சிறுதொழிலில் அசத்தும் குடும்பத்தலைவி

தோட்டக்கலையிலும், மீன் வளர்ப்பிலும் ஆர்வமாக இருந்தவர், இவ்விரண்டையும் ஒன்றிணைத்து புதிய முயற்சியில் இறங்கினார். அதுதான் ‘அக்வாபோனிக்ஸ் தொழில்நுட்பம்'.

Update: 2023-09-24 10:44 GMT

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த ரேகா ரேஷ்மிக், முன்னாள் ஐ.டி. ஊழியர். பொறியியல் பட்டதாரியான இவர், ஐ.டி. துறையில் மென்பொறியாளராக பணியாற்றியவர். கம்ப்யூட்டர் கோடிங், ஐ.டி. கலாசாரம், கணவர் மற்றும் குழந்தை என ஓய்வின்றி ஓடிக்கொண்டிருந்த ரேகாவிற்கு, பிசியான வாழ்க்கையில் இருந்து சின்ன 'பிரேக்' தேவைப்பட்டது. உடனே ஐ.டி. வேலையை ராஜினாமா செய்தார். தன் குழந்தையோடும், கணவரோடும் வீட்டில் ஓய்வெடுத்த ரேகாவிற்கு, பசுமையான சிந்தனை தோன்றியது. தோட்டக்கலையிலும், மீன் வளர்ப்பிலும் ஆர்வமாக இருந்தவர், இவ்விரண்டையும் ஒன்றிணைத்து புதிய முயற்சியில் இறங்கினார். அதுதான் 'அக்வாபோனிக்ஸ் தொழில்நுட்பம்'.

ரேகாவின் ஒருவரி கதையே படுசுவாரசியமாக இருந்ததால், அவரை தொடர்பு கொண்டு முழுகதையையும் கேட்டோம். அதில் முக்கியமான சிலவற்றை தொகுத்திருக்கிறோம். நீங்களும் படித்து ரசியுங்கள்.

* அது என்ன 'அக்வாபோனிக்ஸ்' தொழில்நுட்பம்?

மீன் வளர்ப்பையும், செடி வளர்ப்பையும் ஒன்றாக மேற்கொள்வதைதான் அக்வாபோனிக்ஸ் என்பார்கள். உதாரணத்திற்கு, மீன் வளர்க்கிறோம். மீன் கழிவுகள், தீவனம் அடங்கிய தண்ணீரை தோட்டத்தில் இருக்கும் செடிகளுக்கு ஊற்றி வளர்த்தால், செடிகளுக்கு உரமாகும். அதேசமயம் மீன் வளர்ப்பு குளமும் சுத்தமாகும். அதேபோல தோட்டத்தில் உற்பத்தியாகும் புழு பூச்சிகள், ஒருவகை தாவரங்கள் மீனுக்கு இரையாகும். தோட்டமும் சுத்தமாகும். ஒன்றின் கழிவை மற்றொன்றின் உணவு ஆதாரமாக்கி, அதன் மூலம் இரட்டிப்பு பலன் பெறும் வித்தையைதான் அக்வாபோனிக்ஸ் தொழில்நுட்பம் கற்றுக்கொடுக்கிறது.

* மென்பொருள் பொறியாளரான உங்களுக்கு மீன் வளர்ப்பும், தோட்டக்கலையும் பழக்கமானது எப்படி?

ஐ.டி. வேலைக்கு பிறகு வீட்டில் இருந்தபடியே சிறுதொழில் தொடங்க ஆசைப்பட்டேன். அதற்காக கூகுளில் நிறைய தேடினேன். யூ-டியூப் தளத்தில் சல்லடை போட்டு அலசி பார்த்தேன். அப்படி பழக்கமானதுதான் இந்த அக்வாபோனிக்ஸ் தொழில்நுட்பம். ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் இந்த வித்தையை சர்வ-சாதாரணமாக மேற்கொள்கிறார்கள். கேரளாவின் பல பகுதிகளில் கூட பாரம்பரிய முறையில் இதுபோன்ற தோட்டங்கள் இயங்குகிறது. அத்தகைய தோட்டங்களுக்கு சென்று, மீன் வளர்ப்பையும், தோட்டக்கலையையும் கற்றுக்கொண்டு களத்தில் இறங்கினேன்.

* எப்படி தொடங்கினீர்கள்?

எங்கள் வீட்டின் பின்பகுதியில் சின்ன இடம் இருந்தது. அதில் பள்ளம் வெட்டி, பிளாஸ்டிக் ஷீட்டை விரித்து தண்ணீர் நிரப்பினேன். அதில் தில்லாபியா என்ற நன்னீர் வளர்ப்பு மீன்களையும், மேற்பரப்பில் நன்னீர் கீரை செடிகளையும் வளர்க்க தொடங்கினேன். அதேசமயம் மீதமிருந்த இடத்தில் கீரை வகைகள், புடலங்காய், கிழங்கு வகைகள், சுண்டைக்காய் போன்றவற்றை வளர்த்தேன். மீன் கழிவு தண்ணீர் கீரை வகைகளையும், கிழங்கு வகைகளையும் செழிப்பாக்கின. வெகுவிரைவிலேயே மீன் வளர்ப்பிலும், தோட்டக்கலையிலும் நல்ல லாபம் கிடைத்தது.

* மீன்களுக்கும், கீரைகளுக்கும் வரவேற்பு இருக்கிறதா?

எங்கள் பகுதி மக்களுக்கு மீன் சாப்பிடும் ஆசை வந்தால் என் வீட்டிற்கு வந்துவிடுவார்கள். மீன் குளத்தில் இருந்து அவர்களாகவே, அவர்களுக்கு பிடித்த மீனை பிடித்து, எடை போட்டு, அதற்கான பணத்தை மட்டும் என்னிடம் கொடுத்துவிட்டு செல்வார்கள். அதேபோலதான், கீரை, கிழங்கு வியாபாரமும். வருவார்கள், வேண்டிய அளவில் பறிப்பார்கள். பணத்தை கொடுத்துவிட்டு கிளம்பிவிடுவார்கள். இதுபோக மொத்த வியாபாரிகளிடமும், மீன்களுக்கு வரவேற்பு கிடைத்தது. விழா காலங்களில் ஏலம் முறையிலும் மீனை வாங்க போட்டா-போட்டி நடத்துவர்.

* எத்தனை ஆண்டுகளாக மீன் வளர்க்கிறீர்கள். குடும்ப தலைவிகளுக்கு கற்றுக்கொடுப்பது உண்டா?

கடந்த 4 ஆண்டுகளாக அக்வாபோனிக்ஸ் முறையில் மீன்களையும், கீரை வகைகளையும் வளர்க்கிறேன். நிறைய பெண்கள் என்னிடம் ஆலோசனை பெறுவது உண்டு. பலருக்கும் நான் மீன் பண்ணை அமைத்து கொடுத்திருக்கிறேன். புதிதாக பயிற்சி பெற விரும்பும் பெண்களுக்கு பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறேன். கேரளா மட்டுமின்றி, தமிழகத்தில் இருந்தும் பெண்கள் வந்து, மீன் வளர்ப்பை கற்று செல்கிறார்கள்.

* மென்பொறியாளர், மீன் வளர்ப்பு தொழில்முனைவோராக மாறியதை கணவர் ஏற்றுக்கொண்டாரா?

ஆரம்பத்தில் வீட்டிற்குள் மீன் வளர்ப்பு குளம் அமைக்க, அரசு தரப்பில் பல சிக்கல்கள் எழுந்தன. சில அதிகாரிகள் என் மீது குற்ற நடவடிக்கை எடுக்கும் அளவிற்கும் பாய்ந்தனர். அத்தகைய சிக்கலில் இருந்து என்னை காப்பாற்றியது என் கணவர்தான். சட்ட ரீதியாக அணுகி, உரிமம் பெற்றுக்கொடுத்து, என் ஆசைக்கு முறையான அங்கீகாரம் கொடுத்தார். மேலும் ஓய்வு நேரங்களில் என்னோடு அமர்ந்து பேசி, தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறார்.

* அடுத்தக்கட்ட முயற்சி என்ன?

மீன் குளம், தோட்ட பராமரிப்பு போக மீதமிருக்கும் சின்ன இடத்தில் ஆடு வளர்க்க ஆசைப்படுகிறேன். ஆட்டு கழிவுகள் மீன் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றக்கூடியவை என்பதால், அதையும் தொழில் பட்டியலில் சேர்க்க இருக்கிறேன். அதற்கான ஆயத்த பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்