதுநிலைப் பட்டப்படிப்புகளும் தொடங்கப்பட்டிருக்கின்றன.
சில கல்லூரிகளில் நானோ அறிவியல், நானோ தொழில்நுட்பப் பாடங்களில் ஐந்தாண்டு கால அளவிலான ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டப்படிப்புகள் (M.Sc./M.Tech) இடம்பெற்றிருக்கின்றன. இதுபோல் இரட்டைப் பட்டப்படிப்பு (Dual Course) முறைகளிலும் முதுநிலைப் பட்டப்படிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. நானோ தொழில்நுட்பம் குறித்த ஆய்வுப் படிப்புகளாக நானோ அறிவியலில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil) மற்றும் முனைவர் (Ph.D) பட்டப்படிப்புகளும், நானோ தொழில்நுட்பத்தில் முனைவர் (Ph.D) பட்டப்படிப்பும் இடம்பெற்றிருக்கின்றன. இவை தவிர, ஒரு சில கல்லூரிகளில் நானோ அறிவியலில் முதுநிலைப் பட்டயப்படிப்பும், சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
* கல்வித் தகுதிகள்
நானோ தொழில்நுட்பப் படிப்புகளுக்குப் பொதுவாக பிளஸ்-2 வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்திருக்க வேண்டும் என்கிற பொதுக் கல்வித் தகுதி இருக்கின்றது. ஒவ்வொரு நிலையிலான படிப்புகளுக்கும் தேவையான கல்வித்தகுதி விவரங்கள் கீழே குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
* இளநிலைப் பட்டப்படிப்பு
மூன்று ஆண்டுகால அளவிலான நானோ அறிவியல் (B.Sc) இளநிலைப் பட்டப்படிப்பிற்கு பிளஸ்-2 வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் (PCM) அல்லது இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் (PCB) பாடங்களில் 60 சதவிகிதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நான்கு ஆண்டுகால அளவிலான நானோ தொழில்நுட்பம் (B.Tech) இளநிலைப் பட்டப்படிப்பிற்கு பிளஸ்-2 வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் (PCM) பாடங்களில் 60 சதவிகிதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில மாநிலங்களில் இந்த மதிப்பெண்களில் அரசு இடஒதுக்கீட்டு நடைமுறைகளுக்கேற்ப மதிப்பெண் தளர்வுகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன.
* முதுநிலைப் பட்டப்படிப்பு
இரண்டு ஆண்டுகால அளவிலான நானோ அறிவியல் (M.Sc) முதுநிலைப் பட்டப்படிப்பிற்கு நானோ அறிவியல் அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவில் 60 சதவிகிதம் மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் (B.Sc) பெற்றிருக்க வேண்டும். நானோ தொழில்நுட்பம் (M.Tech) முதுநிலைப் பட்டப்படிப்பிற்கு 60 சதவிகிதம் மதிப்பெண்களுடன் பொறியியலில் இளநிலைப் பட்டம் (B.E/B.Tech) அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல், இயற்கை அறிவியல், கணிதம், மின்னணுவியல் (Electronics), கருவியியல் (Instrumentation) போன்ற அறிவியல் தொடர்புடைய பாடத்தில் முதுநிலைப் பட்டம் (M.Sc) பெற்றிருக்க வேண்டும்.
* ஆய்வுப் படிப்புகள்
நானோ அறிவியல் பாடத்தில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil) மற்றும் முனைவர் (Ph.D) போன்ற ஆய்வுப் படிப்புகளுக்கு நானோ அறிவியல் பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நானோ தொழில்நுட்பம் பாடத்தில் முனைவர் (Ph.D) பட்டப்படிப்பிற்கு ஏதாவதொரு பொறியியலில் முதுநிலைப் பட்டம் (M.E/M.Tech) அல்லது பொறியியலில் இளநிலைப் பட்டம் (B.E/B.Tech) அல்லது ஏதாவதொரு அறிவியல் பாடத்தில் முதுநிலைப் பட்டம் (M.Sc) பெற்றிருக்க வேண்டும்.
* வேலை வாய்ப்புகள்
நானோ தொழில்நுட்பம் படித்த மாணவர்களுக்கு மருந்துத் தயாரிப்பு (Pharmaceutical), உயிரித் தகவலியல் (Bio-Informatics), நானோ மருத்துவம் (Nano Medicine), நானோ நச்சியல் (Nano Toxicology), நானோ ஆற்றல் உற்பத்தி (Nano-Power Generating), முதல்நிலை உயிரணு வளர்ச்சி (Stem Cell Development) போன்ற பல்வேறு துறைகளிலான நிறுவனங்களில் முதன்மையான வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. இதுபோல், உடல்நலம் (Health), சுற்றுச்சூழல் (Environment), வேளாண்மை (Agriculture), மரபியல் (Genetics), தடய அறிவியல் (Forensic Science), உயிரித் தொழில்நுட்பம் (Bio-Technology), தகவல் மற்றும் ஊடகம் (Communication & Media), விண்வெளி ஆய்வு (Space Research), உணவு மற்றும் பானங்கள் (Food & Beverage) போன்ற பிற நிறுவனங்களிலும் குறிப்பிடத்தக்க அளவிலான வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. மேலும் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், ஆய்வு நிறுவனங்கள் போன்றவற்றில் ஆசிரியர் மற்றும் ஆய்வாளர் பணியிடங்கள் அதிக அளவில் இருக்கின்றன.