வளமான எதிர்காலம் தரும் வணிகப் படிப்புகள்
மருத்துவம், பொறியியல் கல்விக்கு நிகராக வளமான எதிர்காலத்தைத் தருபவை வணிகம், பொருளாதாரம், கணக்கியல் சார்ந்த படிப்புகள். இந்தியா போன்ற வளரும் நாட்டுக்கு நிதித்துறையும், வணிகத்துறையும் தான் நிதி ஆதாரங்களுக்கான அடித்தளம் ஆகும்.;
எல்லா துறைகளிலும் பெரு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்ட இக்காலத்தில் நிதி, வணிகம் படித்த நிபுணர்களின் பங்களிப்பும், தேவையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கணக்கில் ஆர்வமும், வணிகத்தில் ஈடுபாடும் கொண்ட மாணவர்கள் சிறிதும் தயங்காமல் இத்துறை சார்ந்த படிப்புகளைத் தேர்வு செய்யலாம்.
நிதி, வணிகம் சார்ந்த அடிப்படைப் படிப்பு என்றால் அது 'பி.காம்' தான். கலை, அறிவியல் கல்லூரிகளை நாடும் மாணவர்களின் முதல் தேர்வாக இந்தப் படிப்புதான் இருக்கிறது. பிளஸ் 2-வில் வணிகக்கணிதம், பொருளியல், வணிகவியல், கணக்கியல் எடுத்துப் படித்தவர்களும், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பொதுக்கணிதம் எடுத்துப் படித்தவர்களும் பி.காம். படிக்கலாம்.
ஒரு காலத்தில் பொதுவான பி.காம் படிப்பு என ஒன்றே ஒன்றுதான் இருந்தது. இன்று தேவைகளையொட்டி இதில் ஏகப்பட்ட பிரிவுகள் வந்து விட்டன.
பொது கணக்கு, விளம்பரம் மற்றும் விற்பனை நிர்வாகம், கணினி தொழில்நுட்பம், அயல்நாட்டு வணிகம், இ-காமர்ஸ், அலுவலக நிர்வாகம், வரி, கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப், ஆக்சூரியல் சயின்ஸ் போன்ற பிரிவுகளில் பி.காம் படிப்பு உள்ளது. இவற்றில் இ-காமர்ஸ், கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப், ஆக்சூரியல் சயின்ஸ் போன்ற படிப்புகள் எவர் கிரீன் படிப்புகள்.
வங்கி, நிதி நிறுவனங்களில் பி.காம் படித்தவர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் உண்டு. கூடுதலாக இந்தி, ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு உள்ளிட்ட பிற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்களுக்கு உலக வங்கியில் கூட வேலைவாய்ப்பு உண்டு.
பி.காம் என்பதை தாண்டி வணிகத்துறையில் மிகுந்த வேலை வாய்ப்புகளைக் கொண்டுள்ள மற்றுமொரு படிப்பு சி.ஏ. (Chartered Accountancy). ஒருகாலத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாத உயரத்தில் இருந்த இந்தப் படிப்பு, இப்போது அனைவருக்குமானதாக மாறிவிட்டது.
சி.ஏ. படிப்புக்கு இணையான தேவை மிகுந்த மற்றுமொரு படிப்பு ஏ.சி.எஸ் (Associate Institute of Company Secretaries). நிறுவனச் செயலாளர் பணிக்கான நேரடிப் படிப்பாக விளங்கும் இதை முடித்தவர்கள் அரசு நிறுவனங்கள், தொழில், உற்பத்தி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் கம்பெனி செக்ரட்டரி பணியில் இணையலாம்.
பவுண்டேஷன் புரோகிராம், எக்ஸிக்யூட்டிவ் புரோகிராம், புரொபஷனல் புரோகிராம் என்ற 3 நிலைகளைக் கொண்ட படிப்பு இது. பிளஸ்-2 முடித்தவர்கள் மூன்றையும் எழுத வேண்டும். இளநிலைப் பட்டதாரிகள் பவுண்டேஷன் நிலை இன்றி நேரடியாக பிற தேர்வுகளை எழுதலாம். பி.காம். உள்ளிட்ட படிப்புகளை படித்துக் கொண்டோ அல்லது பணிபுரிந்து கொண்டோ இப்படிப்புகளை படிக்கலாம்.
கணக்கியல் படிப்புகளில், ஐ.சி.டபிள்யூ.ஏ.ஐ (ICWAI) படிப்பு மிகவும் முக்கியமானது. நிறுவனத்திற்கான லாபநோக்கத் திட்டங்கள், திட்ட மேலாண்மை, முடிவெடுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய படிப்பு இது. வணிகக்கணிதம் அல்லது பொதுக்கணிதம், பொருளியல், வணிகவியல் படித்தவர்களுக்கு இது மிகவும் உகந்தது. இப்படிப்பிலும் பவுண்டேஷன், இன்டர்மீடியட், பைனல் என மூன்று நிலைகள் உண்டு.
இளநிலை பட்டம் பெற்றவர்கள் பவுண்டேஷன் கோர்ஸ் இல்லாமல் நேரடியாக இப்படிப்பில் சேரலாம். இளநிலை பட்டப்படிப்பு படித்துக்கொண்டே இப்படிப்பை படிக்கலாம்.
இந்தியாவின் அடித்தளங்களில் ஒன்றாக பங்குச் சந்தை வளர்ந்திருக்கிறது. ஸ்டாக் புரோக்கிங் (Stock Broking) பற்றிய படிப்புகளைப் முடித்தவர்களுக்கு இத்துறையில் ஏகப்பட்ட வாய்ப்புகள் உண்டு. மும்பை, நாசிக் போன்ற நகரங்களில் உள்ள கல்வி நிலையங்களில் இத்துறையில் சான்றிதழ், டிப்ளமோ படிப்புகளை வழங்குகின்றன.
பிளஸ்-2வில் வணிகக்கணிதம் அல்லது பொதுக்கணிதம், பொருளியல், வணிகவியல், கணக்கியல் எடுத்துப் படித்தவர்கள், வணிகவியல் பட்டதாரிகள், சி.ஏ. முடித்தவர்கள் இப்படிப்பைப் படித்தால் வாழ்வு வளமாகும்.
என்றைக்கும் குன்றாத் துறை ஒன்று இருக்குமெனில் அது வணிகத்துறைதான். அது தொடர்பான படிப்புகள் மிகவும் பாதுகாப்பானவை. அதிக சம்பளம், உயர் பணிகள் என பல சிறப்புகள் அதில் உண்டு. ஆர்வமுள்ள மாணவர்கள் தாராளமாக அவற்றை தேர்வு செய்து படிக்கலாம்.
என்றைக்கும் குன்றாத் துறை ஒன்று இருக்குமெனில் அது வணிகத்துறைதான். அது தொடர்பான படிப்புகள் மிகவும் பாதுகாப்பானவை. அதிக சம்பளம், உயர் பணிகள் என பல சிறப்புகள் அதில் உண்டு. ஆர்வமுள்ள மாணவர்கள் தாராளமாக அவற்றை தேர்வு செய்து படிக்கலாம்.