நாட்டுப்புற கலைத்திருவிழா...!

பாரம்பரிய கலைகள் மெல்ல மெல்ல அழிந்து வரும் சூழலில், அதை பாதுகாக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டுள்ளனர். அவர்களில், ஒருவராக மிளிர்கிறார், தேவி. சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவரான இவர், நாடக கலைஞர். கூத்துப்பட்டறையில் பணியாற்றி, தற்போது தேவ்ரிக்‌ஷா என்ற நாடக குழுவை ஒருங்கிணைத்து, பல புதுமையான நாடகங்களை மேடையேற்றி வருகிறார்.;

Update:2023-05-28 14:43 IST

இயல்பில் நாடக கலைஞரான இவருக்கு, நாடக கலை போன்று அழியும் தருவாயில் இருக்கும் கலைகளை பாதுகாக்கும் சிந்தனை மேலோங்கியிருக்கிறது. அதுபற்றி யோசித்தவர், இந்திய கலாசார அமைச்சகத்தின் நிதியுதவியுடன், சென்னையில் பிரமாண்ட கலைத்திருவிழா ஒன்றையும் நடத்தி இருக்கிறார். அந்த கலைத்திருவிழா பற்றி, தேவி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

''கலைகளை கொண்டாடுவதுதான், இந்த கலைத்திருவிழாவின் நோக்கம். கடந்த வருடமும் இப்படியொரு கலைத்திருவிழாவை ஒருங்கிணைத்தோம். ஆனால் கடந்த ஆண்டில், நாடக கலை மட்டுமே இடம்பெற்றிருந்தது. இந்த வருடம், நாடக கலையுடன் தமிழக நாட்டுப்புற கலைகளையும் ஒன்றாக கலந்து, மேடையேற்ற திட்டமிட்டேன். அதன்படியே, நாட்டுப்புற கலைகளை, உயிர்ப்போடு வைத்திருக்கும் கலைஞர்களை சந்தித்து, அவர்களை பங்குபெறச் செய்தேன். அவர்களும், எங்களுடைய அழைப்பை ஏற்று, கலைத் திருவிழாவை களைக்கட்ட செய்தனர்'' என்றவர், கலைத்திருவிழாவின் சிறப்பினை விளக்கினார்.

''இது மத்திய அரசின் வழிகாட்டுதலில் நடக்கும் கலாசார திருவிழா. இதில் நம்முடைய நாட்டுப்புற கலைகளும் இடம்பெற்றன. பறையாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், தெருக்கூத்து, கட்டைக்கால் ஆட்டம், கதை சொல்லும் பகுதிகள் அதனுடன் சேர்த்து எங்களுடைய நாடக குழுவின் நாடகம்... என கோடை விடுமுறைக்கு பொழுதுபோக்கு விருந்து படைக்கும் விதமாக கலைத்திருவிழா நடந்தேறியது. கடந்த வருடத்தை விடவும், இம்முறை அதிகமான மக்கள் பார்த்து ரசித்தனர்'' என்றவர், ஒரேநாளில் பல்வேறு கலை வடிவங்களை மக்கள் பார்த்து ரசித்ததோடு, கலைஞர்களையும் வாழ்த்திச் சென்றனர் என்பதை பகிர்ந்து கொண்டார்.

''முன்பைவிட, இப்போது நாட்டுப்புற கலைகளையும், நாடகத்தையும் மக்கள் வெகுவாக ரசிக்கிறார்கள். கலைஞர்களையும் பாராட்டுகிறார்கள். குறிப்பாக, நியூ ஏஜ் ரசிகர்கள் எனப்படும், இளம் வயது ரசிகர்களின் ஆதரவு அதிகரித்திருக்கிறது. இத்தகைய ஆதரவான சூழல் தொடரும்பட்சத்தில், கலைஞர்களும் உற்சாகமடைவதோடு நாட்டுப்புற கலைகளும் வளர்ச்சியடையும். இளம் தலைமுறையினர், நாட்டுப்புற கலைகளை விரும்பி கற்றுக்கொள்வார்கள். கலைகளும், உயிர்ப்போடு இருக்கும்'' என்றவர், கலைத்திருவிழாவில் தன்னுடைய நாடக குழுவினர் நடித்து காட்டிய 'ஜிங் ஜக்' நாடகத்தை பற்றி பகிர்ந்து கொண்டார்.

''நாட்டுப்புற கலைகளோடு, நாங்கள் நிகழ்த்திக்காட்டிய ஜிங் ஜக் நாடகத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. மறைந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் எழுதிய கதை இது. குழந்தைகளின் மனதில் நன்னெறி கருத்துக்களை நகைச்சுவையாகவும், சுவாரசியமாகவும் விதைக்கும் வகையில் அவர் இந்த கதையை எழுதியிருந்தார். அந்த கதையைதான் நாங்கள், நாடகமாக்கி குழந்தைகளுக்கு நல்ல கருத்துகளை பரிமாறினோம்.

ஒரு மணிநேரம் நடக்கக்கூடிய இந்த நாடகத்திற்கு, கடந்த 4 மாதங்களாகவே ஒத்திகை செய்யப்பட்டது. குழந்தைகளுக்கான நாடகம் என்பதாலும், மிகப்பெரிய கலாசார நிகழ்வில் நிகழ்த்திக்காட்டப்படும் நாடகம் என்பதாலும், எல்லா நாடக கலைஞர்களும் அதிகம் உழைத்தனர். நாட்டுப்புற திருவிழாவிற்கான ஒருங்கிணைப்பு பணிகளுடன் இந்த நாடகத்தை இயக்கவும் செய்தேன்'' என்றவர், நாடக பணிகளுக்கு உதவியாக இருந்த பெற்றோருக்கு நன்றி தெரிவித்தார்.

''எல்லா துறையிலும் நவீனம் புகுந்துவிட்டது. மக்களும் நவீனத்தைதான் விரும்புகிறார்கள். அதனால், நாடகக்கலையை நவீனமாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம். பழமையான நாடக கதைகளை, இன்றைய டிரெண்டிற்கு ஏற்ப எப்படி நாடகமாக்குவது, மக்கள் ரசிக்கும் வகையில் கதைக்களம் அமைப்பது, நாடகத்திற்கான ஒலி-ஒளி அமைப்புகளை டிஜிட்டல் வடிவில் அப்டேட் செய்வது என... எங்களுடைய ஒவ்வொரு நாடகத்திலும் ஒவ்வொரு புதுமைகளை முயன்று பார்க்கிறோம். இந்த முயற்சி, நிச்சயம் தொடரும். அதேபோல, நாட்டுப்புற கலைகளையும் மீட்டெடுக்க ஆர்வமாக இருக்கிறோம்'' என்ற கருத்துடன், தேவி விடைபெற்றார்.

பழமையான நாடக கதைகளை, இன்றைய டிரெண்டிற்கு ஏற்ப எப்படி நாடகமாக்குவது, மக்கள் ரசிக்கும் வகையில் கதைக்களம் அமைப்பது, நாடகத்திற்கான ஒலி-ஒளி அமைப்புகளை டிஜிட்டல் வடிவில் அப்டேட் செய்வது என... எங்களுடைய ஒவ்வொரு நாடகத்திலும் ஒவ்வொரு புதுமைகளை முயன்று பார்க்கிறோம்.

Tags:    

மேலும் செய்திகள்