புதுப்புது விஷயங்களை கற்றுக்கொடுத்த 'புவி கண்காட்சி'

ஜி-20 உச்சி மாநாட்டின் நோக்கமான ‘நீடித்த வளர்ச்சியில் புவியியலின் பங்கு’ என்ற மைய பொருளில் இந்த கண்காட்சியை நடத்தி இருக்கிறார்கள்.

Update: 2023-09-14 13:15 GMT

பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சேலம் பெரியார் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்துக்குள் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சாரை சாரையாகப் படையெடுத்த வண்ணம் இருந்தனர். அதற்கேற்ப பல்கலைக்கழக முகப்பும் திருவிழா போன்று தோரணங்களால் களை கட்டி இருந்தது.

என்னவென்று விசாரிக்க உள்ளே சென்றால், அங்குள்ள பிரமாண்ட கலையரங்கத்தில் மேஜைகளில் வரிசையாக பல்வேறு வகையான கனிமங்கள், தாதுக்கள், நவரத்தின கற்கள், நெருப்பு பாறைகள், உருமாறிய படிவங்கள், பாறை வகைகள், தொல்லுயிர் எச்சங்கள் மற்றும் புவிமாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவை ஒவ்வொன்றும் வகை, வகையாகப் பிரித்து வைக்கப்பட்டிருந்தன.

காட்சிப்படுத்தப்பட்ட கனிமங்களின் அருகிலேயே புவியியல் துறை மாணவ-மாணவிகள், உதவி பேராசிரியர்கள், பேராசிரியர்கள் நின்றனர். அவர்கள் இந்த புவி கண்காட்சியை காண வந்த மாணவர்களுக்கு கனிமங்கள், அதன் வகை, அவை எவற்றுக்கு எல்லாம் பயன்படுகிறது உள்ளிட்ட விவரங்களை விளக்கி கூறினர். மாணவ-மாணவிகள் அவற்றை ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டனர். குறிப்பெடுத்தும் கொண்டனர்.

இந்த பிரமாண்ட புவி கண்காட்சி குறித்து பெரியார் பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் எஸ்.வெங்கடேஸ்வரன் கூறும் தகவல்கள் நமக்கு வியப்பை தருகின்றன.

''ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் நடப்பதையொட்டி ஒவ்வொரு கல்வி நிறுவனங்களும் ஏதாவது ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அதனால் புவியியல் துறை சார்பாக என்ன நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று எங்களது பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.ஜெகநாதன், புவியியல் துறை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் குழுவாக கலந்து ஆலோசித்தோம். அப்படி எங்களது சிந்தையில் உருவானதுதான் இந்த புவி கண்காட்சி.

சந்திரயானில் ஆய்வு செய்யும் ரோவரை ஒத்திகை பார்த்தது நமது பகுதியில் உள்ள சித்தம்பூண்டி மண்தான். 18-ம் நூற்றாண்டில் (1873) கஞ்சமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காணப்படும் இரும்பு தாதுவை பயன்படுத்தி சேலத்தை சேர்ந்த அருணாச்சல ஆசாரி என்பவர் போருக்கான வாள், ஈட்டி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை உருவாக்கி அதனை விக்டோரியா மகாராணிக்கு அன்பளிப்பாக வழங்கினார். அந்த போர் கருவிகள் தற்போது லண்டன் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

சேலம் மாமாங்கத்தில் அமைந்துள்ள மேக்னசைட் என்ற கனிமம் 1890-ல் ஆங்கிலேயரால் கண்டுபிடிக்கப்பட்டு உயர்வெப்பத்தை தாங்கும் செங்கற்களாக தயார் செய்துள்ளனர். இன்றைக்கும் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உயர்வெப்பத்தை தாங்கும் செங்கற்களை உற்பத்தி செய்து இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

இங்குள்ள வெள்ளைகரடு பகுதியில் மெக்னீசிய தாது (மேக்னசைட்) சேர்வராயன் மலை, கொல்லி மலை பகுதியில் அலுமினிய தாது (பாக்சைட்), சங்ககிரி பகுதியில் சுண்ணாம்பு பாறைகள் (லைம் ஸ்டோன்), எடப்பாடியில் கிரானைட், நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டியில் நிலவின் பாறை வகையான அனார்த்தசைட் மற்றும் பிளாட்டினம் வகை தாதுக்கள், கிருஷ்ணகிரியில் எம்.சாண்ட், அரூர் ஊத்தங்கரையில் மாலப்டினம் மெட்டல் என ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் திரும்பிய பக்கம் எல்லாம் தாதுக்கள் குவிந்து கிடக்கின்றன'' என்றார்.

இவைகளை ஆராய்ச்சி செய்வதற்காக நாட்டின் பல பகுதிகளிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் வந்து செல்கிறார்கள். அதுபற்றி குறிப்பிடுபவர், ''மற்ற மாவட்டங்களை விட சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளிடக்கிய ஒருங்கிணைந்த நாமக்கல், சேலம் மாவட்டமானது புவி ஆராய்ச்சியாளர்களின் சொர்க்க பூமியாக கருதப்படுகிறது. மற்ற மாவட்டங்களிலிருந்து மட்டுமல்லாமல் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் கூட புவியியல் ஆராய்ச்சியாளர்கள் சேலம் மாவட்டத்துக்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட சேலம் மாவட்ட கனிமங்கள், வண்ண பாறைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதுவும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கானதாக இருக்க வேண்டும் என நினைத்தோம். அந்த வகையில் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்தோம்'' என்கிறார் நெகிழ்ச்சியுடன் பேராசிரியர் வெங்கடேஸ்வரன்.

ஜி-20 உச்சி மாநாட்டின் நோக்கமான 'நீடித்த வளர்ச்சியில் புவியியலின் பங்கு' என்ற மைய பொருளில் இந்த கண்காட்சியை நடத்தி இருக்கிறார்கள். சேலம் மாவட்டத்தில் 300 வகையான கனிமம் மற்றும் தாதுக்கள், 500 வகையான அக்னி, உருமாறிய மற்றும் படிவு பாறைகள், 250 வகையான புவி மற்றும் படிக மாதிரிகள், 50 வகையான நவரத்தின கற்கள், 250 வகையான தொல்லுயிர் எச்சங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டன.

இதுதவிர இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ளதும், நார்வே, பின்லாந்து, அங்கோலா, உக்ரைன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள வண்ணப்பாறைகளை கூட இந்த கண்காட்சியில் இடம் பிடித்தன. அந்த வகையில் 1,600-க்கும் மேற்பட்ட கனிமங்கள், தாதுக்கள், நவரத்தின கற்கள், வண்ணப்பாறைகள், புவி மற்றும் படிக மாதிரிகள், தொல்லுயிர் எச்சங்களை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த கண்காட்சியைப் பார்த்து பயனடைந்தனர் என்கிறார் பேராசிரியர் வெங்கடேஸ்வரன்.

Tags:    

மேலும் செய்திகள்