வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் 'ஆக்சூரியல் சயின்ஸ்'
உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் காப்பீட்டு துறையில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.;
உலக அளவில் காப்பீட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், காப்பீட்டு திட்டங்களை வரையறுக்கும் அதிகாரி களுக்கான தேவையும் அதிகமாகவே உள்ளது.
பள்ளி படிப்புக்குப் பின், பட்டப்படிப்பை தொடர விரும்பும் மாணவர்கள், தங்கள் விருப்பம், திறமையின் அடிப்படையில் அடுத்து எதைப் படிக்கலாம் என தேர்ந்தெடுப்பது நலம்.
மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் படிப்பை தேர்ந்தெடுக்கும்போது மிக கவனமாக செயல்படுவது அவசியம்.
குறிப்பாக, பிளஸ்-2 வகுப்பில் அறிவியல் பிரிவை தேர்ந்தெடுத்து படித்த மாணவர்களில் பெரும்பாலானோர், பட்டப்படிப்பில், மருத்துவம் அல்லது பொறியியல் படிப்பை தேர்ந்தெடுக்கவே விரும்புகின்றனர். ஏனெனில், அந்த இரு படிப்புகளுக்கு மட்டுமே பொருளாதார அடிப்படையில் எதிர்காலம் இருப்பதாக காலம் காலமாக நம்பப்பட்டு வருவது தான் காரணம். எனினும் எல்லோரோலும் மருத்துவப் படிப்பிற்கான இடத்தை பெற முடிவதில்லை; பி.இ., படித்து முடிக்கும் அனைவருக்கும், அவர்கள் நினைத்தபடி வளமான எதிர்காலம் உடைய வேலை கிடைத்துவிடுவதும் இல்லை.
அதே சமயம், பிளஸ் 2-வில் கணிதத்தை ஓர் பாடமாக படித்த மாணவர்கள், `ஆக்சூரியல் சயின்ஸ்' எனப்படும் காப்பீட்டு திட்ட வடிவமைப்பு குறித்த பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு பயில்வதன் மூலம், அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மிகப் பெரிய தொகையை சம்பளமாக பெறக்கூடிய வேலைவாய்ப்பை பெற முடியும்.
உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் காப்பீட்டு துறையில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.
காப்பீட்டு துறை வேலைவாய்ப்பு என்றால், இன்சூரன்ஸ் ஏஜென்ட் அல்லது டெவலெப்மென்ட் ஆபீசர் வேலை மட்டுமே என பலரும் நினைக்கின்றனர். ஆனால், அந்த துறையில், காப்பீட்டு திட்டங்களை வடிவமைத்தல், காப்பீட்டு தொகையை நிர்ணயித்தல், காப்பீடு அல்லது இழப்பீட்டு தொகையை நிர்ணயித்தல் என பல பிரிவுகள் உள்ளன. அவற்றிற்கான நிபுணர்களும் தேவைப்படுகின்றனர். அப்படி காப்பீட்டு துறை சார்பான நுணுக்கமான விஷயங்களை கற்பிக்கும் படிப்பு தான், ஆக்சூரியல் சயின்ஸ். பிளஸ்-2 வில் கணிதம் படித்தவர்கள் மட்டுமின்றி, புள்ளியியல், வணிகக் கணிதம் உள்ளிட்ட பாடங்களை படித்தவர்களும் இப்படிப்பில் சேரலாம்.
உலக அளவில் காப்பீட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், காப்பீட்டு திட்டங்களை வரையறுக்கும் அதிகாரிகளுக்கான தேவையும் அதிகமாகவே உள்ளது.
எம்.எஸ்சி., ஆக்சூரியல் சயின்ஸ் படித்தவர்களுக்கு இத்துறையில் கை நிறைய சம்பளத்துடன் வேலை காத்துக்கிடக்கிறது. இத்துறையில் பி.எச்டி., ஆய்வு படிப்பை முடித்தால் மிக வேகமாக உயர் பதவிகளை அடைவது நிச்சயம்.
பி.எஸ்சி. கணிதம், புள்ளியியல் மட்டுமின்றி, இளநிலை பட்டப்படிப்பில் கணிதம், புள்ளியியல், வணிகக்கணிதத்தை ஒரு பாடமாக படித்தவர்களும் எம்.எஸ்சி., ஆக்சூரியல் சயின்ஸ் படிக்கலாம்.
பிற பட்டப்படிப்புகளைப் போல் அன்றி, குறிப்பிட்ட சில கல்லூரிகள், பல்கலைக்கழகங்களே ஆக்சூரியல் சயின்ஸ் படிப்பை நடத்துகின்றன. அதனால் `ஆக்சூரியல் சயின்ஸ்' பட்டப் படிப்பை எந்தெந்த கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன என்பதை அறிந்து, அப்படிப்பால் கிடைக்கும் வேலைவாய்ப்பு பற்றிய சந்தேகங்களை துறை சார் வல்லுனர்களிடம் கேட்டு தெளிந்த பின், அதில் சேர்ந்து படியுங்கள்..!