நுண்கலையில் 'கின்னஸ்' வென்றவர்..!

பென்சில் ஊக்குகளில், 617 சங்கிலித் தொடர்களை உருவாக்கி, அதை கின்னஸ் சாதனையாக பதிந்திருக்கிறார் கவியரசன்.

Update: 2023-09-14 11:59 GMT

சின்னச்சின்ன வாய்ப்புகளை, சிறப்பான சாதனைகளாக மாற்றுவதில், கவியரசன் கைதேர்ந்தவர். சின்ன சாக்பீஸ், மெல்லிய பென்சில் ஊக்கு... ஆகியவற்றில் கலைநயமான சிற்பங்களை வடித்து அசத்துவதோடு, அதில் கின்னஸ் சாதனையும் படைத்திருக்கிறார். ஆம்...! பென்சில் ஊக்குகளில், 617 சங்கிலித் தொடர்களை உருவாக்கி, அதை கின்னஸ் சாதனையாக பதிந்திருக்கிறார். சின்ன பொருட்களில், பெரிய சாதனை படைத்து 'கின்னஸ்' விருது வென்றிருக்கும், கவியரசனுடன் சிறு நேர்காணல்...

* உங்களைப் பற்றி கூறுங்கள்?

தர்மபுரி மாவட்டம் குமாரசாமிபேட்டை பகுதிதான், என்னுடைய பூர்வீகம். அங்குதான் பிறந்து வளர்ந்தேன். அப்பா செல்வம், அம்மா மஞ்சுளா. பட்டயப்படிப்பு முடித்து, இப்போது தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன்.

* நுண்கலையில் ஆர்வம் வந்தது எப்போது?

பள்ளிப்பருவத்திலேயே, நுண்கலையில் ஆர்வம் பிறந்துவிட்டது. பள்ளிக்கூடத்தில் கிடைக்கும் சாக்பீஸில் சிறுசிறு சிற்பங்களை உருவாக்கினேன். அதைப் பார்த்த நண்பர்களும், ஆசிரியர்களும் என்னை உற்சாகப்படுத்தினர். என் மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை, நான் வீணாக்காமல் ஒவ்வொரு நாளும் புதுப்புது நுணுக்கங்களை கற்றுக்கொண்டு, புதுப்புது உருவங்களை செய்யத் தொடங்கினேன்.

* கின்னஸ் சாதனை முயற்சி பற்றி கூறுங்கள்?

சாக்பீஸ் சிற்பங்களில் கிடைத்த அனுபவத்தை கொண்டு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரமாண்ட முயற்சி ஒன்றை மேற்கொண்டேன். அதாவது, பென்சில் ஊக்கை குடைந்து, அதை சங்கிலி தொடர் போல மாற்றினேன். நம் தமிழகத்தின் ஒருசில கோவில்களில், பாறைகளை செதுக்கி, அழகிய சங்கிலி தொடர் போல வடித்திருப்பார்கள். அதேபோல, 12 எம்.எம். அளவு கொண்ட பென்சில் ஊக்குகளை நிதானமாக செதுக்க ஆரம்பித்தேன். ஒரு சங்கிலி, மற்றொரு சங்கிலிக்குள் பொருந்தியிருக்கும் வடிவில், 25 பென்சில் ஊக்கு முனைகளில், 617 தொடர் சங்கிலி தொடர் அமைப்பை உருவாக்கினேன். 15 அடி உயரமுள்ள நுண்கலை தொடர் சிற்பத்தை உருவாக்க 10 நாட்களானது. அதில் ஒவ்வொரு நாளும், கிட்டத்தட்ட 17 மணி நேரம் செலவழித்து, இந்த சங்கிலி தொடரை உருவாக்கினேன்.

* கின்னஸ் சாதனையாக பதிவானது பற்றி கூறுங்கள்?

இருவழிகளில் கின்னஸ் சாதனைகளை பதிவு செய்யலாம். ஒன்று கின்னஸ் சாதனை அமைப்பின் பிரதிநிதி முன்பாக நிகழ்த்தி காட்டி, அங்கீகாரம் பெறுவது. மற்றொன்று, கின்னஸ் அமைப்பினரின் வழிகாட்டுதலின்படி, சாதனை நிகழ்வு மொத்தத்தையும் வீடியோ பதிவு செய்து அனுப்பி வைத்தும் அங்கீகாரம் பெறுவது. நான், வீடியோ பதிவில் கின்னஸ் முயற்சியை முன்னெடுத்தேன். இதற்காக, பிரத்யேக கேமராக்களை வாங்கி, அதை 10 நாட்களும் தொடர்ச்சியாக ஓட செய்து, வீடியோ காட்சிகளை பதிவு செய்தோம். அந்தவகையில், என்னுடைய முயற்சி, கின்னஸ் சாதனையாக பதிவானது.

* கின்னஸ் நிகழ்வில் மறக்கமுடியாத அனுபவங்கள் பற்றி கூறுங்கள்?

சங்கிலி தொடர் செய்ய முயற்சித்தபோது, பென்சில் ஊக்குகள் 5 முறை கீழே விழுந்து சேதமடைந்தன. இருப்பினும் மனம் தளராமல், மீண்டும் புதிதாக செய்ய ஆரம்பித்தேன். அதேபோல, சங்கிலி தொடரை அளவெடுக்க உதவிய நபர், நாற்காலியில் இருந்து தவறி விழுந்து தனது காலை முறித்துக்கொண்டார். கூடவே, சாதனை முயற்சிகளை பதிவு செய்த கேமராவும் வெடித்து சிதறியது. இப்படி பல தடைகளைத் தாண்டிதான், கின்னஸ் சாதனை உருவானது.

* நுண்கலையில் வேறு என்ன படைப்புகளை உருவாக்கி இருக்கிறீர்கள்?

சாக்பீஸில், நடராஜர் சிலை, முருகன் சிலை, புத்தர் மற்றும் பல சாமி சிலைகளை செய்திருக்கிறேன். யாழி, சிங்கம்... போன்றவற்றையும் தத்ரூபமாக உருவாக்கி இருக்கிறேன். அதேபோல பென்சில் ஊக்கு முனையிலும் நிறைய சிற்பங்களை வடித்திருக்கிறேன்.

* உங்களுடைய தனித்துவம் என்ன?

சேர, சோழ, பாண்டியர்களில், சோழர்களின் சிற்பக் கலை மிகவும் கடினமானது. சவாலானது. அந்த மாதிரியிலான சிற்பக்கலையில்தான், சங்கிலி தொடர்களும் இடம் பெறும். அத்தகைய சவாலான சிற்பக்கலையை கொண்டுதான், நான் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறேன்.

* உங்களது திறமைக்கு பாராட்டுகள் கிடைத்தனவா?

ஆம்...! முன்னாள் இஸ்ரோ திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை வெகுவாக பாராட்டினார். அதேபோல முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் அழைத்து பாராட்டினார். மனித நேய ஐ.ஏ.எஸ்.அகடமி நடத்தி வரும் சைதை துரைசாமி, தனது அமைப்பின் சார்பில் உள்ள கலைப் பிரிவில் 'மனிதநேய சாதனையாளர் விருது' வழங்கி என்னை கவுரவித்தார். நிறையவே ஊக்கப்படுத்தினார். அவரது வழிகாட்டுதலில்தான், என்னால் புதுப்புது சாதனை முயற்சிகளில் ஈடுபட முடிகிறது.

* உங்களுடைய ஆசை என்ன?

வெளிநாடுகளிலும், வட மாநிலங்களிலும் நுண்கலை சிற்பிகளை வெகுவாக கொண்டாடுகிறார்கள். நுண்கலையில் சாதனை படைப்பவர்களுக்கு, அரசு துறையிலேயே வேலைவாய்ப்பு வழங்கி கவுரவிக்கிறார்கள். முதல்வர் தொடங்கி பிரதமர் வரைக்கும் நேரில் அழைத்து பாராட்டுகிறார்கள். ஆனால், தமிழகத்தில் இப்படியான அணுகுமுறைகள் இல்லை என்றே தோன்றுகிறது. இந்த நிலை மாறி, நுண்கலைஞர்களை கவுரவிக்கும் முயற்சிகள் வெகுவிரைவிலேயே நடக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.

* உங்களுடைய முயற்சிக்கு ஆதரவு கிடைத்ததா?

ஊர் பொதுமக்கள் நிறையவே உதவி செய்தனர். தர்மபுரி மாவட்ட கலெக்டர் கின்னஸ் சாதனைக்கான வழிகாட்டுதலையும், அதற்கு தேவையான உதவிகளையும் செய்து கொடுத்தார். மேலும் அருணாச்சலம் என்பவர், பெங்களூருவில் இருந்து கேமராக்களை வரவழைத்து, சாதனை நிகழ்வுகளை பதிவு செய்து உதவினார். இப்படியாக, எல்லோரும் ஆதரவு கரம் நீட்டி, என்னை அரவணைத்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்