சிலம்பத்தில் அசத்தும் கல்லூரி மாணவி
காலம் நம்மை என்னதான் நவீன உலகத்துக்கு இழுத்துச் சென்றாலும், இன்னமும் நம்முடைய பண்பாடு, கலாசாரம், பாரம்பரியத்தை காக்கும் பொறுப்பு தனக்கும் உண்டு என்பதை பெண்கள் பல்வேறு நிலைகளிலும் நிரூபித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.;
ஐ.ஏ.எஸ். ஆக போகிறேன். அமெரிக்காவுக்கு என்ஜினீயராக போகிறேன் என்று கூறும் இன்றைய இளைஞர்கள் மத்தியில் நமது பாரம்பரிய சிலம்பக் கலையை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல போகிறேன் என்று சொல்கிறார், சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த மாணவி மனிஷா மாணிக். இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு விஷுவல் கம்யூனிகேசன் படித்து வருகிறார்.
சூரியன் உதிக்கும் காலை பொழுதிலேயே, திருமணிமுத்தாறு கரையில் சிறுவர்-சிறுமிகளுக்கு சிலம்பக் கலையின் நுட்பத்தை கற்றுக்கொடுத்து கொண்டிருந்த மனிஷா மாணிக்கை சந்தித்தோம். அவர் நம்மிடம் கூறிய தகவல்கள் நமக்கு ஆச்சரியத்தையும், வியப்பையும் தருகின்றன. அது என்னவென்று அவரே கூற கேட்போம்.
''சேலம் செவ்வாய்பேட்டைதான் எனது பூர்வீகம். என்னுடைய அப்பா ஜெயச்சந்திரன், அம்மா சரஸ்வதி. எனக்கு 8-ம் வகுப்பு படிக்கும் தங்கையும் (விஜயதர்ஷினி) இருக்கிறார். என்னுடைய தந்தை சிலம்பக் கலைஞர். 6 வயதில் என்னை 1-ம் வகுப்பில் சேர்த்து விட்டார். அந்த நேரங்களில் ஏராளமான போட்டி களுக்கு என்னுடைய தந்தை சென்று வருவார். எங்களது வீட்டில் சிலம்பக் கலைகளுக்கான பொருட்கள் அதிகமாக இருக்கும். நான் தவழ்ந்து விளையாடிய தருணங்களிலேயே எங்களது வீட்டில் இருந்த சிலம்பக் கலைகளுக்கான பொருட்களை எடுத்து விளையாடி இருக்கிறேன் என்று அப்பா அடிக்கடி சொல்வதை கேட்டு இருக்கிறேன். அப்படி வளர்ந்ததால் சிலம்பக் கலையின் மீதான தாக்கம் எனக்குள் அதிகமானது.
ஏதாவது சிலம்பப் பயிற்சிக் கூடத்தில் சேர்ந்து முறையாக சிலம்பம் படிக்கலாம் என நினைத்து அப்பாவிடம் கேட்டேன். அவரும் இசைந்து கொடுத்தார். ஆனால் சிலம்பம் படிக்க சில ஆயிரங்களை செலவு செய்ய வேண்டியது இருந்ததால் என்னுடைய தந்தையும், சித்தப்பா சரவணனும் வீட்டிலேயே எனக்கு சிலம்பம் கற்றுக்கொடுத்தனர்'' என்று சிலம்பத்தை கையில் எடுத்த கதையை கூறிய மனிஷா, சிலம்பப் போட்டிகளில் பரிசு வென்றதை பற்றி விளக்க ஆரம்பித்தார்.
''6 வயதில் சிலம்பக் கம்பை சுழற்ற ஆரம்பித்து, அடுத்த 4 வருடங்களில், 10 வயதில் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டேன். அதிகாலையிலேயே எழுந்து பயிற்சி பெறுவேன். மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் மீண்டும் பயிற்சியில் ஈடுபடுவேன். அதுவும் சனி, ஞாயிற்றுக்கிழமை என்றால் சிலம்பப் பயிற்சி களத்தில்தான் என்னை பார்க்கமுடியும். அந்த அளவுக்கு என்னுடைய ஈடுபாடு, கடின உழைப்பு, பயிற்சிதான் இன்று இந்த சமூகத்தில் சிலம்பாட்ட வீராங்கனையாக மாற்றியிருக்கிறது.
மாவட்டம், மாநிலம், தேசியம், சர்வதேசம்.... என பல்வேறு நிலைகளில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி இருக்கிறேன். எத்தனையோ வெண்கலம், வெள்ளி, தங்கப் பதக்கங்களை வென்று குவித்து இருக்கிறேன். பதக்கங்களும், பட்டங்களும், கோப்பைகளும் எங்கள் வீட்டின் அனைத்து அறைகளிலும் நிரம்பி இருக்கின்றன. எந்த போட்டிக்கு சென்றாலும் நிச்சயம் எனக்கான பரிசு ஒன்று இருக்கும். அந்த அளவுக்கு நான் கற்ற சிலம்பக் கலையின் மீதும், என் மீதும் எனக்கு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை கடந்த 10 ஆண்டுகளில் ஒருமுறை கூட வீணாகவில்லை.
பரிசுகள், கோப்பைகள், பதக்கங்கள், சான்றிதழ்களை வீட்டில் வைப்பதற்கே இடம் இல்லாத வகையில் வாங்கி குவித்து விட்டேன். ஆனாலும் ஏதோ ஒரு வெறுமை மட்டும் என் மனதில் நிழலாடிக் கொண்டிருக்கிறது'' என்பவர், தான் கற்றுக்கொண்ட சிலம்பக் கலையை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக கற்றுக்கொடுக்கிறார்.
''இன்றைக்கு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளில் சிலம்பம் சொல்லி கொடுக்கப்படுகிறது. அதை கற்க மாணவர்களும், மாணவிகளும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஒருசில பள்ளிகளில் தற்காப்பு பயிற்சிகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், அதை நாம் இலவசமாக வழங்கினால் என்ன என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. இதை என்னுடைய தந்தை மற்றும் சித்தப்பாவிடம் கூற, அவர்களும் என்னுடைய ஆசைக்கு உறுதுணையாக நின்றனர். அதற்கான இடத்தை தேர்வு செய்து, அங்கு இலவச சிலம்பப் பயிற்சிகளை ஆரம்பித்தோம்.
'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' என்ற பொன்மொழியை மனதில் வைத்துக்கொண்டு சிறு பிள்ளைகளுக்கு முதலில் சிலம்பம் கற்றுக்கொடுக்க முடிவு செய்தேன். அதுவும் இலவசமாக, அதற்கு நல்ல பலன் கிடைத்தது.
ஏராளமான சிறுவர், சிறுமிகளை அவர்களது பெற்றோரே ஆர்வமுடன் கொண்டு வந்து என்னிடம் பயிற்சிக்காக விட்டனர். சிலம்பப் பயிற்சி பெறும் மாணவர்களை ஊக்குவிக்க அவர்களை போட்டிகளில் பங்கு பெற செய்தால்தான் சிலம்பப் பயிற்சி மீது இன்னும் ஈடுபாடு அதிகமாகும். அப்படி போட்டிகளில் பங்கு பெற செய்ய வேண்டும் என்றால், அதற்கு ஒரு அமைப்பு தேவைப்பட்டது. அதற்காகவே வெற்றிதமிழன் என்ற இலவச சிலம்பப் பயிற்சி மையத்தை தொடங்கினேன். அந்த பயிற்சி மையம் மூலம் சிறுவர், சிறுமிகளுக்கு இலவசமாக சிலம்பப் பயிற்சி அளிப்பதுடன், போட்டி களிலும் பங்கேற்க ஆரம்பித்தோம். கடந்த 3 ஆண்டுகளில் ஏராளமான சிறுவர், சிறுமிகளை ஜூனியர், சீனியர் பிரிவுகளில் மாவட்ட, மாநில, தேசிய போட்டிகளுக்கு அழைத்து சென்றுள்ளேன். நான் பரிசு வாங்கிய மேடைகளிலேயே, என்னுடைய மாணவ-மாணவிகளும் பரிசு மற்றும் பதக்கங்களை பெறுவதை பார்க்கும்போது பேரானந்தமாக இருக்கிறது'' என்று புன்னகை பூக்களை உதிர்க்கும் மனிஷா, சிலம்பத்தின் பல்வேறு கலைவடிவங்களையும் பயிற்றுவிக்கிறார்.
''சிலம்பக் கலையில் ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, வாள்வீச்சு, வேல் கம்பு, சுருள் வாள், மான் கொம்பு, அடிமுறை, கம்பு சண்டை ஆகிய 8 நிலைகள் உள்ளன. இதில் மான் கொம்பு ஆட்டம், நமது மனவலிமையை கூட்டும். ஏனென்றால் மனதை ஒருமுகப்படுத்தி விளையாட வைக்கும் கலை.
சிலம்பக் கலையை கற்றுக்கொள்வதால் வாழ்க்கைக்கு பிரயோஜனமா என்று சில பெற்றோர்கள் என்னிடம் கேட்பார்கள். கடந்த காலங்களை விட இன்றைக்கு சிலம்பக் கலைக்கு அரசு உரிய அங்கீகாரம் அளித்து வருகிறது. சிலம்பக் கலையில் சிறப்பு பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சிறு வயதிலேயே தோல்விகளை கண்டு துவண்டு எத்தனையோ இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு உடல் வலிமையை விட ஆயிரம் மடங்கு மனவலிமையை தரக்கூடியது இந்த சிலம்பக் கலை என்பதை என்னால் பெருமையோடு சொல்லிக் கொள்ள முடியும்'' என்று பொறுப்பாக பேசும் மனிஷாவிற்கு, 19 வயதுதான் ஆகிறது. இருப்பினும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு தன்னம்பிக்கையின் சிகரமாக மிளிர்கிறார். இவர் தொடர்ச்சியாக 15 மணி நேரம் சிலம்பம் விளையாடி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். ஏ.பி.ஜே. வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பு நடத்திய போட்டியில், கண்களை கட்டிக்கொண்டு நெருப்பு சிலம்பத்தை சுற்றி வந்து உலக சாதனை படைத்தார்.
தேசிய மற்றும் சர்வதேச அளவில் 6 முறை சிறந்த பயிற்சியாளர் விருது பெற்றுள்ளார். மேலும் சிலம்ப சுடர் விருதையும் இவருக்கு கொடுத்து கவுரவித்துள்ளனர். சிலம்பத்தில் மனிஷா மாணிக் ஆற்றி வரும் பணிகளை ஊக்குவிக்கும் வகையில், இந்திய பள்ளி வளாக விளையாட்டு மேம்பாட்டு அமைப்பின் பொருளாளராக பொறுப்பு கொடுத்தும் கவுரவப்படுத்தி இருக்கிறார்கள். இத்தனை சிறப்புக்களை பெற்று இருக்கிற மனிஷா மாணிக் இன்னும் சிகரத்தை தொடட்டும்... நாமும் வாழ்த்துவோம்.