சென்னையில் பரவலாக மழை
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை,
சென்னையில் இன்று பகல் நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால் மாலை நேரத்தில் வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. இரவு 7 மணிக்கு மேலே சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. எழும்பூர், சென்ட்ரல், வேப்பேரி, புரசைவாக்கம், கோடம்பாக்கம், ஈக்காட்டு தாங்கல், மாம்பலம், வடபழனி, கோயம்பேடு, கோடம்பாக்கம், கிண்டி, சைதாபேட்டை, தேனாம்பேட்டை, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
திடீரென பெய்த மழையால், பணி முடிந்து வீடு திரும்பிய பலரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. எனினும் திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.