செராமிக் பொறியியல் படிப்புகளும், வேலைவாய்ப்புகளும்..!
களிமண், வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டது என்பதால், இன்றைய உற்பத்தி உலகின் பல அம்சங்களில் பயன்படுத்தப்படுகிறது. அதனால் களிமண் உற்பத்தி சார்ந்த செராமிக் பொறியியல் படிப்புகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.;
செராமிக் பொறியியல் துறையை தேர்ந்தெடுத்து படிப்பவர்கள், அதில் ஈடுபட்டிருப்பவர்கள், களிமண் தொடர்பான பண்படுத்துதல், மணல் மற்றும் களிமண் போன்ற உலோகமல்லாத மற்றும் உயிரற்ற பொருட்களை பலவித பயன்பாட்டுப் பொருட்களாக தன்மை மாற்றம் செய்தல் ஆகிய பணிகளை பிரதானமாக செய்வார்கள்.
தனியார் மற்றும் அரசுத்துறைகளில், செராமிக் பொறியாளர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.அந்தவகையில், செராமிக் பொறியியல் முடித்தவர்கள் ஆய்வகம் அல்லது களிமண் பொருள் உற்பத்திக் கூடங்கள் போன்றவைகளில் ஆராய்ச்சியாளர்களாக பணியாற்ற முடியும். செராமிக் பொறியியலில், அறிவியல் மற்றும் தயாரிப்பு அம்சங்களில் அனுபவமுடையவர்கள், நிர்வாகிகள், திட்ட மேற்பார்வையாளர்கள், விற்பனை பொறியாளர்கள் போன்ற பெரிய நிலைகளிலான பணி வாய்ப்புகளைப் பெற முடியும்.
அணு உலைகள், எலக்ட்ரானிக்ஸ் தொழில்துறை மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவையும், செராமிக் துறையில் அபரிமித பணி வாய்ப்புகளை வழங்குகின்றன. இத்துறையில் நல்ல அனுபவம் பெற்றவர்கள், ஓரிடத்தில் ஊதியத்திற்கு பணிபுரிவதை விட, அத்துறை தொடர்பான புதிய தொழில்களைத் தொடங்கி வாழ்வின் புதிய உயரங்களை அடையலாம்.
புதிதாக படித்து வெளிவருபவர்கள், அரசு மற்றும் தனியார் துறைகளிலும், ஆரம்பத்தில் ரூ.9 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம் வரையில் ஊதியம் பெறுகிறார்கள். அதே சமயத்தில் அனுபவமுள்ள ஒரு பொறியாளர் மாதம் ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு மேலும் சம்பாதிக்கிறார்.
செராமிக் துறையில் பி.இ, பி.டெக்., பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ ஆகியவற்றில் எந்த ஒன்றை படிக்க வேண்டுமென்றாலும், ஒருவர் தனது பள்ளிப் படிப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றை கட்டாயப் பாடமாகக் கொண்டு குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அதே சமயம், ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனங்களில் சேர 60 சதவீத மதிப்பெண்கள் தேவை.
பெரும்பான்மையான கல்லூரிகளில், மாணவர்களைச் சேர்க்க நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதேசமயம் பணிபுரியும் நபர்களுக்கு வேறு சில வாய்ப்புகள் உள்ளன. இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜினீயர்ஸ் அமைப்பில் அசோசியேட் மெம்பர்ஷிப் தேர்வை எழுதி, அதன்மூலம் தொலைநிலைக் கல்வி முறை பட்டப்படிப்பை மேற்கொள்ளலாம்.