உணவு, உரம், பெட்ரோலிய மானியம் ரூ.3.75 லட்சம் கோடி: 28 சதவீதம் குறைவு

மத்திய பட்ஜெட்டில் அடுத்த நிதி ஆண்டில் உணவு, உரம், பெட்ரோலிய மானியத்துக்காக ரூ..3.75 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-02-01 23:38 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

மத்திய பட்ஜெட்டில் அடுத்த நிதி ஆண்டில் உணவு, உரம், பெட்ரோலிய மானியத்துக்காக ரூ..3.75 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது நடப்பு ஆண்டைவிட 28 சதவீதம் குறைவு ஆகும்.

மானியங்கள்

நமது நாட்டில் மானியங்களுக்காக பட்ஜெட்டில் ஒரு பெருந்தொகை ஒதுக்குவது தொடர்கிறது.

அந்த வகையில் நடப்பு 2022-23 நிதி ஆண்டில் உணவு தானியங்கள், உரங்கள், பெட்ரோலிய பொருட்களுக்கான மானியங்கள் ரூ.5.21 லட்சம் கோடி ஆகும். இது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 17 சதவீதம் உயர்வு ஆகும்.

ஆனால் அடுத்த 2023-24 நிதி ஆண்டுக்கான மானியம் ரூ.3.75 லட்சம் கோடியாக குறைக்கப்படுகிறது. இது நடப்பு நிதி ஆண்டுடன் ஒப்பிகையில் 28 சதவீதம் குறைவு ஆகும்.

3 பிரிவிலும் இந்த ஆண்டு மானியம்...

நடப்பு நிதி ஆண்டில் மானியங்கள் சரியாக ரூ.5 லட்சத்து 21 ஆயிரத்து 584 கோடியே 71 லட்சம் ஆகும்.

உணவு தானியங்களுக்கான மானியம் 2021-22 நிதி ஆண்டில் ரூ.2 லட்சத்து 88 ஆயிரத்து 968 கோடியே 54 லட்சம் ஆகும். இது நடப்பு 2022-23 நிதி ஆண்டில் ரூ.2 லட்சத்து 87 ஆயிரத்து 194 கோடியே 5 லட்சமாக குறைகிறது.

ஆனால் உர மானியம் ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்து 758 கோடியே 10 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்து 220 கோடியே 16 லட்சமாக உயர்கிறது.

பெட்ரோலிய பொருட்களுக்கான மானியம் ரூ.3 ஆயிரத்து 422 கோடியே 60 லட்சத்தில் இருந்து ரூ.9 ஆயிரத்து 170 கோடியே 50 லட்சமாக உயர்கிறது.

அடுத்த நிதி ஆண்டில் மானியம் வெட்டு

அடுத்த நிதி ஆண்டில் உணவு தானியங்கள், உரங்கள், பெட்ரோலிய பொருட்களுக்கான மானியங்கள் 28 சதவீதம் குறைந்து ரூ.3 லட்சத்து 74 ஆயிரத்து 707 கோடியே 1 லட்சமாக ஆகிறது.

அடுத்த ஆண்டில் உர மானியம் ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்து 99 கோடியே 92 லட்சமாக இருக்கும். நடப்பு நிதி ஆண்டை விட இது குறைவு.

பெட்ரோலிய பொருட்களுக்கான மானியம், நடப்பு நிதி ஆண்டில் 9 ஆயிரத்து 170 கோடியே 50 லட்சத்தில் இருந்து அடுத்த நிதி ஆண்டில் ரூ.2 ஆயிரத்து 257 கோடியே 9 லட்சமாக குறைகிறது.

உணவுப்பொருட்கள் மீதான மானியம் நடப்பு நிதி ஆண்டில் ரூ.2 லட்சத்து 87 ஆயிரத்து 194 கோடியே 5 லட்சத்தில் இருந்து அடுத்த நிதி ஆண்டில் ரூ.1 லட்சத்து 97 ஆயிரத்து 350 கோடியாக குறைகிறது.

இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்