மனதுக்கு ஓய்வு கொடுங்கள்

இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கை சுழற்சிக்கு ஈடு கொடுத்து இயங்கி கொண்டிருப்பவர்களில் பெரும்பாலானோர் ஓய்வெடுக்க நேரமின்றி சுழன்று கொண்டிருக்கிறார்கள்.;

Update:2023-08-26 08:17 IST

வேலை இல்லாத போதும் அவர்களுடைய மனமும் உடலும் ஓய்வெடுக்க விரும்புவதில்லை. எதையாவது சிந்தனை செய்து கொண்டிருப்பார்கள். அடுத்த வேலையை எப்படி செய்து முடிக்கப்போகிறோம் என்ற கவலையும் அவர்களிடம் வெளிப்பட்டுக்கொண்டிருக்கும். அதுவே தேவையில்லாத மனக்குழப்பத்தை தோற்றுவிக்கவும் கூடும். சிலர் பயனற்ற விஷயங்களை பற்றி சிந்தித்து தங்களை வருத்திக்கொள்வார்கள். வேலை இல்லாதபோது மனதுக்கு ஓய்வு கொடுத்துவிட வேண்டும். அதை விடுத்து தேவையில்லாத விஷயங்களை பற்றி சிந்திப்பது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். ஆரோக்கியமான மனநிலைக்கும் பங்கம் விளைவித்து விடும்.

எத்தகைய கடினமான வேலைப்பளு இருந்தாலும் தினமும் குறிப்பிட்ட நேரத்தை மனதுக்கு ஓய்வு கொடுக்க செலவிடுங்கள். அந்த சமயத்தில் எந்தவிதமான சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். மனதை அலைபாய விடாதீர்கள். வேலையின் அடுத்த கட்ட நகர்வுகளை பற்றியோ கையில் எடுத்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு பற்றியோ சிந்தித்துக்கொண்டிருக்காதீர்கள். ஆரம்பத்தில் சற்று கஷ்டமாகத்தான் இருக்கும். எப்போதும் ஏதாவது ஒரு சிந்தனையிலேயே மூழ்கி கிடப்பவர்கள் மனதை அமைதி நிலைக்கு திருப்புவது எளிதான விஷயமல்ல.

தினமும் குறிப்பிட்ட நேரத்தை மன அமைதிக்கான பயிற்சிக்கு ஒதுக்குவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். அது வாடிக்கையாக தொடரும்போது தேவையற்ற எண்ணங்கள் மனதில் தோன்றுவது குறையும். நாளடைவில் சில நிமிடங்கள் மனம் அமைதி நிலைக்கு திரும்புவது பழக்கமாகிவிடும். இந்த அமைதி நேரம் உங்களுடைய வாழ்க்கைக்கு வசந்தம் சேர்க்கும்.

தேவையற்ற மனக்குழப்பங்களில் இருந்து மீண்டு வருவீர்கள். இந்த அமைதி நேரத்திற்கு பிறகு புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் செயல்படுவீர்கள். எதையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் மனோபாவம் தோன்றும். மன அழுத்தம் நீங்கி மனத்தெளிவு ஏற்படும். உங்களுடைய ஆத்மபலம் அதிகரித்திருப்பதை உணர்வீர்கள். எந்தவொரு செயலையும் சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றலை கொண்டிருப்பீர்கள். உங்களுடைய திறமையையும் மெருகேற்றிக்கொள்வீர்கள்.

Tags:    

மேலும் செய்திகள்