இளைஞர்களிடம் இருக்கவேண்டிய வேலைவாய்ப்பு திறன்கள்
இன்றைய வேலைவாய்ப்பு சந்தை தீவிரமான போட்டித்தன்மையுடன் உள்ளது. மேலும் தனியார் மற்றும் பொதுத்துறைகளில் உள்ள மனிதவள அதிகாரிகள் நெகிழ்வான, முன்முயற்சி எடுத்து, வெவ்வேறு சூழல்களில் பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டவர்களைத் தேடுகின்றனர்.;
எளிமையாகச் சொன்னால், பட்டம் பெறுவதும், உங்கள் பெயருக்குப் பின்னால் பட்டத்தை சேர்த்துக்கொள்வதும் மட்டும் போதாது. வேலைவாய்ப்பு திறன் இருந்தால் மட்டும் தான் நீங்கள் எதிர்பார்க்கும் உங்கள் கனவு வேலையை (Dream job) அடைய முடியும்.
உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று. 2030-ல் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், உலகிலேயே அதிக இளைஞர்கள் எண்ணிக்கையை இந்தியா கொண்டுள்ளது. இந்தியர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் 15 முதல் 29 வயதுக்கு இடைப்பட்டவர்கள். இந்திய மக்கள்தொகையில் 64 சதவிகிதம் உழைக்கும் வயதினரைச் சேர்ந்தவர்கள்.
இந்தியா தனது சர்வ சிக்ஷா அபியான் (அனைவருக்கும் கல்வி) திட்டத்தின் மூலம் அனைவருக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்வதிலும், ''இலவச மற்றும் கட்டாயக்கல்விக்கான குழந்தைகளின் உரிமை'' (ஆர்.டி.இ.) சட்டத்தை செயல்படுத்துவதன் மூலமும் கல்வியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்த சாதனைகள் இருந்தபோதிலும், குழந்தைகளின் கற்றல் திறன், வாழ்க்கை கல்வி திறனில் பெரும்பாலும் பின்தங்கியே இருப்பதாக கருதுகின்றனர்.
வேலை வாய்ப்பு என்பது வேலை மற்றும் வேலை செய்யும் திறன் ஆகியவற்றுடன் தொடர்புடையது. வேலைவாய்ப்பு திறன் என்பது ஆரம்ப வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான திறன் ஆகும். இந்நிலையில் நல்ல தொழில்நுட்ப புரிதல் மற்றும் பொருள் அறிவு ஆகியவற்றுடன், அடிப்படை வேலைவாய்ப்பு திறன்களை அனைத்து நிறுவனங்களும் தங்களுடைய பணியாளர்களிடம் எதிர்பார்க்கின்றனர்.
ஆஸ்பைரிங்மைண்ட்ஸ் வெளியிட்ட தேசிய வேலைவாய்ப்பு அறிக்கையின் படி 47 சதவிகிதம் பட்டதாரிகளுக்கு ஆங்கில மொழி மற்றும் அறிவாற்றல் திறன் இல்லாததால் எந்த துறையிலும் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. 50 சதவீதத்திற்கும் அதிகமான பட்டதாரிகளுக்கு உரையை நகலெடுத்து ஒட்டுதல் போன்ற எளிய செயல்பாடுகளைச் செய்வது எப்படி என்று தெரியவில்லை மற்றும் அவர்களால் வன்பொருள்(Hardware) மற்றும் மென்பொருளை (Software) வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேலை தேடும் இளைஞர்களிடம் இருக்கவேண்டிய திறன்கள் பற்றி அறிந்து கொள்வோம்...
* அடிப்படை தொழில்நுட்பம் (Basic Technology)
இன்றைய தொழில்முறை பணியிடத்தில் நீங்கள் கணினியை கையாளும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
* தொடர்பு (Communication)
நீங்கள் திறம்பட தொடர்பு கொள்ள வேண்டும். அதாவது பேசுவது, கேட்பது மற்றும் எழுதுவது போன்ற திறன்கள் அவசியம்.
* பிரச்சினையைத் தீர்ப்பது (Problem Solving)
இன்றைய நாகரிக வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகளை சரியான வழியில் தீர்க்க தேவையான அறிவுடன் தீர்க்கமான முடிவு எடுப்பவராக இருக்க வேண்டும்.
* கற்கும் விருப்பம் (Ready to Learn)
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் பாடம் படித்திருப்பதால் உங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு. ஒருவர் எப்பொழுதும் திறந்த நிலையில் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்க வேண்டும்.
* குழுப்பணி(Team Work)
உங்களின் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க, அனைவருக்கும் உதவுவதுடன், ஒரு பொதுவான இலக்கை அடைய நேர்மறையான உறவுகளை உருவாக்கி குழுவுடன் இணைந்து வேலை செய்யும் திறன் இருத்தல் வேண்டும்.
வேலைவாய்ப்பு திறன்களை எப்படி வளர்ப்பது?
* வாசிப்பு (Reading Skill): உங்கள் வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். நாள்தோறும் புத்தகம் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
* எழுதுதல் (Writing Skill): உங்கள் எழுதும் திறனை மேம்படுத்தவும். உங்களுக்கு விருப்பமான தலைப்பைத் தேர்ந்தெடுத்து அதைப் பற்றி எழுதுங்கள்.
* தீர்வு காணுதல் (Problem Solving): பள்ளிகள்/கல்லூரிகளில் அன்றாடச் சூழ்நிலை சிக்கலைத் தீர்க்கும் பயிற்சிகள் பயன்படுத்தப்படலாம்.
* குழு முயற்சி (Team Work): ஒத்த எண்ணம் கொண்டவர்களின் குழுவைத் தேடி, அவர்களுடன் குழுசெயல் மற்றும் விவாதங்களில் ஈடுபடுங்கள்.
* புதுமொழி பயிலுங்கள் (Learn New Language): ஒரு புதிய மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள். பல மொழி ஊழியர்களுக்கு இன்றைய உலகளாவிய நிறுவனங்களில் மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது.
* நேர்மறை (Positive Attitude): நேர்மறை மனப்பான்மையைக் கொண்டிருப்பது ஒரு முக்கியமான திறமையாகக் கவனிக்கப்படுவதில்லை, ஆனால் அது ஒரு நல்ல பண்பு. அது எப்போது உற்சாகமாக செயல்பட வழிவகுக்கும்.
மேற்கண்ட அனைத்து பயிற்சிகளும் உங்களுக்கு குழுப்பணி, தலைமைத்துவ திறன்கள், தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றின் மதிப்புகளை உங்களுக்கு கற்பிக்கும். எதிர்காலத்திற்கு உங்களை தயார்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.