தலைகீழாக ஓடுவதில் இரண்டு உலக சாதனைகளை நிகழ்த்தியவர்
காவல்துறையில் பணியாற்றி கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டவருமான ஆர்.சேகர் என்பவர் தலைகீழாக கைகளால் தரையில் ஓடி உலக சாதனை படைத்துள்ளார்.;
உலகின் ஏதாவது ஒரு மூலையில் சாதனை மனிதர்கள் தினந்தோறும் மெச்சத்தகுந்த சாதனைகளை நிகழ்த்தி, உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்தவகையில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவரும், காவல்துறையில் பணியாற்றி கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டவருமான ஆர்.சேகர் என்பவர் தலைகீழாக கைகளால் தரையில் ஓடி உலக சாதனை படைத்துள்ளார் என்பது ஆச்சரியமான விஷயம்.
காவல்துறையில் பணியாற்ற உடல்தகுதி இல்லை என்று அனுப்பப்பட்ட இவர் படைத்த முதல் சாதனையை முறியடிக்க உலகில் வேறு யாரும் இல்லை. எனவே அவருடைய முந்தைய சாதனையை அவரே முறியடித்து தற்போது 2-வது உலக சாதனையும் படைத்தார். 3-வது உலக சாதனை படைக்க தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுவரும் அவரிடம் நேர்காணல் நடத்தியபோது வெளியான தகவல்கள் இதோ....
* உங்களது சொந்த ஊர், படிப்பு, குடும்ப விவரங்கள் பற்றி கூறுங்களேன்?
குமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே உள்ள காட்டுவிளை எனது சொந்த ஊர். 53 வயதான நான், 5-6-1969-ம் ஆண்டு பிறந்தேன். நான் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு, ஐ.டி.ஐ. முடித்துள்ளேன். எனக்கு லட்சுமி என்ற மனைவியும், அருண், அஜித் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். அருண் எம்.ஏ. ஆங்கிலம் படித்து வருகிறார். அஜித் தொழிற்பயிற்சி பள்ளியில் மோட்டார் மெக்கானிக் பயிற்சி பெற்று வருகிறார்.
* தலைகீழாக ஓடுவதில் உலக சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் ஏற்பட்டது எப்படி?
தமிழக காவல்துறையில் போலீசாக பணியாற்றிய நான் 2012-ம் ஆண்டு நடந்த ஒரு விபத்தில் முதுகு தண்டுவட பாதிப்புக்கு ஆளானேன். இதனால் காவல்துறையில் இருந்து 2015-ம் ஆண்டு எனக்கு கட்டாய ஓய்வு கொடுத்து அனுப்பி விட்டனர். வேலை போனது ஒரு புறமும், விபத்தால் தண்டுவடத்தில் ஏற்பட்ட பாதிப்பு மறுபுறமும் என்று எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தினாலும், இந்த உலகில் ஏதாவது ஒரு சாதனையை நிகழ்த்த வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் என்னைவிட்டு அகலவில்லை.
எந்த தண்டுவட பாதிப்பை காரணம் காட்டி காவல்துறையில் இருந்து என்னை கட்டாய ஓய்வு கொடுத்து அனுப்பினார்களோ? அதே தண்டுவடத்தை பயன்படுத்தி உலக சாதனை படைக்க உறுதி எடுத்தேன். அதாவது தலைகீழாக ஓடி சாதனை படைக்க திட்டமிட்டேன். இந்த சாதனைக்கு தண்டுவடம் முக்கிய பங்கு வகிக்கின்றன. விபத்தினால் எனது முதுகு தண்டுவடத்தில் கம்பிகளால் இணைப்பு கொடுக்கப்பட்டு இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டேன்.
* எப்படி சாத்தியமானது?
இந்த பயிற்சியை நான் புதிதாக எடுக்கவில்லை. காவல்துறையில் சேருவதற்கு முன் பள்ளியில் படிக்கும்போதே இந்த பயிற்சியை எடுத்து வந்தேன். பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும்போது காட்டுவிளையில் சர்க்கஸ் குழுவினர் ஒரு சர்க்கஸ் நிகழ்ச்சியை நடத்தினர். அந்த குழுவைச் சேர்ந்த ஒருவர் 5 அடி தூரம் தலைகீழாக ஓடினார். இதைப்பார்த்த பார்வையாளர்கள் அவரை பாராட்டி காசு, பணம் வழங்கினார்கள். இதைப்பார்த்து நானும் தலைகீழாக ஓடும் பயிற்சியை 14 வயதில் தொடங்கினேன். மண்டைக்காடு பகுதியிலும், கடற்கரை பகுதிகளிலும், வைக்கோல் போர்களின் மீதும் தலைகீழாக நின்றும், மரத்தின் அடிப்பகுதியில் தலைகீழாக நின்றும் பயிற்சி எடுத்தேன். பயிற்சியின்போது பலமுறை கீழே விழுந்தேன். இவ்வாறு பயிற்சி பெற்ற நான் 16 வயதில் ஒரு கி.மீ. தூரம் தலைகீழாக ஓடத் தொடங்கினேன்.
* காவல்துறை பணியில் சேர்ந்தது எப்போது?
1993-ம் ஆண்டு எனது 24-வது வயதில் காவல்துறை பணியில் சேர்ந்தேன். திருச்சியில் எனக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி நிறைவு விழாவின்போது திருச்சி மாவட்ட கலெக்டர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு வாயில் பூங்கொத்தை கவ்விய நிலையில் தலைகீழாக நடந்து சென்று பூங்கொத்தை வழங்கி வரவேற்க என்னை போலீஸ் அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படியே கலெக்டருக்கு நான் வரவேற்பு கொடுத்தேன். அவரும் ஆச்சரியப்பட்டார்.
தலைகீழாக ஓடுவது மட்டுமில்லாமல் சிலம்பம், மான்கொம்பு விளையாட்டு, ஆணழகன் போட்டிகளில் பங்கேற்பது என பல்வேறு தளங்களில் இயங்கி வந்தேன். காவல்துறையில் சேருவதற்கு முன்பாக 1990-ல் நடந்த குமரி மாவட்ட ஆணழகன் போட்டியில் 2-வது பரிசு பெற்றேன். அதற்கு அடுத்த ஆண்டு 1991-ல் கோவையில் ஐ.டி.ஐ. நிறுவனம் ஒன்றில் பயிற்சி வேலை செய்து கொண்டிருந்தபோது கோவை மாவட்ட அளவில் நடந்த ஆணழகன் போட்டியில் 65 கிலோ எடை ஜூனியர் பிரிவில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றேன்.
காவல்துறையில் சேர்ந்த பிறகு இவை அனைத்தையும் தொடர முடியாமல் போனது.
* காவல்துறையில் எத்தனை ஆண்டுகள் பணியாற்றினீர்கள்?
1993-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை 22 ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றினேன். முதல்-அமைச்சர் விருது, நற்சான்று பெற்றுள்ளேன்.
* உலக சாதனை படைத்தது எப்போது?
வேலையில்லாத சூழலில், குடும்ப வறுமையை பொருட்படுத்தாமல் நண்பர்கள் உதவியோடும், எனது குடும்பத்தினரின் ஒத்துழைப்போடும் தலைகீழாக நடக்கும் பயிற்சியை தொடர்ந்து மேற்கொண்டேன். சீனாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 50 மீட்டர் தூரம் ஓடி உலக சாதனை படைத்திருந்தார். அந்த சாதனையை முறியடிக்கும் வகையில் 28-11-2021 அன்று எனது 51-வது வயதில் மண்டைக்காடு காட்டுவிளையில் 87 விநாடிகளில் 64 மீட்டர் தூரம் அதாவது 210 அடி தூரம் தலைகீழாக ஓடி உலக சாதனை படைத்தேன். இது உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்காக எனக்கு சான்றிதழும், சுழற்கோப்பையும் வழங்கினார்கள்.
இன்னும் கூடுதல் தூரம் தலைகீழாக ஓடி எனது சாதனையை நானே முறியடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டேன். அதன்படி 12-2-2023 அன்று எனது 53-வது வயதில் 92 மீட்டர் தூரம் அதாவது 300 அடி தூரம் கன்னியாகுமரி நான்குவழிச்சாலை பகுதியில் தலைகீழாக ஓடி எனது சாதனையை நானே முறியடித்தேன். அதுவும் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
* 3-வது சாதனையை எப்போது நிகழ்த்தப்போகிறீர்கள்?
கடந்த ஆண்டு இதற்காக நான் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நேரத்தில் ரத்தம் தலைக்கேறி, தலைசுற்றி விழுந்து விட்டேன். மருத்துவர்கள் இதுபோன்ற பயிற்சியில் தீவிரமாக ஈடுபடக்கூடாது என்று கூறியுள்ளனர். இருப்பினும் 100 மீட்டர் தூரம் தலைகீழாக ஓடி சாதனை படைத்துவிட்டு, எனது சாதனை பயணத்தை நிறைவு செய்யலாம் என்று நினைக்கிறேன். அதற்காக பயிற்சி பெற்று வருகிறேன். இதன்மூலம் எனது 2 சாதனைகளையும் நானே முறியடித்த பெருமை ஏற்படும்.
எனது இந்த சாதனைகள் மூலம் இந்தியாவும், குமரி மாவட்டமும் பெருமை பெறும். இந்த 100 மீட்டர் தூர சாதனையை விரைவில் நிறைவு செய்ய திட்டமிட்டிருக்கிறேன். நான் படைத்த சாதனைக்காக காமராஜர் வாழ்நாள் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும், பல்வேறு அமைப்புகளின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளேன். தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
* நீங்கள் படைத்த சாதனை மூலம் சமூகத்துக்கும், மாணவர்களுக்கும் என்ன செய்ய விரும்புகிறீர்கள்?
நான் பெற்ற பயிற்சியை பள்ளி-கல்லூரி மாணவர்கள் பெற்று பயன்பெறும் வகையில் இலவசமாக பயிற்சி அளித்து வரு கிறேன். இதன்மூலம் மாணவர்கள் கெட்ட பழக்க-வழக்கங்களுக்கு ஆளாவது குறையும். மனவலிமை அதிகரிக்கும். பள்ளி-கல்லூரிகளில் பாடங்கள் நன்றாக புரியும். கண் பார்வை, செவித்திறன், மூளையின் செயல்பாடுகள் நன்றாக இருக்கும்.
இதன்மூலம் அந்த மாணவர்களை சாதனையாளர்களாக மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறேன். நான் பயிற்சி அளிக்கும் மாணவர்களை போட்டிகளில் பங்கேற்கச் செய்து வெற்றி பெற வைக்கவும், பரிசுகள் பெறவும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறேன்.
தலைகீழாக ஓடும் சாதனை நிகழ்வுகள் மூலம் தமிழகம் முழுவதும் சென்று மது, கஞ்சா, போதை பாக்குகளுக்கு அடிமையாவதை தடுக்கவும், இதுதொடர்பாக இளைஞர்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி கொடுக்கவும் ஆசைப்படுகிறேன்.
தலைகீழாக ஓடும் சாதனை நிகழ்வுகள் மூலம் தமிழகம் முழுவதும் சென்று மது, கஞ்சா, போதை பாக்குகளுக்கு அடிமையாவதை தடுக்கவும், இதுதொடர்பாக இளைஞர்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி கொடுக்கவும் ஆசைப்படுகிறேன்.