இனி இலவசம் கிடையாது.. பயனர்களிடம் ஆண்டு சந்தா கட்டணம் வசூலிக்க 'எக்ஸ்' முடிவு

எலான் மஸ்க்கின் நிறுவனமான எக்ஸ் தனது பயனர்களிடம் ஆண்டு சந்தா கட்டணத்தை வசூலிக்க முடிவு செய்துள்ளது.

Update: 2023-10-18 07:29 GMT

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதும் அதிரடி மாற்றங்களை செய்தார். டுவிட்டர் லோகோவை நீல பறவையில் இருந்து X ஆக மாற்றினார். தற்போது வருவாயை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, பயனர்களிடம் ஆண்டு சந்தா கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், பயனர்களிடம் சந்தா வசூலிக்கும் நடைமுறையை பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்த உள்ளதாகவும், அடிப்படை அம்சங்களுக்கு ஒரு டாலர் (இந்திய மதிப்பில் ரூ.83) ஆண்டு கட்டணம் வசூலிக்க உள்ளதாகவும் கூறியிருக்கிறது.

"நாட் எ பாட்" என அழைக்கப்படும் புதிய சந்தா திட்டத்தின்கீழ், வலைத்தள பதிப்பில் லைக்குகள், மறுபதிவுகள் அல்லது பிற கணக்குகளின் இடுகைகள் மற்றும் புக்மார்க்கிங் இடுகைகளுக்கு பயனர்களிடம் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சந்தா கட்டணம் நாட்டிற்கு நாடு மாறுபடும். முதலில் நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்த சோதனை முயற்சியில், ஏற்கனவே உள்ள பயனர்கள் பாதிக்கப்படமாட்டார்கள். ஆனால் சந்தா செலுத்துவதற்கு சப்ஸ்கிரைப் செய்ய விரும்பாத புதிய பயனர்கள், போஸ்ட்களை பார்க்கவும் படிக்கவும், வீடியோக்களை பார்க்கவும் மற்றும் கணக்குகளை பின்தொடரவும் மட்டுமே முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்