பிறர் சுமையை விரும்பி சுமக்கும் 'நண்பர்கள் குழு'

கொல்கத்தா குடிசைப் பகுதிகளின் தேவதையாக வலம் வந்து மனித நேயப்பணிகளை உலகமே மலைக்கும் வகையில் சேவை புரிந்து புனிதராய் உயர்ந்து நிற்கும் அன்னை தெரசாவின் திருப்பெயரில் 35 நண்பர்கள் ஒன்று கூடி கால் நூற்றாண்டுக்கும் மேலாக மானுடப் பணிகள் ஆற்றி வருகிறார்கள்.

Update: 2023-05-07 09:45 GMT

அதிலும் குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறன் குழந்தைகளுக்காக ஆண்டுதோறும் அன்னை தெரசா பெயரில் கல்வி நிறுவனங்களில் பயிலும் குழந்தைகள் நலனை மையமாக வைத்து பணிகள் ஆற்றி வருகிறார்கள். பார்வைத்திறன் குறைந்தவர்கள், செவித்திறன் குறைந்தோர், உடல் ஊனமுற்றோர், மனவளர்ச்சி குன்றியோர், எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என சுமார் ஆயிரம் குழந்தைகளைத் தத்தெடுத்து அவர்களின் உடல் நலம், உள நலம், கல்வி மேம்பாடு, அவர்கள் தங்கி பயிலும் நிறுவனங்களின் உள்கட்டமைப்பு மேம்பாடு என ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்திப் பணியாற்றி வருகின்றனர்.

ஆண்டு தோறும் அனைத்துக் குழந்தைகளையும் நகரின் பிரபலமான அரங்கில் ஒன்று கூட்டி அவர்களை ஆட வைத்து, பாட வைத்து போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கி அறுசுவை விருந்தும் வழங்கி வருகின்றனர். அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், சான்றோர்கள், அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் முன்னிலையில் நடைபெறும் அன்னை தெரசா நினைவு பகிர்வு விழா மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மாபெரும் திருவிழா என்பதில் எள்முனையும் ஐயமில்லை.

''இதுவரை 23 ஆண்டுகளாக இத்திருவிழா நடைபெறுகிறது. மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கல்வி உபகரணங்கள், புத்தாடைகள், துணிமணிகள், நடைப்பயிற்சி கருவிகள், கணினிகள், படுக்கை விரிப்புகள், போர்வைகள், நிறுவனங்களுக்கான இன்வெர்டர்கள், வாட்டர் ஹீட்டர், கிரைண்டர், மிக்சி, பிரிட்ஜ், ஒளி, ஒலிக் கருவிகள் என ஆண்டு தோறும் 4 முதல் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உதவி செய்கிறோம்.

அது மட்டுமல்ல இயற்கைப் பேரிடர் காலங்களில் அரசாங்கத்தோடு கரம் கோர்த்து மீட்பு நிவாரணப் பணிகளையும் செய்து வருகிறோம். குஜராத் நிலநடுக்கம் தொடங்கி சென்னை வெள்ளம், தானே, கஜா, ஒக்கி புயல், இலங்கைத் தமிழர் நிவாரணப் பணிகள் என அனைத்திலும் பணியாற்றி உள்ளோம்'' என்கிறார், அதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பப்புராஜ்.

இத்தனை உதவிகளையும் புரியும் இந்த அன்னை தெரசா நண்பர்கள் ஏதோ பெரிய செல்வந்தர்களோ, தொழிலதிபர்களோ இல்லை. மாறாக சிறு தொழில், சிறு வணிகம் புரியும் சராசரி வர்க்கம்தான். ஆனால் நாட்டில் எங்கே யாருக்கு, குறிப்பாக மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு ஏற்படும் இடர்பாடுகளை தமக்கு நேர்ந்ததாக கருதி அவர்களின் துயர் துடைக்க முனைகின்றனர். இந்த நண்பர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கை பணி நெருக்கடிகளுக்கு மத்தியில் சமூக சேவைகளை ஆற்றி வருகின்றனர்.

''எங்களில் சுமார் 30 பேர் தின ஊதியம் பெறுபவர்கள். நாங்கள் இணைந்து பல்வேறு சமூகப்பணிகளை எளிய முறையில் செய்து வருகிறோம். இதற்காக எவரிடமும் கையேந்தாமல் எங்கள் உழைப்பின் பலனால் கிடைக்கும் சம்பளத்தில் ஒரு பகுதியை சேர்த்து மருத்துவம், கல்வி, சமூகம் சார்ந்த தேவைகள், மாற்றுத்திறன் மேம்பாட்டிற்கான தேவைகளை யாருக்கு எப்போது எந்த உதவிகள் தேவையோ அந்த உதவிகளை விரைந்து செய்து வருகிறோம். ஜாதி, சமயம் இன்றி எல்லா நண்பர்களும் இணைந்து செய்வதினால் சமூக சேவகி அன்னை தெரசா பெயரில் இப்பணிகளை தொடர்கிறோம்'' என்றார்.

''மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி செய்வதை விட, அவர்களுக்கு தொழில்பயிற்சி கற்றுக் கொடுப்பதினால் அவர்களது வாழ்க்கையை அவர்களே மேம்படுத்திக் கொள்ள முடியும். இதற்காக கால்மிதியடி தயாரிப்பு, தையல் பயிற்சி, பொம்மை உருவாக்கம், போட்டோகிராபி பயிற்சி, போட்டோ லேமினேசன் பயிற்சி, காகித கவர் தயாரிப்பு, ரோஸ்மில்க்-குளிர்பானம் தயாரிப்பு... போன்ற பயிற்சிகளை கற்றுக்கொடுத்து, அவர்களை தொழில்முனைவோர்களாக மாற்றுகிறோம். மேலும் சிறைத்துறையினரின் உதவியுடன் கைதிகளுக்கும் தொழிற்பயிற்சி வழங்கினோம். சிறை சலூன் கடை அமைப்பது, கைதிகளை கொண்டு ரோஸ்மில்க் தயாரிப்பது போன்ற வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கிறோம்.

யாரேனும் இயற்கையாகவோ, விபத்தில் சிக்கியோ பாதிக்கப்படுவதாக நண்பர்கள், தன்னார்வலர்கள், ஊடகங்கள் மூலமாக எங்களுக்கு தகவல் கிடைக்கும்போது அவர்களுக்கு தேவையான ரத்தம், மாத்திரைகள், செயற்கை உபகரணங்கள், மருத்துவ கட்டணங்கள் வழங்குகிறோம். அண்மையில் ஏழை தொழிலாளர்கள் பழனிவேல், ஐசக் ரத்தின செல்வம் ஆகிய இருவருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொடுத்தோம்'' என்றவர், கொரோனா ஊரடங்கு காலத்திலும் சிறப்பாக சேவையாற்றியதாக சொல்கிறார்.

''கொரோனாவால் உலகமே தடுமாறியபோது எங்களது பணிகளில் தொய்வு ஏற்படவில்லை. யாருக்கெல்லாம் உணவு தேவைப்பட்டதோ அவர்களை தேடிச்சென்று வழங்கினோம். எங்களுடைய அருகாமையில் உள்ள கிராமங்களுக்கு சென்று உணவு பொருட்கள் வழங்கினோம்.

குறிப்பாக வாழ்வாதாரம் இன்றி தவித்த 75-க்கும் மேற்பட்ட பாவைக்கூத்து கலைஞர்களின் குடும்பங்களுக்கு தேவையான பலசரக்கு, காய்கறிகள், பால், பிஸ்கட் பொருட்களை நண்பர்களின் உதவியுடன் கொண்டு சேர்த்தோம். இவர்களின் நிவாரண தேவைக்காக பெட்ரோல் பங்க், பஸ் டாண்ட், பஸ் நிலையங்களுக்கு சென்று முக கவசம் விற்று நிதி திரட்டி உதவினோம்.

இயற்கை பேரிடர் காலங்களில் இந்தியா முழுவதிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது ஒரு பணிகளை செய்து இதன் மூலம் கிடைக்கும் வருவாயை மாவட்ட நிர்வாகம் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணியை செய்து வருகிறோம். குறிப்பாக உதவி தொகை என கேட்காமல், கார் துடைப்பது, செருப்பு துடைப்பது, இரண்டு சக்கர வாகனங்களை துடைப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு, அதன் மூலம் கிடைக்கும் தொகையை அனுப்பி வைக்கிறோம்'' என்று உருக்கமான தகவல்களை பகிர்ந்து கொண்ட ரோஸ் கியூபட் மற்றும் சஞ்சய் குணசிங் ஆகியோர் தொடர்ந்து சேவையாற்ற கிளம்பினார்கள்.

''மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி செய்வதை விட, அவர்களுக்கு தொழில்பயிற்சி கற்றுக் கொடுப்பதினால் அவர்களது வாழ்க்கையை அவர்களே மேம்படுத்திக் கொள்ள முடியும். இதற்காக கால்மிதியடி தயாரிப்பு, தையல் பயிற்சி, பொம்மை உருவாக்கம், போட்டோகிராபி பயிற்சி, போட்டோ லேமினேசன் பயிற்சி, காகித கவர் தயாரிப்பு, ரோஸ்மில்க்-ரஸ்னா தயாரிப்பு... போன்ற பயிற்சிகளை கற்றுக்கொடுத்து, அவர்களை தொழில்முனைவோர்களாக மாற்றுகிறோம்''

Tags:    

மேலும் செய்திகள்