தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.;

Update:2024-08-06 10:19 IST

சென்னை,

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கடந்த சில நாட்களாக பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கடலூர், ராணிப்பேட்டை, திருவாரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பரவலாக கனமழை காணப்பட்டது.

தற்போது, தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 6 மாவட்டங்களிலும், புதுச்சேரியின் ஓரிரு இடங்களிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை (புதன்கிழமை) முதல் வருகிற 11-ந்தேதி வரையில், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்