வர்மக்கலையை உயிர்ப்பிக்கும் தம்பதி

கடந்த 20 வருடங்களாக வர்மக்கலை பயின்று வருவதுடன், அதை தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து மீட்டெடுக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார், மதுரானந்தன்.;

Update:2023-06-11 15:10 IST

நாகர்கோவில் மேலசூரங்குடியை சேர்ந்தவரான இவர், எம்.பி.ஏ. பட்டதாரி. இருப்பினும் தமிழர் தற்காப்பு கலையின் ஒரு அங்கமான வர்மக்கலையை பயிற்சி செய்து, அதை ஆராய்ச்சி புத்தகமாக மாற்றும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். இதுபற்றி மதுரானந்தன் சொல்வதை கேட்போம்...

''என்னுடைய அண்ணன் அடிமுறை பயிற்சிக்கு செல்லும்போது, நானும் உடன் செல்வேன். சிலம்பம் சுற்றுவேன். எங்களுக்கு அடிமுறை கற்றுக்கொடுத்த ஆசான், சிலருக்கு நோய் வைத்தியமும் பார்த்து அவர்களை குணப்படுத்துவார். கை-கால்கள் பிசகி இருப்பவர்கள், சுளுக்கு விழுந்தவர்கள், முதுகுவலி உடையவர்கள்... என நிறையபேர் ஆசானிடம் சிகிச்சைக்கு வந்து செல்வார்கள். ஆசானின் கைபட்டதுமே, வலியும், சுளுக்கும் பறந்துபோகும். ஒரு மேஜிக் போலவே அவர் வலிகளை குணப்படுத்துவார். அந்த ஆர்வம், எனக்குள் தொற்றிக்கொள்ள, ஆசானிடம் வர்மக்கலை பயில ஆரம்பித்தேன். அந்த பயிற்சி, பள்ளிப்பருவத்திலேயே தொடங்கிவிட்டது'' என்று வர்மக்கலை பயில ஆரம்பித்தது பற்றி பேசுபவர், வர்மமும் ஒருவிதமான தற்காப்பு கலை என்கிறார்.

''வர்மம் என்பது அடிமுறை தற்காப்பு கலையில் ஒரு அங்கம். உயிர் தங்கியுள்ள இடங்களைத்தான், வர்மம் என்பார்கள். அந்த இடங்களை குறிவைத்து தாக்குவதற்கு, வர்மக்கலை என்று பெயர். மொத்தமுள்ள 126 வர்மங்களில் படு வர்மம், தொடு வர்மம், தட்டு வர்மம், அடங்கல் வர்மம், நோக்கு வர்மம் போன்றவை முக்கியமானவை'' என்று வர்மக்கலைக்கு சிறுஅறிமுகம் கொடுப்பதோடு, அதை விளக்கமாகவும் எடுத்துரைத்தார்.

''படு, தொடு, தட்டு, அடங்கல் ஆகிய நால்வகை வர்மங்களில், படு வர்மமானது மனிதர் மீது ஒரு மாத்திரை அளவில், அதாவது ஒரு செ.மீ. அளவுக்குத் தாக்கினால்கூட, தாக்கப்பட்டவரின் வர்மப் புள்ளியானது, மயக்கம் ஏற்படுதல், சுயநினைவு இழத்தல், கை கால் செயலிழப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். 'தொடு வர்மம்' என்பது உடலில் 96 இடங்களில் உள்ளது. இதில், எதிராளி உடலில் உள்ள வர்மப்புள்ளியை அழுத்துவதன் மூலம், அவரை வீழ்த்த முடியும். சிறு செயலிழப்பு இருக்குமே தவிர, பெரிய பாதிப்புகள் இருக்காது.

தொடுவர்மத்தின் அடுத்த நிலை தட்டு வர்மம். இது, உள்ளங்கை தட்டு, முன்கால் படம், பக்கவாட்டு கால் படம், குதிக்கால் தட்டு, புறங்கால் தட்டு ஆகிய முறைகளில் தாக்குதல் நிகழ்த்துவதாகும். இந்த முறையில் தாக்கும்போது, வர்மப் புள்ளிகளில் அதிர்வை ஏற்படுத்தி, உடலில் பரவச் செய்ய முடியும்'' என்றவர், இத்தகைய தற்காப்பு கலையை, சிகிச்சை கலையாகவும் பயன்படுத்த முடியும் என்கிறார். அதாவது, எந்த புள்ளிகளை அழுத்தி வலி உண்டாக்க செய்கிறோமோ, அதே புள்ளிகளை அழுத்தி வலிகளில் இருந்து விடுபடவும் செய்ய முடியும் என்கிறார்.

''தாக்குவது மட்டுமல்ல, உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதும், வர்மக்கலையின் ஒரு அங்கம்தான். விபத்து போன்றவற்றால் வர்மப் புள்ளிகளில் அடிபட்டு, பாதிக்கப்பட்டவருக்கு இந்த வர்மத்தின் மூலம் சிகிச்சை அளித்து, குணப்படுத்த முடியும். முடக்கு வாதம், கை-கால் செயலிழப்பு, எலும்பு முறிவு, தொடர் சுளுக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினைகள், முதுகு வலி, கழுத்து வலி, விபத்தில் சிக்கியவர்கள்... போன்ற பல நோய்களை வர்மக்கலை மூலம் குணப்படுத்த முடியும்.

சர்க்கரை நோய்க்கு கூட, நிரந்தர தீர்வு இருக்கிறது. வர்ம பகுதிகளை தூண்டி, உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதினால் சர்க்கரை நோயை விரட்டியடிக்கலாம். பார்வை குறைபாடுகளையும் சீராக்கும் சக்தி வர்மத்திற்கு உண்டு'' என்று புது நம்பிக்கை கொடுக்கும் மதுரானந்தன், தன்னுடைய 20 ஆண்டு கால வர்மக்கலை பயிற்சியை, அடிப்படையாக வைத்து ஆராய்ச்சி புத்தகம் எழுதும் பணியையும் தொடங்கி இருக்கிறார். புத்தகம் உருவாக்க பணிகளுக்கு, மதுரானந்தனின் மனைவி நந்தினி உறுதுணையாக இருக்கிறார்.

''கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் வர்மக்கலையில் புகழ்பெற்ற நிறைய ஆசான்கள் உண்டு. ஒவ்வொருவரும், ஒவ்வொரு கலையில் புகழ்பெற்றவர்கள். என்னால் முடிந்தவரை அவர்களை சந்தித்து, அவர்களிடமிருந்து நிறைய கலை நுணுக்கங்களை கற்று வருகிறேன். அதை புத்தகமாக மாற்றும் முயற்சியிலும் களமிறங்கி இருக்கிறேன். இப்போது நாள் முழுக்க பயிற்சி வகுப்புகள், வலி சிகிச்சை சேவைகளில் பிசியாக இருப்பதால், என்னால் புத்தக பணிகளை தொடரமுடியாத சூழலில், என்னுடைய மனைவி நந்தினி புத்தக உருவாக்க பணிகளை கவனித்துக் கொள்கிறார். இந்த புத்தகம், மறைந்துபோன கலையாக கருதப்படும் வர்மக்கலையை பல நூற்றாண்டுகளுக்கு உயிர்ப்புடன் வைத்திருக்கும் என நம்புகிறோம்'' என்றவர், வர்மக்கலையை வெளிநாடுகளிலும் கற்றுக்கொடுக்கிறார். இதற்காக பிரத்யேக யூ-டியூப் தளமும் தொடங்கப்பட்டிருக்கிறது. வர்மக்கலை பற்றியும், அதை தற்காப்பு கலையாக பயன்படுத்துவது குறித்தும், எந்தெந்த நோய் பாதிப்புகளுக்கு எப்படியெல்லாம் குணமாக்க முடியும் என்பதை எல்லாம் யூ-டியூப் வீடியோவாக மாற்றி அசத்துகிறார்.

''தமிழர்கள், தற்காப்பிலும், உடல் ஆரோக்கியத்திலும் சிறப்பானவர்களாக திகழ்ந்திருக்கிறார்கள். ஆனால் காலமாற்றத்தினால் அந்த சிறப்பு திறமைகளை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம். எஞ்சியிருக்கும் திறமைகளையும் இழந்துவிடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்'' என்ற மதுரானந்தனுக்கு மாற்றத்திற்கான மக்கள் விருது, கவுரவ டாக்டர் பட்டம் போன்றவை வழங்கப்பட்டிருக்கின்றன. இவர் வர்மக்கலை மட்டுமின்றி சிலம்ப கலையிலும் திறமையானவர். மாநில அளவிலான சிலம்பப்போட்டிகளில், நிறைய பதக்கங்களை வென்றிருக்கிறார்.

கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் வர்மக்கலையில் புகழ்பெற்ற நிறைய ஆசான்கள் உண்டு. ஒவ்வொருவரும், ஒவ்வொரு கலையில் புகழ்பெற்றவர்கள். என்னால் முடிந்தவரை அவர்களை சந்தித்து, அவர்களிடமிருந்து நிறைய கலை நுணுக்கங்களை கற்று வருகிறேன். அதை புத்தகமாக மாற்றும் முயற்சியிலும் களமிறங்கி இருக்கிறேன்.

Tags:    

மேலும் செய்திகள்