வரவேற்பு மிகுந்த வணிகவியல் படிப்புகள்..!

Update:2023-08-19 08:52 IST

நம் இந்தியாவில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வணிகவியல் படிப்புகள் மிகவும் செல்வாக்குப் பெற்று விளங்குகின்றன. குறிப்பாக 'பி.காம்' படிப்பிற்கு, மாணவர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது. நமக்கு பி.காம் என்று மட்டுமே தெரிந்த வணிகவியல் படிப்பில், இன்று பலவிதமான படிப்புகள் வந்துவிட்டன. அவை ஒவ்வொன்றையும் விளக்கமாக தெரிந்து கொள்வோம்.

பி.காம்

பிளஸ்-2 படித்த பின்பு கலைப்புலம் சார்ந்தோருக்கு பி.காம் படிப்பு மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. தமிழகம் உள்பட இந்தியாவில் பி.காம் படிப்புகள் அதிக மாணவர்களால் விரும்பி படிக்கப்படுகின்றன. பிளஸ்-2 படிப்பில் வணிகவியல், கணக்குப்பதிவியல் படித்திருந்தால் பி.காம் படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவர். இந்த மூன்றாண்டுப் படிப்பில் 6 பருவங்கள் உள்ளன.

பி.காம் படித்து முடித்தால் கணக்குப்பதிவு, நிதி, வரி, நிர்வாக இயக்கம், வரி விதிப்புச் சட்டம் போன்ற துறைகளில் பணி வாய்ப்புகள் பெறலாம். பொதுவாக பி.காம் படித்தால் வங்கிப் பணிக்குச் செல்லலாம் என்ற எண்ணம் மாணவர்களிடையே உள்ளது. பி.காம் படித்தால் தான் வங்கிப் பணிக்குச் செல்ல முடியும் என்பதல்ல. வங்கிப் பணிக்கான போட்டித் தேர்வு எழுத ஏதாவது ஓர் இளநிலைப் பட்டம் பெற்றிருந்தால் போதும். பி.காம் மூன்றாண்டுகளுக்கும் சேர்த்து 40 பாடங்களுக்கு குறையாமல் இருக்கும்.

பி.காம் படித்து முடித்தால் முதுநிலை படிப்புகள் அல்லது அது தொடர்பான வேறு சில படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம். எம்.காம், சி.எஸ் (Company Secretary), சி.ஏ (Chartered Accountancy) சி.எப்.ஏ (Charted financial Analyst), சி.டபுள்யு.ஏ (Cost and work Accountancy) இவை போன்ற வேறு சில படிப்புகளும் உள்ளன.

பி.காம் (ஹானர்ஸ்)

பி.காம் ஹானர்ஸ் படிப்பில் சேர பி.காம் படிப்பிற்கான தகுதியே போதுமானது. இதுவும் மூன்றாண்டு படிப்பாகும். மொத்தம் மூன்றாண்டிற்கும் ஆறு பருவங்கள் வகுப்புகள் நடத்தப்படும். இப்படிப்பில் மொத்தம் 41 பாடங்கள் நடத்தப்படும். ஒரு பாடம் பயிற்சிக்குரியதாகும் (Project). சந்தை மேலாண்மை (Marketing management), கணக்குப் பதிவியல் (Accountancy), நிதி மேலாண்மை (Financial Management), உலக வர்த்தகம் மற்றும் நிதி (International Trade & Finance), இ-வணிகம் (E-commerce), வங்கி மற்றும் மனிதவள மேலாண்மை (Bank and Human Resources Management) தொழிற்சாலை பற்றிய படிப்புகளையும் இந்தப் பட்டம் உள்ளடக்கியது. உலக அளவிலான தரத்தில் இப்படிப்பு உருவாக்கப்படுகிறது.

நுழைவுத் தேர்வின் அடிப்படையில், மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். நவீன கால முன்னேற்றம் வரையிலான செய்திகள் இப்படிப்பில் கொடுக்கப்படும். பி.காம் (பொது) படிப்பை விட பி.காம் (ஹானர்ஸ்) அதிக வேலைவாய்ப்புகளைக் கொடுக்கிறது.

பி.காம் (கணக்குப்பதிவு மற்றும் நிதி)

(Bachelor of Commerce in Accounting and Finance)

இந்த பி.காம் படிப்பும் பிளஸ்-2 படிப்பிற்குப் பின் 3 ஆண்டுகள் படிப்பதாகும். பட்டப்படிப்பு முடித்த பின்பு கணக்குப்பதிவு மற்றும் நிதி தொடர்பான துறைகளில் அதிக வேலை வாய்ப்புகளைப் பெறலாம். அத்துடன் நிதி நிறுவனங்கள், அரசுத்துறைகள், பொது நிறுவனங்கள், சந்தை ஆய்வு, வரவு-செலவுத் திட்டங்கள் துறை, வங்கித்துறை போன்றவற்றில் அதிக வேலைவாய்ப்புகளை பெறலாம். இப்படிப்பில் 39 பாடங்களும் 2 பயிற்சிப் பாடங்களும் உள்ளன. குழுவிவாதம், பயிற்சி, கருத்துரைகள் முன் வைக்கப்படுதல், தொழிற்சாலைப் பயிற்சி, விரிவுரை என்று இப்பாடத்திட்டம் அமைந்துள்ளது. வியாபார மேலாண்மையில் மாணவர்களுக்கு அறிவைப் புகட்ட இப்படிப்பு உதவுகிறது. இப்படிப்பை முடிப்போர் எம்.பி.ஏ, சி.எப்.எஸ், சி.எஸ், எம்.காம் படிப்புகளில் முதுநிலை பயிலலாம்.

பி.காம் (Bachelor of Commerce in Banking and Insurance)

இப்படிப்பில் கணக்குப்பதிவு, வங்கி, காப்பீட்டுச் சட்டங்கள், வங்கிச் சட்டங்கள், உலக வங்கி, ஆயுள் காப்பீட்டு நடைமுறைகள், ஆயுள் காப்பீட்டின் உதவி பற்றி மாணவர்களுக்குக் கற்றுத் தருகிறது. இந்தப் படிப்பில் மொத்தம் 38 பாடங்களும், 2 பயிற்சிகளும் (2 Projects) உள்ளன. பி.காம் முடித்த பின்பு எம்.காம், எம்.பி.ஏ, சி.எப்.ஏ, சி.எஸ் போன்ற படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம்.

பி.காம் (Bachelor of Commerce in Financial Marketing)

இப்படிப்பு நிதி, முதலீடு, பங்குச்சந்தை, மூலதனம், பணமாற்றம், வர்த்தகம், கட்டணம், மதிப்பீடு, விலை நிர்ணயம், பல்வேறு சந்தைகளின் சக்திகள், நிதி சேகரிப்பு, நிறுவனங்கள், நிதி மேலாண்மை, வெளிநாட்டுச் சந்தை செயல்பாடு பற்றி ஆறு பருவங்களில் 41 பாடங்களைக் கொண்டு கற்றுத் தரப்படுகிறது.

இப்படிப்பை முடித்தோர் முதுநிலைப் படிப்பாக எம்.காம், ஐ.சி.டபிள்யு ஏ, எம்.பி.ஏ. படிப்புகளைப் படிக்கலாம். இந்தப் படிப்பிற்குப் பின்பு பயிற்சி இணையாளர், நிதி அதிகாரி, நிதி கட்டுப்பாட்டாளர், நிதி திட்டமிடுபவர் மற்றும் ஆலோசகர், ஆயுள் காப்பீட்டு மேலாளர் போன்ற பதவிகளுக்குச் செல்ல முடியும்.

பி.காம் படித்து முடித்தால் கணக்குப்பதிவு, நிதி, வரி, நிர்வாக இயக்கம், வரி விதிப்புச் சட்டம் போன்ற துறைகளில் பணி வாய்ப்புகள் பெறலாம். பொதுவாக பி.காம் படித்தால் வங்கிப் பணிக்குச் செல்லலாம் என்ற எண்ணம் மாணவர்களிடையே உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்