தென்னங் கீற்றில், மலரும் பின்னல் கலை..!
தென்னங் கீற்று, பனை ஓலை, காய்கறிகள், சாக்பீஸ்... என எதை கொடுத்தாலும், அதில் உயிரோட்டமான கலை படைப்புகளை உருவாக்குவதில், சவடமுத்து கைதேர்ந்தவர்.;
சவடமுத்து படைப்புகள், சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுவது உண்டு. குறிப்பாக, தென்னங் கீற்று மற்றும் பனை ஓலையில் இவர் படைத்திருக்கும் கலை சித்திரங்களுக்கு, தனி ரசிகர் பட்டாளமே உண்டு எனலாம்.
இப்படி, பல பொருட்களில் கலைவண்ணம் படைக்கும் சவடமுத்துவை சந்தித்து பேசினோம். அவர் பகிர்ந்து கொண்டவை...
''3-ம் வகுப்பு படிக்கும்போதே, எனக்கு கலை முயற்சிகளில் ஆர்வம் அதிகம். சிறப்பாக ஓவியம் வரைவேன். சாக்கு கட்டி சிற்பங்கள் செதுக்குவேன், களிமண் சிற்பங்கள் செய்வேன். வெஜிடெபிள் கார்விங் எனப்படும் காய்கறி சிற்பங்களையும் உருவாக்குவேன். இந்த கலைப் பின்னலின் நீட்சியாகவே, தென்னங் கீற்றிலும், பனை ஓலையிலும் கலைநயம் உருவாக்கினேன்'' என்று தன் கதையை மெதுவாக பின்னத் தொடங்கிய சவடமுத்து, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகிலுள்ள வரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்.
ஓட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பில் டிப்ளமோ முடித்திருப்பதோடு, அங்கு பரீட்சயமான கார்விங் கலையின் தொடர்ச்சியாகவே தென்னங் கீற்றில் புதுமைகள் படைக்கிறார்.
''பள்ளியில் படிக்கும்போதெல்லாம், நிறைய பாட்டி-தாத்தாக்கள் தென்னை ஓலையை பின்னிக் கொண்டிருப்பார்கள். சிலர் கீற்று கொட்டாய் அமைப்பதை தொழிலாகவும், சிலர் கலைப்பொருள் உருவாக்க முயற்சியாகவும் செய்து கொண்டிருந்தனர். ஆனால், இப்போது காட்சிகள் மாறிவிட்டன. தென்னை ஓலை பின்னல் கலையும் குறைந்துவிட்டது'' என்று ஆதங்கப்படுபவர், அதை மீட்டெடுக்கவும், தென்னை ஓலை கலை பற்றிய விழிப்புணர்வை இளைஞர்கள் மத்தியில் உண்டாக்கவும் தென்னங் கீற்றை கையில் எடுத்திருக்கிறார்.
''தமிழ்நாட்டில் மவுசு குறைந்திருக்கும் தென்னை ஓலை பின்னல் கலைக்கு, வியட்நாம், இந்தோனேஷியா, இலங்கை போன்ற நாடுகளில் அமோக வரவேற்புகள் உண்டு. பனை ஓலை, தென்னை ஓலையில் உருவான பொருட்களையே அங்குள்ள மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். அனைத்து விழாக்களுக்கும், விசேஷங்களுக்கும் தென்னை ஓலைகள் அலங்கார பொருட்களாகவே அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம், தென்னை ஓலையில் புதுமையான கைவினை கலைப்பொருட்களையும், இயற்கை அலங்கார வேலைப்பாடுகளையும் உருவாக்குகிறார்கள். இதையெல்லாம், முகநூல் மற்றும் யூ-டியூப் மூலமாக அறிந்து கொண்டு, தென்னை ஓலையை பின்ன ஆரம்பித்தேன். அது இன்று, பல வடிவங்களில் உயிர்பெற்றிருக்கிறது'' என்றவர், குறுகிய காலத்திலேயே பின்னல் கலையில் தேர்ச்சி பெற்றுவிட்டார். சின்ன சின்ன கலைப்பொருட்களை பின்னிப் பழகி, இப்போது பிரமாண்ட படைப்புகள் வரை உருவாக்குகிறார்.
''தென்னை ஓலையில் தோரணம் செய்து பார்த்திருப்பீர்கள். பீப்பி செய்திருப்பீர்கள். ஆனால் நான் தென்னை ஓலையில் நீங்கள் நினைக்காததையெல்லாம் செய்திருக்கிறேன். பூங்கொத்து, பழக்கூடை, மணி, இதய சுருள், தொப்பி, அலங்கார கலசம், தொங்கு கலசம், வெட்டுக்கிளி, ரோஜா, குருவி, பாம்பு, மோதிரம், கைக்கடிகாரம், ஆப்பிள், பட்டாம்பூச்சி, விசிறி, ஓலை பெட்டி, பூக்கூடை, அடர் பச்சை-இளம் பச்சை-வெளிர் பச்சை ஆகிய வண்ண இலைகளில் பல வண்ணம் கலந்த பூக்கள்.... என நிறைய கலைப்பொருட்களை செய்திருக்கிறேன். அதேசமயம் விழாக்களில் தொங்கவிடக்கூடிய தென்னை ஓலை தோரணங்களை புதுமையான வடிவங்களில் மாற்றியிருக்கிறேன். நிறைய கோவில் திருவிழா, திருமண விழா மற்றும் பூப்புனித நீராட்டு விழாக்களில் தென்னை ஓலையை கொண்டே முழு அலங்காரத்தையும் செய்து அசத்தியிருக்கின்றேன்'' என்றவர், தென்னை ஓலையில் அரசியல் தலைவர்களின் உருவங்களை தத்ரூபமாக உருவாக்கி அசத்துகிறார்.
''பார்ப்பதற்கும், கேட்பதற்கும் சுலபமாக தெரியும் தென்னை ஓலை பின்னல் கலை, கொஞ்சம் சிரமமானது. பின்னலில் சிறு தவறு நிகழ்ந்தாலும், நாம் நினைக்கும் உருவம் வராது. அதேபோல, தென்னங் கீற்று மற்றும் இலையின் தன்மைக்கு ஏற்ப பின்னல் வேலை செய்ய வேண்டும். இல்லையெனில் பாதியிலேயே உடைந்துவிடும். அல்லது வேறு ஒரு உருவ அமைப்பிற்கு மாறிவிடும்'' என்று சிரமங்களை பகிர்ந்து கொள்பவர், திருமண வரவேற்பு அலங்கார மேடைகளையும், தென்னை ஓலையால் அலங்கரிக்கிறார். உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் தென்னை ஓலை அலங்காரங்களை மிளிரச் செய்து, இப்போது புதுமையான திருமணங்கள் பலவற்றில் தன்னுடைய படைப்பாற்றலை ஒளிரவிடுகிறார்.
''முன்பை விட இப்போது, தென்னை ஓலை அலங்காரங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. நிறைய திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில், தென்னை ஓலைகளால் அலங்கரிக்கச் சொல்கிறார்கள்.
நான் முன்னெடுத்திருக்கும் முயற்சியினால், பலருக்கு தென்னை ஓலை கலை பற்றியும், கலைப்பொருட்கள் பற்றியும் விழிப்புணர்வு உண்டாகி இருக்கிறது. நான் உருவாக்கிய தென்னை ஓலை பொருட்களை சமூகவலைத்தளங்களில் பார்க்கிறார்கள், ரசிக்கிறார்கள், அடுத்தவருக்கு பகிர்கிறார்கள், பாராட்டுகிறார்கள். அந்த பாராட்டுகளே, என்னை உற்சாகத்தோடு புதுப்புது கலைப்பொருட்களை பின்ன வைக்கிறது'' என்ற கருத்தோடு விடைபெற்றார்.