பெண்களின் வீட்டுவேலையை சுலபமாக்கும் மங்கை
பொருட்களை தேடுவதையும், அதை உருவாக்க தூண்டுவதையுமே தன்னுடைய அடையாளமாக கொண்டிருக்கிறார், வீரநாகு என்கிற பிரவீனா.;
அலுவலக வேலை என்பது வரையறுக்கப்பட்டது, ஆனால் குடும்ப பெண்களுக்கான வீட்டு வேலை என்பது வரையறுக்கப்படாதது. இன்றைய பொழுதிற்கு, இவ்வளவுதான் வேலை இருக்கும், இன்றைக்கு இந்த வேலைகளை மட்டும் முடித்தால் போதும் என்பது போன்ற சலுகைகள் எல்லாம் குடும்ப தலைவிகளுக்கு இல்ைல. வழக்கமான வேலைகளுடன், கூடுதல் வேலைகளும் சேரும்போது, அவர்களது உடலும் மனமும் சோர்ந்துவிடும். இதற்காகவே, எளிமையான முறையில் வீட்டு வேலைகளை செய்ய உதவும் வீட்டு உபயோக பொருட்கள் சந்தைகளில் உலாவிக் கொண்டிருக்கின்றன. அத்தகைய பொருட்களை தேடுவதையும், அதை உருவாக்க தூண்டுவதையுமே தன்னுடைய அடையாளமாக கொண்டிருக்கிறார், வீரநாகு என்கிற பிரவீனா.
தேனி மாவட்டத்தை சேர்ந்தவரான இவர், எம்.பி.ஏ. பட்டதாரி. குடும்ப தலைவியாக தான் சந்தித்த வீட்டு பராமரிப்பு பிரச்சினைகளுக்கு வெளிநாட்டு சந்தைகளில் தீர்வு தேடியபோதுதான், புதுமையாக எளிமையாக உதவக்கூடிய வீட்டு உபயோக பொருட்கள் கிடைத்திருக்கின்றன. அதை மற்ற குடும்ப தலைவிகளுக்கும் அறிமுகப்படுத்துவதுடன், குடும்ப தலைவிகளை மிகவும் சிரமப்படுத்தும் ஒருசில வேலைகளுக்கு எளிமையான கருவிகள் மூலம் தீர்வு காணும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்.
ஆம்..! வீட்டு பராமரிப்பு கருவிகளை உருவாக்கும் நிறுவனங்களிடம் இந்திய குடும்ப தலைவிகள் சந்திக்கும் பிரச்சினைகளை விளக்கி, அதற்கு தீர்வு கேட்கிறார். இவரது முயற்சிக்கு சில பலன்களும் கிடைத்திருக்கின்றன. அதை அவரே பகிர்ந்து கொள்கிறார்.
* எப்படி தோன்றியது இந்த சிந்தனை?
வெகுநாட்களாகவே என் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்த சிந்தனைதான் இது. என்னுடைய படிப்பும், என்னுடைய சிந்தனையும் பெண்களுக்கு உதவ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். குறிப்பாக, குடும்ப பெண்களுக்கு மிகவும் சிரமத்தை தரக்கூடிய வீட்டு வேலைகளுக்கு, எளிமையான கருவிகளை தேடினேன். சமையல் வேலைகளை எளிமையாக செய்ய நிறைய பொருட்கள், சந்தையில் உண்டு. காய்கறி நறுக்க, பாத்திர கழுவ... இப்படியாக நிறைய பொருட்கள் உண்டு. ஆனால் வீட்டு பராமரிப்பிற்கு தேவையான பொருட்கள் சந்தையில் அதிகம் கிடைப்பதில்லை. அவை இருந்தால், வீட்டு வேலைகள் எளிமையாக இருக்கும்.
* எதுபோன்ற பொருட்களை தேடுகிறீர்கள்?
சமையல் வேலையை தவிர்த்து, வீட்டை பராமரிக்க ஏதுவாக, வீடுகளை சுத்தப்படுத்த, வீட்டு அலமாரிகளை தூசி இன்றி பராமரிக்க, வீட்டு சீலிங்கில் இருக்கும் பேன், டியூப் லைட் போன்ற பொருட்களை எளிதாக துடைக்க, கனமான தண்ணீர் கேனை தூக்கி வைக்க... இதுபோன்ற வேலைகளுக்கும் சுலபமாக செய்யக்கூடிய கருவிகளைத்தான் தேடினேன்.
* இதற்கெல்லாம் கருவிகள் இருக்கின்றனவா?
ஆம்...! அமெரிக்காவில் குடும்ப தலைவிகளின் வீட்டு வேலைகளை சுலபமாக்க நிறைய கருவிகள் உண்டு. குறிப்பாக வீட்டு பராமரிப்பிற்கு அங்கு அதிகம் மெனக்கெடுவார்கள். தரையை சுத்தமாக்க, வீட்டு கூரையை சுத்தமாக்க, தூசிகளை அகற்ற.... என வீட்டை சுத்தமாக்கவே, பல கருவிகள் உண்டு. ஆனால் நம் இந்திய சந்தையில், அவை அதிகம் விற்பனையாவதில்லை என்பதால் மிக குறைவான வீட்டு பராமரிப்பு பொருட்களே கிடைக்கின்றன.
ஆனால் இன்றைய பெண்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து வருவதால், வீட்டு பராமரிப்பு விஷயத்தில் அக்கறை காட்ட தொடங்கி உள்ளனர். வேக்கம் கிளீனர் போன்ற கருவிகளை வாங்கி, சுத்தப்படுத்தும் மனநிலை அதிகரித்து வருவதால், நம் இந்திய சந்தையிலும் வீட்டு பராமரிப்பு பொருட்களுக்கான தேவை அதிகரித்திருக்கிறது.
* உங்களுடைய பங்கு என்ன?
வெளிநாடுகளில் இருக்கும் வீட்டு பராமரிப்பு பொருட்கள், வெளிநாட்டு வாழ்க்கைக்குதான் பயன்படும். 100 பொருட்களில் 10 பொருட்கள் வேண்டுமானால் நம் இந்தியர்களுக்கு பயன்படலாம். ஆனால் அதுவே நம் இந்திய குடும்ப பெண்கள் சந்திக்கும் பிரச்சினைக்கு தீர்வாகும் கருவியாக/பொருட்களாக தயாராகும் பட்சத்தில் எல்லா பொருட்களுக்கும் வரவேற்பு கிடைக்கும்.
குடும்ப பெண்கள் என்னென்ன பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள், எதற்கான மாற்று பொருள் வேண்டும் என்பதை ஆராய்ந்து, அதை வீட்டு பராமரிப்பு பொருள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தெரியபடுத்தி அதற்கான மாற்று பொருளை சந்தைப்படுத்துவதுதான் என்னுடைய பணி. அந்தவகையில், தூசி படிந்தாலும் அதை கழுவி மீண்டும் பயன்படுத்தக்கூடிய பேப்பர், டியூப் லைட்-மின்விசிறிகளை சுத்தம் செய்யக்கூடிய கை போன்ற குச்சி, அடுப்படியில் பயன் படுத்தும் துணிக்கு மாற்றாக தீப்பிடிக்காத ஸ்பான்ச், தண்ணீரில் வழுக்காத தரை விரிப்பு... ஆகியவற்றை உருவாக்க வழிகாட்டி இருக்கிறேன். அதேபோல, கியாஸ் சிலிண்டர் மற்றும் தண்ணீர் கேனை சுலபமாக நகர்த்தக்கூடிய மேட் வகைகளையும் உருவாக்க ஐடியா கொடுத்திருக்கிறேன்.
* உங்களுடைய ஆர்வம் எதை நோக்கி இருக்கிறது?
குடும்ப பெண்களுக்கு உதவுவதுதான், என்னுடைய நோக்கம்.
* குடும்பத்தினர் உதவியாக இருக்கிறார்களா?
என்னுடைய முயற்சிகளுக்கு, என்னுடைய கணவர் உறுதுணையாக இருக்கிறார். தந்தையின் ஆதரவும் சிறப்பாக இருக்கிறது.
இன்றைய பெண்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து வருவதால், வீட்டு பராமரிப்பு விஷயத்தில் அக்கறை காட்ட தொடங்கி உள்ளனர். வேக்கம் கிளீனர் போன்ற கருவிகளை வாங்கி, சுத்தப்படுத்தும் மனநிலை அதிகரித்து வருவதால், நம் இந்திய சந்தையிலும் வீட்டு பராமரிப்பு பொருட்களுக்கான தேவை அதிகரித்திருக்கிறது.