'மைண்ட் ரீடிங்' ஸ்பெசலிஸ்ட்
‘மைண்ட் ரீடிங்’ (மேஜிக்) என்பது நிகழ்த்து கலை. மேடையில் நின்றபடி, எந்த இடையூறும் இல்லாமல் நிகழ்த்தி விடலாம். ஆனால், அத்தகைய நிகழ்த்து கலையில் பார்வையாளர்களின் பங்களிப்பை உண்டாக்குவது என்பது சவாலான விஷயம்.;
அது சில சமயங்களில், மைண்ட் ரீடிங் கலைஞர்களுக்கு பெரும் தலைவலியாக மாறிவிடலாம். இவ்வளவு சவால்கள் இருந்தும், மைண்ட் ரீடிங் என்ற நிகழ்த்து கலையை, பார்வையாளர்களின் பங்களிப்போடு வித்தியாசமாக செய்து அசத்துகிறார், ராகேஷ் ஷியாம்.
மதுரையை பூர்வீகமாக கொண்ட இவர், பாலிடெக்னிக் கல்வி பயின்றதோடு தனக்கு பிடித்தமான மைண்ட் ரீடிங் கலையோடு ஐக்கியமாகிவிட்டார். அவரது வாழ்க்கையில் 'மைண்ட் ரீடிங்' நிகழ்த்திய மேஜிக் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
''1980 காலகட்டம் அது. எனக்கு 8 வயது இருக்கும். சாலைகளில், பாம்புகளை வைத்து வித்தைக்காட்டும் பாம்பாட்டி மூலமாகவே, மேஜிக் என்ற மைண்ட் ரீடிங் கலை எனக்கு அறிமுகமானது. அவர் பாம்புகளை வைத்து மட்டுமே வித்தை காட்டவில்லை. கூடுதலாக, வெள்ளை காகிதத்தை எரித்து மறுநொடியே அதை 10 ரூபாய் நோட்டாக மாற்றி அசத்தினார். இவ்வளவு வித்தைகளை செய்து காட்டிவிட்டு, சுற்றி நின்று பார்த்தவர்களிடம், 50 பைசா, ஒரு ரூபாய் காசுகளை பரிசாக வாங்கி கொண்டிருந்தார்.
சாதாரண வெள்ளை காகிதத்தை எரித்து 10 ரூபாய் நோட்டாக மாற்ற தெரிந்த அவருக்கு, ஏன் பிழைக்க தெரியவில்லை?, நிறைய வெள்ளை காகிதங்களை எரித்து ரூபாய் நோட்டாக மாற்றிக்கொள்ளலாமே? என்ற கேள்வி என் மனதிற்குள் எழுந்து கொண்டே இருந்தது. அப்போதுதான், அது ஒருவிதமான மைண்ட் ரீடிங் எனப்படும் மேஜிக் கலை என்பதை உணர்ந்து கொண்டேன். அந்த கலைக்கு ரசிகனாக மாறினேன்'' என்றவர், 8 வயதிலிருந்தே மைண்ட் ரீடிங் மீது தீராத காதல் கொண்டவராய், வலம் வந்து கொண்டிருக்கிறார். பாம்பாட்டி, மேஜிக் கலைஞர்கள்... என இவரது கண்களில் யார் தென்பட்டாலும், அவர்களுடன் ஐக்கியமாகி, மைண்ட் ரீடிங் வித்தைகளை கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்.
''கொஞ்சம் கொஞ்சமாக துளர்விட ஆரம்பித்த மைண்ட் ரீடிங் கலை ஆர்வம், பாலிடெக்னிக் படிப்பு முடிந்ததும் விருட்சமாக வளர்ந்து நின்றது. அன்றைய சூழலில், அரசு வேலை அல்லது வெளிநாட்டு வேலை இவ்விரண்டும்தான் ரொம்ப பாப்புலர் என்ற சூழலில், அவ்விரண்டும் எனக்கு கைக்கு எட்டாதவையாக தோன்றின. அதனால், முழு மனதுடன் எனக்கு மிகவும் பரீட்சயமான மைண்ட் ரீடிங் கலையை கையில் எடுத்தேன். நிறைய நிகழ்ச்சிகளை நடத்தினேன். குறிப்பாக இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருக்கும் தாஜ் ஓட்டலில், என்னுடைய மைண்ட் ரீடிங் நிகழ்ச்சிகள் அடிக்கடி அரங்கேறின'' என்பவர், அடுத்தவர் மனதில் நினைக்கும் விஷயங்களை கண்டுபிடிப்பதில் பிரபலமானவர்.
''பெரும்பாலான மேஜிக் கலைஞர்கள், உங்கள் மனதில் நினைத்திருக்கும் மலர்களை கூறுவார்கள். நான் கொஞ்சம் அட்வாண்ஸ்டாக, அவர்களின் ஏ.டி.எம். கார்டு பின், பிறந்த நாள் தேதி... போன்றவற்றையும் மைண்ட் ரீடிங் முறையில் செய்து அசத்தியிருக்கிறேன்.
சாதாரணமாக மேடையில் நின்றுகொண்டு, குச்சியை பூங்கொத்தாக மாற்றுவதை விட, இதுபோன்ற மைண்ட் ரீடிங் வித்தைகள் கடினம். இதை கற்றுக்கொள்வது கடினம் என்றாலும், அனுபவ ரீதியாக பயிற்சி செய்யலாம். அப்படிதான் நான் மைண்ட் ரீடிங் ஸ்பெசலிஸ்டாக மாறினேன்'' என்றவர், மக்களோடு தொடர்புடைய மைண்ட் ரீடிங் கலைகளையே தன்னுடைய அடையாளமாக கொண்டிருக்கிறார். அதுவே, இவரை பல உலகநாடுகளுக்கு அழைத்து சென்றது.
சொகுசு கப்பல் என்ற வார்த்தையே பரீட்சயமில்லாத காலகட்டத்தில், அதில் மேஜிக் கலை நிகழ்த்தி காட்டும் ஆசையோடும், அமெரிக்காவை சுற்றிப்பார்க்கும் ஆவலோடும் சொகுசு கப்பலில் ஏறினார். அதுவும் சுவாரசியமான அனுபவமாகவே அவருக்கு அமைந்திருந்தது.
''நான் சுயமாகவே மேஜிக் எனப்படும் மைண்ட் ரீடிங் கலையை கற்றுக்கொண்டவன். பெரும்பாலான மேஜிக் கலைஞர்கள், ஷோ நடத்தி அதன் மூலம் பணம் சம்பாதிக்க நினைப்பது உண்டு. ஆனால் நான் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்தேன். மைண்ட் ரீடிங் கலையை ஏன் வேலைவாய்ப்பாக உருவாக்கி கொள்ளக்கூடாது என்ற சிந்தனையில் பணியாற்றினேன். அப்போதுதான், அமெரிக்காவை சேர்ந்த 'கார்னிவெல்' என்ற சொகுசு கப்பல் பற்றியும், அதில் பணி செய்யும் ஊழியர்களை தேடி அதன் நிர்வாகிகள் இந்தியாவின் மும்பை நகருக்கு வந்திருப்பதையும் தெரிந்து கொண்டேன்.
கப்பல் ஊழியர்களுக்கான தேர்வுகள் கிட்டத்தட்ட நடந்து முடிந்துவிட்டன. கப்பலில் பயணிக்கும் மக்களுக்கு மைண்ட் ரீடிங் கலையை நிகழ்த்தி காட்டி, குதூகலப்படுத்துவதுதான் என்னுடைய யோசனை. ஆனால் 1990-களில் அது ரொம்பவே புதுமையான யோசனை என்பதால், நான் சொல்லும் கருத்துக்களை கார்னிவெல் நிர்வாகிகளுக்கு எவராலும், தெளிவாக விளக்க முடியவில்லை. அவர்களும் புரிந்துகொள்ளும் மனநிலையில் இல்லை.
இறுதியாக, என்னை பற்றி செய்தித்தாள்களில் வெளிவந்த கட்டுரைகளை தொகுப்பாக்கி, கார்னிவெல் நிர்வாகிகளுக்கு கிடைக்கும்படி செய்துவிட்டு, என்னுடைய மைண்ட் ரீடிங் ஷோவிற்கு கிளம்பிவிட்டேன். அதற்கு பிறகுதான், என்னை அழைத்து பேசினர். 5 நிமிட சந்திப்பில் தொடங்கி, 45 நிமிட சந்திப்பாக மாறியது'' என்றவர், 8 மாத கடின முயற்சிகளுக்கு பிறகு, சோதனை முயற்சி அடிப்படையில் 3 மாதத்திற்கு சொகுசு கப்பலில் ஊதியம் இன்றி பணியாற்ற அழைக்கப்பட்டார்.
இவருடைய 'மைண்ட் ரீடிங்', வெளிநாட்டவர்களால் அதிகம் ரசிக்கப்பட்டது. பிரத்யேக ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. அதனால் ராகேஷ் ஷியாமிற்கு மதிப்பும், மரியாதையும், ஊதியமும் கிடைக்க தொடங்கின. கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு மேலாக கார்னிவெல் சொகுசு கப்பலில், புதுப்புது மேஜிக் கலைகளை நிகழ்த்தி காட்டி அசத்தினார்.
''மைண்ட் ரீடிங் கலைஞர்களும், சம்பள அடிப்படையில் வேலை செய்யலாம் என்பதை 2000-ம் ஆண்டுகளிலேயே நான் நிரூபித்து காண்பித்தேன். என்னை தொடர்ந்து நிறைய இந்தியர்கள், சொகுசு கப்பல்களில் மைண்ட் ரீடிங் கலை நிகழ்த்த ஆரம்பித்தனர். இப்போது, எல்லா சொகுசு கப்பல்களிலும், மேஜிக் கலைஞர்கள் பயணிகளை மகிழ்வித்து கொண்டிருக்கிறார்கள்'' என்றவர், உங்களுக்கு விருப்பமானவற்றில் நீங்கள் உறுதியாக இருந்தால், அது உங்களை மென்மேலும் உயர்த்தும் என்கிறார்.
''கார்னிவெல் கப்பலில் பணியாற்றியபோது, இத்தாலியில் காலை உணவு என்றால் மறுநாள் காலை உணவு கிரீஸ்-ல் இருக்கும். அப்படி ஒரு ஆடம்பர வாழ்க்கையை கொடுத்தது, எல்லோர் பார்வையில் சாதாரணமாக தெரியும் மேஜிக் தான். அதேபோல, எல்லா துறைகளில் 'பெஸ்ட்' ஆக திகழும் அமெரிக்காவின் பெஸ்ட் சொகுசு கப்பல் நிறுவனத்திலும் பெஸ்டான கலைஞராக மாற்றியிருப்பதும், மைண்ட் ரீடிங் கலைதான்.
மைண்ட் ரீடிங் என்ற கலை மூலமாக, என்னையும், என்னுடைய மொழித்திறன்களையும் வெகுவாக வளர்த்து கொண்டிருக்கிறேன். 25 வருட அனுபவத்தில், 43 நாடுகளுக்கு சென்று நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறேன்'' என்பவர், தன்னுடைய ஸ்டைல் பற்றி விளக்கினார்.
''எல்லா மைண்ட் ரீடிங் கலைஞர்களுக்கும் ஒரு தனி அடையாளம் இருக்கும். என்னுடையது, 'டூ வே எண்டர்டெயிண்ட்'. அதாவது மக்களை, மைண்ட் ரீடிங் கலைக்குள் பங்கேற்பாளராக கொண்டு வந்து, அவர்கள் மூலமாகவே மேஜிக் கலை நிகழ்த்துவது.
இதையே, நான் கடந்த 25 வருடங்களாக நிகழ்த்தி வருகிறேன். அந்தவகையில் நிறைய மேடை நிகழ்ச்சிகள், சின்னத்திரை-வெள்ளித்திரை நடிகர்-நடிகைகளுடனான சந்திப்புகள், வர்த்தக சந்திப்புகளில் பொதுமக்களையும் தாண்டி, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் முன்னிலையில் மைண்ட் ரீடிங் கலை நிகழ்த்தியிருக்கிறேன்.'' என்றவரிடம், மக்களை மைண்ட் ரீடிங் கலைக்குள் கொண்டுவரும்போது, ஏதாவது சிக்கல்கள், சொதப்பல்கள் வருமா? என்று கேட்க, அதற்கு பதிலளித்தார்.
''என்னிடம் பொதுவாகவே, 3 விதமான பிளான்கள் இருக்கும். மக்கள் இதை செய்தால், இப்படியொரு முடிவுகள் வரும், வேறுவிதமாக செய்தால் வேறுவிதமான முடிவுகள் வரும் என மூன்று விதமான பிளான் வைத்திருப்பேன். அதனால், சொதப்பல்கள் நடக்காது. அதிகபட்சமாக, சுவாரசியம் வேண்டுமானால் குறையலாம்'' என்றவர், மைண்ட் ரீடிங் கலைக்கு முன்பை விட இப்போது சிறப்பான வரவேற்பு இருக்கிறது என்கிறார். மேலும், நிறைய இளைஞர்-இளம்பெண்களும் மைண்ட் ரீடிங் கலை பயின்று, உலக நாடுகளில் அசத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மைண்ட் ரீடிங் காலத்திற்கும், தொழில்நுட்பத்திற்கும் ஏற்ப முன்னேறி கொண்டே இருக்கிறது. அதற்கேற்ப மைண்ட் ரீடிங் கலைஞர்களும் முன்னேற வேண்டும். இல்லையேல், மைண்ட் ரீடிங் கலை வளர்ச்சி பெறாமலேயே இருக்கும்'' என்ற கருத்தோடு நிறைவு செய்யும் ராகேஷை வார இறுதி நாட்களில் சென்னையிலும் பார்க்க முடியும்.