நல்ல நட்பில் கலந்திருக்கும் மரபணு ஒற்றுமை...!

‘‘நல்ல நண்பர்களாக இருப்பவர்களின் மரபணுக்கள், அவர்களுக்கு அறிமுகம் இல்லாத ஆட்களின் மரபணுக்களைவிட, அதிக அளவில் ஒரே தோற்றம் தருகின்றன. நல்ல நட்பு மலரக் காரணம், இந்த மரபணு ஒற்றுமைதான்’’ எனச் சொல்லி யோசிக்க வைத்திருக்கிறார்கள் இரண்டு விஞ்ஞானிகள். அமெரிக்காவைச் சேர்ந்த இவர்கள் வெளியிட்டிருக்கும் ஆய்வு முடிவு மரபணுத்துறையில் இன்று பெரிய விவாதத்திற்கு வித்திட்டிருக்கிறது.

Update: 2023-10-08 05:42 GMT

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் பவுலர் மற்றும் யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் நிக்கோலஸ் கிறிஸ்டாகிஸ் ஆகிய இருவரும் சேர்ந்து செய்த ஆய்வின் முடிவே அது.

அமெரிக்காவின் சிறு நகரம் ஒன்றில், இதயம் தொடர்பான ஆய்வுக்காகத் தேர்வு செய்யப்பட்ட சுமார் 2 ஆயிரம் பேரிடம், இவர்கள் மரபணு தொடர்பான இந்த குறிப்பிட்ட ஆய்வையும் மேற்கொண்டனர். அதன்படி நண்பர்கள் மத்தியில் மரபணுக்கள் எந்த அளவு ஒத்துப்போகின்றன என்று இவர்கள் ஆராய்ந்தனர். அதன் முடிவில் நல்ல நண்பர்களாக இருப்பவர்களுக்கு இடையில், மற்றவர்களைவிடக் குறைந்தபட்சம் 0.1 சதவீத மரபணுக்கள் கூடுதலாக ஒரே மாதிரி இருப்பதை அறிந்தனர்.

அதாவது, முன் பின் அறிமுகம் இல்லாதவர்களை விட, நல்ல நண்பர்களுக்கு மத்தியில் மரபணுக்கள் கூடுதலாக ஒரே மாதிரி இருக்கின்றனவாம். இப்படியான மரபணு ஒற்றுமை என்பது ஒன்றுவிட்ட சகோதரன், சகோதரிகள் மத்தியில் மட்டுமே காணப்படும்.

எந்த ஒரு குறிப்பிட்ட மரபணு அல்லது மரபணுவின் மூலக்கூறையும் தாங்கள் இங்கே குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்று கூறும் இவர்கள், ''நண்பர்களுக்கு மத்தியில் மரபணுக்கள் ஒத்துப்போகும் போக்கு, அளவு என்பது எண்ணிக்கை அடிப்படையில் அதிகமாகவும், ஒரே மாதிரி தொடர்ந்தும் இருக்கிறது என்பது மட்டுமே எங்களின் கண்டுபிடிப்பு'' என்கிறார்கள்.

ஆனால் இவர்களின் இந்த கண்டுபிடிப்பை சக விஞ்ஞானிகள் சிலர் ஏற்க மறுக்கிறார்கள். ''இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் எல்லோரும் ஒரே இனக்குழுவைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கலாம். ஒரே ஊரில் இருப்பதால், உறவினர்களாகவும் இருக்கலாம். அதனால் மரபணு ஒத்துப் போகலாம்'' என்கிறார் டியூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் இவான் சார்னி.

இவரது விமர்சனத்தை மறுக்கும் இந்த இரட்டை ஆய்வாளர்கள், தாங்கள் சுமார் 907 ஜோடி நண்பர்களைத் தனியாகப் பிரித்து, அவர்களுக்கு இடையில் எந்த விதமான ரத்த உறவும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட பிறகு அவர்களின் மரபணுக்களை ஒப்பிட்டுப் பார்த்ததாகச் சொல்கிறார்கள். எனவே, இனி நட்புக்கு மனசு ஒத்துப் போகிறதோ, இல்லையோ... மரபணு ஒத்துப் போகவேண்டும்!

அதாவது, முன் பின் அறிமுகம் இல்லாதவர்களை விட, நல்ல நண்பர்களுக்கு மத்தியில் மரபணுக்கள் கூடுதலாக ஒரே மாதிரி இருக்கின்றனவாம். இப்படியான மரபணு ஒற்றுமை என்பது ஒன்றுவிட்ட சகோதரன், சகோதரிகள் மத்தியில் மட்டுமே காணப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்