உங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க இருக்கிறீர்களா...? சந்தேகங்களும், விளக்கங்களும்

முன்பை விட, இப்போது பள்ளிகள் அதிகமாகிவிட்டது. புதுப்புது கல்வி முறைகளும், பாடத்திட்டங்களும் தமிழகத்திற்குள் புகுந்துவிட்டன. இந்நிலையில், குழந்தைகளை புதிதாக பள்ளியில் சேர்க்க இருக்கும் பெற்றோர்களின் மனதில் எழும் இயல்பான சில கேள்விகளுக்கு, மருத்துவர் மற்றும் கல்வியாளராக பணியாற்றும் பார்கவி மூலம் விடையளிக்க முயன்றிருக்கிறோம்.;

Update: 2023-05-28 09:34 GMT

புதுக்கோட்டையை சேர்ந்தவரான இவர், மருத்துவர். ராஜஸ்தான் மெடிக்கல் கல்லூரியில், மாணவ-மாணவிகளுக்கு மருத்துவம் கற்றுக்கொடுத்து டீச்சிங் எனப்படும் கற்பித்தல் பணியையும் கற்றுக்கொண்டிருக்கிறார். இவர், இப்போது குழந்தைகளின் கற்றல் திறனையும், ஆசிரியர்களின் கற்பித்தல் திறனையும் ஆய்வு செய்து, அதை மேம்படுத்தும் ஆராய்ச்சிகளில் இறங்கியுள்ளார். அவர் நம்முடைய கேள்விகளுக்கு விடைக்கொடுக்கிறார்.

* இப்போது என்னென்ன கல்வி முறைகள் நடைமுறையில் இருக்கிறது?

நம்முடைய தமிழ்நாட்டில் பல்வேறு கல்வி முறைகள் இருக்கின்றன. சி.பி.எஸ்.இ., தமிழ்நாடு ஸ்டேட் போர்ட், மெட்ரிகுலேஷன், இன்டர்நேஷனல் பாக்காலுரேட் (ஐ.பி.), ஐ.ஜி.சி.எஸ்.இ. போன்ற கல்வி முறைகள், எல்லோருக்கும் பரீட்சயமான கல்வி முறைகளாக திகழ்கின்றன. அதேசமயம், மாண்டி சோரி, ரெஜியோ எமிலியா, வால்டோர்ப், பேங்க் ஸ்டீரீட் இப்படியான மழலையர் கல்வி முறைகள்.... கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமடைந்து வருகின்றன. இவற்றோடு மெட்ரிகுலேஷன் தரத்திலான டெக்னோ பள்ளிகளும் அதிகம் முளைத்துவிட்டன.

* எந்த கல்வி முறை சிறப்பானதாக இருக்கும்?

இப்போது எல்லா கல்வி முறைகளும், அப்டேட் ஆகிவிட்டன. சில கல்வி முறைகள் அப்டேட் ஆகிக்கொண்டு இருக்கின்றன. அதனால், எது சிறந்தது என குறிப்பிடுவது, தேர்ந்தெடுப்பது கடினம்தான். இருந்தாலும், பள்ளிக்கும், வீட்டிற்குமான தொலைவு, கல்வி கட்டணம்... போன்றவைதான், பள்ளி தேர்வை நிர்ணயிக்கின்றன.

முடிந்தவரை, செயல்முறை கல்வி அதிகமாக இருக்கும் கல்விமுறைகளை தேர்ந்தெடுப்பது நல்லது. சி.பி.எஸ்.இ., தமிழ்நாடு ஸ்டேட் போர்ட், மெட்ரிகுலேஷன், இன்டர்நேஷனல் பாக்காலுரேட் (ஐ.பி.), ஐ.ஜி.சி.எஸ்.இ. போன்ற கல்வி முறைகள் சிறப்பானதாக இருக்கும்.

* குழந்தைகளின் கற்றல் திறனையும், புரிந்து கொள்ளும் ஆர்வத்தையும் எப்படி மேம்படுத்த முடியும்?

கண்களால் பார்த்து படிப்பது ஒரு ரகம். இது டெக்னோ பள்ளிகளில் நடக்கும். டிஜிட்டல் திரைகளில் ரைம்ஸ் பாடல்கள், கதைகள் ஓடவிட்டு குழந்தைகளுக்கு டிஜிட்டல் கல்வி கற்றுக்கொடுப்பார்கள். அதேபோல கண்களால் பார்த்து படிப்பதுடன், அதை கைகளால் செய்து பார்த்தும், வரைந்து படிப்பதும் மற்றொரு ரகம். உதாரணத்திற்கு, வானவில் பற்றி கற்றுக்கொடுக்கும்போது 6 வண்ணங்கள் இருக்கும், ஒவ்வொரு வண்ணத்திற்கு ஒவ்வொரு பெயர் இருக்கும் என்று சொல்லிக்கொடுப்பதை விட, வண்ண பெயிண்டுகளை கையில் கொடுத்து, அவர்களை வானவில் வரைய சொல்லி, கற்றுக்கொடுக்கும் செய்முறை கல்வி மற்றொரு ரகம். விஷூவல் கல்வியை விட, செய்முறை கல்விக்குதான் ஆற்றல் அதிகம். அதுதான், குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும்.

* ஆசிரியர்களின் கல்வி கற்பிக்கும் திறனும், குழந்தைகளின் கல்வி கற்றல் திறனும் முன்பும், இப்போதும் எப்படி இருக்கிறது?

முன்பை விட, ஆசிரியர்களின் கல்வி கற்பிக்கும் திறன் அதிகரித்திருக்கிறது. இப்போது ஆசிரியர்கள் சிறப்பாக கல்வி கற்றுக்கொடுக்கிறார்கள். குறிப்பாக, வீடியோ காட்சிகள், மாதிரி உபகரணங்களை கொண்டு குழப்பமான பாடங்களையும் எளிதாக கற்றுக்கொடுக்கிறார்கள். அதேபோல குழந்தைகளின் கல்வி கற்கும் ஆர்வமும், அதிகரித்திருக்கிறது. ஆர்வமாக கல்வி கற்கிறார்கள். அதேசமயம், மாணவர்கள்-ஆசிரியர்கள் இவ்விருவரின் கல்வி பயணத்திற்குள், பெற்றோரின் தலையீடும் இப்போது அதிகரித்திருக்கிறது. காரணமில்லாமல் விடுமுறை எடுப்பது, குழந்தைகளுக்கு ஆதரவாக தேர்வுகளை தவறவிடுவது, குழந்தைகளை அடிக்கக்கூடாது, கண்டிக்கக்கூடாது, திட்டக்கூடாது... என நிறைய கண்டிஷன்களை முன்வைப்பது, அவன் படிக்கவில்லை என்றாலும் பராவாயில்லை அவனை கண்டிக்க வேண்டாம் என்பது போன்ற பல தலையீடுகள் அதிகரித்துவிட்டன. இது ஆரோக்கியமான சமூகத்தை கட்டமைக்க உதவாது என்பதையும், தங்களுடைய குழந்தைகளை ஒழுக்கமானவர்களாக வளர்க்க முடியாது என்பதையும் பெற்றோர் மறந்துவிடுகின்றனர்.

* சமீபகால கல்விமுறை, குழந்தைகளுக்கு பாதிப்பை உண்டாக்குகிறதா?

நிச்சயமாக, டிஜிட்டல் பள்ளிகளில் டிஜிட்டல் திரை மூலம் பாடம் நடத்தப்படுவதாலும், வீடுகளில் ஸ்மார்ட்போன் பயன்பாடும் அதிகரித்திருப்பதாலும் குழந்தைகளின் கண் பார்வை சிறுவயதிலேயே பாதிக்கப்படுகிறது. இன்றைய குழந்தைகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் டிஜிட்டல் கல்வி முறைகளே, பாதிப்பான கல்வி முறைகளாக மாறி வருவதை எவராலும் மறுக்க முடியாது.

* எல்லா கல்வி முறையிலும், விளையாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதா?

ஆம்...! இப்போது எல்லா கல்வி முறையிலும், எல்லா பள்ளிகளிலும் விளையாட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஏனெனில் விளையாட்டு அனுபவம், குழந்தைகளின் மன நலம் மற்றும் உடல்நல ஆரோக்கியத்திலும், மூளை வளர்ச்சியிலும் அதிக பங்காற்றுவதால், அதை எல்லா பள்ளிகளும் ஊக்கப்படுத்துகிறார்கள்.

* கல்வி அறிவு இல்லாத பெற்றோர், சர்வதேச கல்வி முறையில் குழந்தைகளை சேர்க்க முடியாது என்ற கருத்து உண்மையா?

இது, பள்ளி நிர்வாகத்திற்கு ஏற்ப மாறுபடும். நிறைய பள்ளிகள், இந்த கருத்தை பொய்யாக்கி உள்ளன. அதேசமயம், சில பள்ளிகள் இந்த கருத்தை உண்மை என நிரூபித்துள்ளன. ஆனால், நிறைய பெற்றோர் தங்களின் குழந்தைகள் மூலமாக கல்வி அறிவு பெற்றிருக்கிறார்கள். ஒருசில பெற்றோர், குழந்தைகள் வாயிலாகவே ஆங்கிலம்-இந்தி மொழி பேசும் பழக்கத்தையும் உருவாக்கிக் கொண்டுள்ளனர்.

* கற்றல் திறன், கற்பித்தல் திறன் சார்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறீர்கள். உங்களுடைய ஆசை என்ன?

குழந்தைகளை, எந்த வகையிலும் பாதிக்காத தொழில்நுட்பங்களை கொண்டு, ஆர்வத்தை தூண்டும் வகையிலான கல்வி முறையை கட்டமைப்பதும், அதற்கேற்ற கற்பித்தல் திறனை வளர்ப்பதும்தான் என்னுடைய ஆசை. இப்போது வரை, ஆய்வின் மூலம் கற்றுணர்ந்த சில நுட்பங்களை பல பள்ளிகளுக்கு சென்று, கற்பித்து வருகிறேன்.

Tags:    

மேலும் செய்திகள்