விபத்துகளை குறைக்க உதவும் கருவி
மது அருந்தி இருக்கும் ஒருவர் டிரைவர் சீட்டில் அமர்ந்து ஸ்டார்ட் செய்ய முயன்றால் கார் ஸ்டார்ட் ஆகாது என்று உறுதிபடக் கூறுகிறார், ஐதராபாத் ராணுவ கல்லூரியின் பொறியியல் மற்றும் மின்னணுத்துறை துறை கேப்டன் கோஸ்வாமி.;
ஆண்டுதோறும் இந்தியாவில் சாலை விபத்துகளில் ஏராளமானவர்கள் உயிரிழக்கின்றனர். இதில் 70 சதவீத விபத்துகளுக்கு காரணம் மதுபோதைதான். மதுகுடிப்பவர்கள் அதற்கான காரணத்தை அவரவர் தரப்பில் இருந்து கூறுவர். அவர்கள் பார்வையில் தங்களது செயலுக்கு நியாயம் கற்பிக்க முயல்வர். இதெல்லாம் இயற்கை. ஆனால் சட்டத்தின் முன்பு, மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றம்.
இதுசம்பந்தமாக ஐதராபாத் ராணுவ கல்லூரியின் பொறியியல் மற்றும் மின்னணுத்துறை துறை ஒரு கண்டுபிடிப்பை உருவாக்கி உள்ளது. அந்த சாதனத்தை காரில் பொருத்திவிட்டால், டிரைவர் சீட்டில் அமர்ந்திருப்பவர், மது அருந்தி இருந்தால் கார் ஸ்டார்ட் ஆகாது. இந்த சாதனத்துக்கு டாட் என்று பெயரிட்டுள்ளனர். அதாவது குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தடுக்கும் சாதனம் என்பதாகும். கேப்டன்கள் கரண் கோஸ்வாமி, ரஜீத் பம்பூ, ஷிட்ஜி மிஸ்ரா ஆகியோர் அடங்கிய குழு இந்தக் கருவியை உருவாக்கியுள்ளது.
இந்தக் கருவி பொருத்தப்பட்ட காரில், மது அருந்தி இருக்கும் ஒருவர் டிரைவர் சீட்டில் அமர்ந்து ஸ்டார்ட் செய்ய முயன்றால் கார் ஸ்டார்ட் ஆகாது என்று உறுதிபடக் கூறுகிறார், கேப்டன் கோஸ்வாமி. இந்தக் கருவி மைக்ரோ கண்ட்ரோலர், அதாவது ஜி.எஸ்.எம். முறையில் செயல்படக் கூடியது மற்றும் வோல்டேஜ் ரெகுலேட்டர், மற்றும் மது வாடையை உணரும் சென்சார் மற்றும் சிக்னலை வெளிப்படுத்தும் உபகரணம் ஆகியவை உள்ளன.
இந்தக்கருவியை உருவாக்குவதற்கான செலவு ரூ.36,800. அதிக அளவில் இது தயாரிக்கப்படும் பட்சத்தில் இதன் விலை குறையலாம். கார் நிறுவனங்கள் இத்தகைய அவசியமான கருவியை புதிய தயாரிப்புகளில் பொருத்த முன் வந்தால் விபத்துகள் பெருமளவில் குறையும். கார் மட்டுமின்றி அனைத்து வாகனங்களிலும் இதைக் கட்டாயமாக்கும் முடிவை அரசு எடுக்கும்பட்சத்தில் சாலை விபத்துகள் கணிசமாக குறையும் என்பதில் சந்தேகமில்லை என இந்த கருவியை உருவாக்கிய குழுவினர் ெதரிவித்தனர்.