எதிர்காலத்தை அழகாக்கும், ஆபரண வடிவமைப்பு..!

காஸ்டியூம் ஜூவல்லரி, ஜூவல்லரி காஸ்ட் உள்ளிட்ட சிறப்பு பாடப்பிரிவை தேர்வு செய்து படிக்கலாம். இதில் டிசைன் மெத்தாலஜி, கம்ப்யூட்டர் எய்டட் டிசைனிங், ஜெம் ஐடென்டிபிகேஷன் அண்ட் கலரிங் என அனைத்து ரக ஆபரணங்கள், கற்கள் குறித்தும் கற்பிக்கப்படுகிறது.;

Update:2023-09-14 19:18 IST

எந்த காலத்திலும் மதிப்பு குறையாத பொருள், அனைவராலும் விரும்பக்கூடிய பொருள் என்றால் உலக அளவில் அது ஆபரணங்கள்தான். தங்கம், வைரம், வைடூரியம், முத்து ஆகியவற்றுக்கு மக்கள் மத்தியில் என்றென்றும் வரவேற்பு உள்ளது. தங்க நகை தொழில் அபரிமிதமாக வளர்ச்சி பெறுகிறது. நகைக் கடைகள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகுகிறது. தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இத்தொழிலுக்கு என்றுமே மவுசு உண்டு என்று சொல்லத் தேவையில்லை.

தங்க ஆபரணங்கள், வைரம் உள்ளிட்ட கற்கள் குறித்து கற்றுக்கொள்ள நிறைய குறுகிய கால படிப்பும், மூன்றாண்டு பட்டப்படிப்பும் உள்ளது. தங்க ஆபரண தொழிலை பொறுத்தவரை வீட்டில் இருந்து பகுதி நேர, முழு நேர தொழிலாகவே செய்யலாம்.

பகுதி நேரம் பணியாற்றினால் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பாதிக்கலாம். முழு நேரம் பணியாற்றினால் ரூ.25 ஆயிரம் வரை வருமானம் ஈட்ட முடியும். தற்போது நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கம்ப்யூட்டர் டிசைன் மூலம் தங்க ஆபரணங்களில் பல வண்ணங்களில் விதவிதமாக கற்கள் வைத்து தயாரித்து விற்கின்றனர். தங்க ஆபரண டிசைன், வகை, தரம், ரகம் உள்ளிட்டவை குறித்து தொழில்முறை ரீதியான பாடப்பிரிவில் சேர்ந்து படிப்பதன் மூலம் 100 சதவீத பணி வாய்ப்பை பெறலாம்.

தங்க, வைர நகை ஆபரணம் சம்பந்தமாக ஜெம்மாலஜி அண்ட் ஜூவல்லரி டிசைன் படிப்பு உள்ளது. இதில் ஜெம்மாலஜி, ஜூவல்லரி டிசைன் ஆகியவற்றை தனித்தனியாக எடுத்துப் படிக்கலாம்; சேர்த்தும் படிக்கலாம். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் அக்சஸரி அண்ட் ஜுவல்லரி டிசைன் படிப்பு வழங்குகின்றனர். மூன்று மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை படிப்புகளை வழங்குகின்றனர். இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெல்லி கல்வி நிறுவனத்தில் மூன்று மாத குறைந்தகாலப் படிப்புகளை வழங்குகின்றனர்.

இண்டியன் டைமண்ட் இன்ஸ்டிடியூட், சூரத்தில் உள்ள இண்டியன் ஜெம்மாலாஜிக்கல் இன்ஸ்டிடியூட், ராஜஸ்தான், குஜராத் ஆகிய இடங்களில் தங்க நகை ஆபரணம் மற்றும் வைரம், முத்து, பவளம், மாணிக்கம் உள்ளிட்ட ஆபரண கற்கள் குறித்த கல்வி வழங்கப்படுகிறது. ஓராண்டு வரையிலான படிப்புகள் இக்கல்வி நிறுவனங்களில் உள்ளன.

தமிழகத்தில் பேஷன் டெக்னாலஜி கற்பிக்கப்படும் கல்வி நிறுவனங்களில் ஜெம்மாலஜி படிப்புகள் உள்ளன. பெண்கள் வீட்டில் இருந்தபடி வருமானம் ஈட்டுவதற்கு ஏற்ற படிப்பு இது. இதற்கான பணி தேவை அதிக அளவு உள்ளதால், படித்து முடித்ததுமே மாதம்தோறும் கணிசமாக சம்பாதிக்கலாம். கணினி, ஓவியம், வண்ணம் பிரித்தாளும் தன்மை, கூர்மையான பார்வைத் திறன் ஆகியவை இதைப் படிப்பவர்களுக்கு அவசியம்.

காஸ்டியூம் ஜூவல்லரி, ஜூவல்லரி காஸ்ட் உள்ளிட்ட சிறப்பு பாடப்பிரிவை தேர்வு செய்து படிக்கலாம். இதில் டிசைன் மெத்தாலஜி, கம்ப்யூட்டர் எய்டட் டிசைனிங், ஜெம் ஐடென்டிபிகேஷன் அண்ட் கலரிங் என அனைத்து ரக ஆபரணங்கள், கற்கள் குறித்தும் கற்பிக்கப்படுகிறது. நல்ல வருமானம் கிடைக்கும்; சுய தொழில் செய்யலாம் என்பதால் சிறந்த வாழ்க்கைக்கு அஸ்திவாரமாக விளங்கும் ஆபரணக் கல்வியை தாராளமாக தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்