அதிகரிக்கும் விண்வெளி குப்பைகள்...! எதிர்கால விண்வெளி முயற்சிகளுக்கு பாதிப்பு விஞ்ஞானிகள் எச்சரிக்கை

மிகவும் பெரிய அளவுகொண்ட சுமார் 20,000 குப்பைகள் தற்போது விண்வெளியில் பூமியைச் சுற்றி வருவதாகக் கணித்துள்ளது நாசாவின் சமீபத்திய ஆய்வு ஒன்று.

Update: 2023-04-12 11:10 GMT

Earth.org

லண்டன்

புவியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள வெற்றிடம், விண்வெளி என அழைக்கப்படுகிறது. பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 200 முதல் 2,000 கி.மீ. தொலைவில் பல்வேறு நாடுகள் அனுப்பி வைத்துள்ள செயற்கைக் கோள்கள் இயங்குகின்றன.

தொலைக்காட்சி, இன்டர்நெட் மற்றும் ஜி.பி.எஸ். உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பக் கருவிகள் மனிதனின் பல்வேறு தேவைகளுக்காக உருவாக்கப்பட்டன. அவை தொடர்ந்து இயங்க வேண்டுமானால் பல்வேறு வகையான செயற்கைக் கோள்களும், இதர விண்வெளி ஆய்வுக் கருவிகளும் விண்வெளிக்கு ஏவப்பட வேண்டும். ஒவ்வொரு நாட்டின் ராணுவம், வணிகத்துறை, வங்கிகள் உள்பட அனைத்துப் பணிகளும் செயற்கைகோள்கள் மூலமே இப்போது இயங்குகின்றன.

ரஷியாவால் 1957 அக்டோபர் 4-ல் ஸ்புட்னிக்-1 என்னும் செயற்கைக்கோள் விண்ணுக்கு செலுத்தப்பட்டதன் மூலம் ஆரம்பமானதுதான் விண்வெளி யுகம். செயற்கைக்கோள்களில் பல செயலிழந்து போனபின்னர் அவை விண்வெளியிலேயே குப்பைகளாக மிதக்கத் தொடங்கி விடுகின்றன. அவற்றைத்தான் விண்வெளிக்குப்பை என்று சொல்கிறார்கள்.

மிகவும் பெரிய அளவுகொண்ட சுமார் 20,000 குப்பைகள் தற்போது விண்வெளியில் பூமியைச் சுற்றி வருவதாகக் கணித்துள்ளது நாசாவின் சமீபத்திய ஆய்வு ஒன்று.

விண்வெளியில் சுழன்று வரும் இத்தகைய செயற்கைக்கோள் குப்பைகள் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்துவது ஒருபுறம் இருக்க, செவ்வாய் கிரகம், நிலவு உள்ளிட்ட மனிதனின் அடுத்த புகலிடங்களாக மாறக்கூடிய கிரகங்களைத் தேடிச் செல்லும் விண்வெளி கப்பல்கள் உள்ளிட்டவை அவற்றின் இலக்கை அடைய விண்வெளி குப்பைகள் பெரும் தடையாகவும் மாறக்கூடும் என்று அஞ்சப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

1978 ஆம் ஆண்டில், நாசா விஞ்ஞானி டொனால்ட் கெஸ்லர் விண்வெளியில் பேரழிவு தரக்கூடிய, அடுக்கு சங்கிலி எதிர்வினை பற்றி எச்சரித்தார். இன்று "கெஸ்லர் நோய்க்குறி கோட்பாடு என்று அழைக்கப்படுகிறது. இந்த கோட்பாடு என்பது பூமிக்கு மேலே உள்ள இடம் ஒரு நாள் மிகவும் நெரிசலாக மாறக்கூடும்.

எனவே செயலில் உள்ள செயற்கைக்கோள்கள் விண்வெளியில் சுற்றும் கடந்த கால விண்வெளி ஆய்வுகளின் கழிவுகளால் மாசுபடுகிறது, இது எதிர்கால விண்வெளி முயற்சிகளை மிகவும் கடினமாக்குகிறது என்பதாகும்.

இந்த வருடம் விண்ணில் செலுத்துவதற்காக ஒன்வெப் நிறுவனத்தின் 550 செயற்கைகோள்கள், ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் 3,500 செயற்கைகோள்கள், ஸ்டார்லிங்கின் 12,000 செயற்கைகோள்கள, அமேசான் கியூபர் புராஜக்ட்டின் 3,236 விண்கலங்களையும் அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான் பிரிட்டனைச் சேர்ந்த அறிவியலாளர்கள் விண்வெளி குப்பைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரித்துள்ளனர். உலக நாடுகள் அனுப்பும் செயற்கைகோள்களின் பழுதான பாகங்கள், செயலிழந்த விண்கலன்கள், கைவிடப்பட்ட ஏவுகணை வாகன நிலைகள், விண்கலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட திடப்படுத்தப்பட்ட திரவங்கள், திடமான ராக்கெட் மோட்டார்களில் இருந்து எரிக்கப்படாத துகள்கள் விண்வெளிக் குப்பைகள் என்று குறிப்பிடப்படுகிறது.

தற்போதைய சூழலில் கீழ்புவி வட்டப்பாதையில் 9,000 செயற்கைக்கோள்கள் இருப்பதாகவும் இது 2030-ம் ஆண்டுக்குள் 6,0000-மாக அதிகரிக்கும் என கூறுகின்றனர் பிரிட்டன் அறிவியலாளர்கள். மேலும் இவற்றால் ஏற்பட்டிருக்கும் 100 டிரில்லியன் அளவிலான விண்வெளி குப்பைகள் கீழ்புவி வட்டப்பாதையில் சுற்றி வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

இந்த விண்வெளி குப்பைகள் காலபோக்கில் ஒன்றோடு ஒன்று மோதி பெரிய விபத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள். கடல்நீரை சுத்திகரிப்பது சாத்தியமாகியிருப்பதை போலவே விண்வெளி குப்பைகளை அண்டத்தில் இருந்து வெளியேற்றுவதற்கான பணிகளை எவ்வாறு செய்ய முடியும் என்பது குறித்த அறிக்கையையும் அரசுக்கு அளித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்